பழைய வரலாற்றுச் சுவடுகளை நாம் அறிகிற போது அதன் வியப்பும், சுவையும் அலாதியாக இருக்கும். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் வாகனத்தில் பயணிக்கின்ற போதும், ஓய்வான நேரங்களில் அமர்ந்து பேசுகின்ற போதும் இந்த வாய்ப்பைப் பல தோழர்கள் பெற்றிருப்பர்.
வரலாற்று நிகழ்வுகள் குற்றாலச் சாரலாய் நம்மைக் குளிர்விக்கும்! 2024 இல் ஆசிரியரின் ஜப்பான் பயணத்தில், அங்குள்ள தோழர்கள் இதுபோன்ற செய்திகளை ஏராளம் கேட்டு மகிழ்ந்தனர்.
பழைய நினைவுகளைத் தன்னுள் தேக்கி வைப்பது என்பது பெரும் ஆற்றலுக்கு உரியது. அது ஒருவரின் தனித்தன்மையை, ஆர்வத்தை, அர்ப்பணிப்பை, நுணுக்கத்தைப் பறைசாற்றுவது ஆகும். அது நம் தோழர்கள் சிலருக்குக் கைவந்த கலையாக இருக்கிறது.
அந்த வகையில் காரைக்குடி சாமி.திராவிடமணி அவர்களைப் பழைய செய்திகளின் பெட்டகம் என்பதோடு, அதன் பதிவுகளையும் ஆவணமாக்கி வைத்திருப்பார். அப்படியான சுவையான தகவல்கள் சிலவற்றை அறிய, ‘விடுதலை’ ஞாயிறு மலருக்காக அவர்தம் இல்லத்தில் சந்தித்தோம்.
வெள்ளித் தோட்டாவை அள்ளி வீசுங்கள்!
அன்றைய காலகட்டத்தில் இன்றைக்கு இருக்கக் கூடிய தஞ்சாவூர் பெரியார் இல்லத்திற்கு எதிரிலுள்ள அரண்மனையில் இரண்டு நாட்கள் மாநாடு நடந்தது.
அப்போதுதான் பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி கொடுக்கப்பட்டது. “வெள்ளித் தோட்டாவை அள்ளி வீசுங்கள்” என ‘விடுதலை’யில் ஒரு கட்டுரையே வந்தது.
அந்தக் காலத்தில் நாலணா, எட்டணா போன்றவை வெள்ளிக் காசாகவே பயன்பாட்டில் இருந்தன. இந்த மாநாட்டு நிகழ்ச்சிக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதா, ராஜகோபால் ஆகியோர் குதிரையில் வந்தனர்.
அந்த நேரத்தில் தஞ்சை மாவட்டத் தலைவராக இருந்தவர் ‘ராணி உணவு விடுதி’ ராஜகோபால். இவரின் உணவகம் தஞ்சை தொடர்வண்டி நிலையம் எதிரில் இருந்தது. இவரின் உணவக விளம்பரம் அடிக்கடி ‘விடுதலை’யில் வரும்.
அதேபோல நாகப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் இருந்த திராவிடர் உணவு நிலைய விளம்பரமும் ‘விடுதலை’யில் வெளிவரும். அதன் உரிமையாளர் எஸ்.ஆர்.ஆறுமுகம். எப்போதும் கருப்புச் சட்டையில் இருப்பார்.
அந்த மாநாட்டிற்குத் தோழர்கள் பெருந்திரளாக வந்திருந்தனர். மாநாடு நடைபெற்ற அரண்மனையில் பெரிய வளைவு (ஆர்ச்) ஒன்று இருக்கும். அதில் நமது தோழர் ஒருவர் எப்படியோ ஏறி, உச்சிக்குப் போய்விட்டார். அப்போது ஊர்வலமாக வந்த தந்தை பெரியார் மீது பூக்களைத் தூவினார். அந்தக் காட்சி இப்போது இனிய நினைவாக இருக்கிறது.
பெரியாரின் வாகனம்!
பெரியாரின் பிரச்சார வாகனங்கள் என்பது அவரின் மற்றொரு இல்லமாகவே இருந்தது. திருச்சி பெரியார் மாளிகையில் நிற்கும் வேன், கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தஞ்சாவூரில் கொடுக்கப்பட்டது.
அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தார். பெரியார் அந்த வாகனத்தைப் பயன்படுத்தும் வரை சாலை வரி செலுத்தத் தேவையில்லை என அரசு சிறப்பு அனுமதி கொடுத்தது. அந்த வேனிற்கான சாவியை தங்கத்தால் வழங்கினார் முதலமைச்சர் கலைஞர்.
ஒருமுறை மும்பைக்கு வேனில் பயணம் சென்ற பெரியார், அதை முடித்துவிட்டு நேராக சிவகங்கைக்கு வந்துவிட்டார். ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் இரா.சண்முகநாதன். ராமலக்குமி ஆகியோரின் மகள் தேம்பாவணி – டாக்டர் கோபாலகிருஷ்ணன் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த இணையர்கள் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.
ஒருமுறை பெரியார் கூட்டத்திற்கு வந்தபோது இரா.சண்முகநாதன், என்.ஆர்.சாமி இருவரும் காரில் முன் செல்ல, நான் பெரியாருடன் வேனில் பயணம் செய்தேன். அப்போது எனக்குச் சிறு வயது. வேனில் முன்புறம் இமயவரம்பன், மகாலிங்கம் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அந்தச் சமயத்தில் கடும் வெப்பமாக இருந்ததால், பெரியாருக்கு விசிறி எடுத்து வீசினேன். பெரியார் மறுத்துவிட்டார்.
எங்கள் தந்தையார் என்.ஆர்.சாமி “மோரிஸ்” என்கிற இங்கிலாந்து நிறுவன கார் வைத்திருந்தார். எம்.எஸ்.சி.3344 என்பது வண்டி எண். மாவட்டம் முழுவதும் நடைபெறும் கூட்டங்களுக்கு இந்தக் காரில் தான் பயணம் செய்வார்கள்.

எனது ஆதரவு!
திருச்சியில் 1967 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட முதல் பெரியார் சிலையின் போது, தந்தை பெரியாரும், அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணாவும் அலங்கரிப்பட்ட வாகனத்தில் வந்தார்கள்.
மிகப்பெரிய ஊர்வலம் அன்று நடைபெற்றது. மாலை நடைபெற்ற கூட்டத்தில் காமராஜரும் கலந்து கொண்டார். அந்தச் சமயத்தில் “எனது ஆதரவு” எனத் தலைப்பிட்டு, ‘விடுதலை’யில் பெரியார் தலையங்கம் எழுதினார்.
அதில் “தோசையைத் திருப்பிப் போட்டுவிட்டேன்” எனக் குறிப்பிட்டு எழுதினார். தோழர்கள் சிலர் குழப்பம் அடைந்தனர். எனக்கும் கூட தயக்கம் இருந்தது.
உடனே எனது தந்தையார் என்.ஆர்.சாமி அவர்களிடம் இதுகுறித்துக் கூறியபோது, “பெரியார் எதைச் செய்தாலும் ஒரு பொருள் இருக்கும்” என்றார். அதன் பிறகுதான் தமிழ்நாட்டின் வரலாறே மாறியது என்பதை நாம் அறிவோம்!
ஆட்டுக்கறி பிரியாணி!
1970 ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி “உண்மை” இதழ் திருச்சி பெரியார் மாளிகையில் தொடங்கப்பட்டது. அன்று இரவு அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆசிரியர் திருமணமும் பெரியார் மாளிகையில் தான் நடைபெற்றது. பெரியார் ஆட்டுக்கறி பிரியாணி ஏற்பாடு செய்திருந்தார். அந்த விருந்தில் நானும் கலந்து கொண்டேன்.
1970ஆம் ஆண்டு நடைபெற்ற சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் தீர்மானங்களை “நவமணி” எனும் பத்திரிகை திரித்து வெளியிட்டது. ஆசிரியர் அவர்கள் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றம் அப்பத்திரிகையைக் கண்டித்தது.
1973 ஜூலை 7, 8 இல் நடைபெற்ற சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டு ஊர்வலம் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் வந்தபோது, ‘தீபம்’ பத்திரிகை ஆசிரியர் நா.பார்த்தசாரதி (ஆர்.எஸ்.எஸ்.தலைவர்) தலைமையில் 50 பேர் கொண்ட குழு பிரச்சினை செய்ய வந்தனர்.
தோழர்களைப் பாதுகாப்பாகத் திடலுக்கு அனுப்பிவிட்டு, தினத்தந்தி பத்திரிகை அலுவலக வாசலில் காரின் மீது ஏறி நின்று, ஜனசங்க ஆட்களைப் பார்த்து ஆசிரியர் கடுமையாகப் பேசினார்.
திடீரென வந்த பெரியார்!
1958 காலகட்டம் என நினைக்கிறேன்.
எங்கள் வீடு கள்ளுக்கட்டி பின்புறம் உள்ள சு.ராம வீதியில் இருந்தது. அன்றைய தினம் தீபாவளி. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அன்றைய தினம் வீட்டில் அனைவருமே கருப்பு உடையில் இருந்தோம்.
அன்றைய தினம் திருச்சியில் இருந்த பெரியார் திடீரென எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார். சில மணி நேரங்கள் இருந்துவிட்டு, பிறகு புறப்பட்டுச் சென்றார். அந்தக் காலத்தில் பெரியார் வாகனத்தின் உட்புறம் மரக்கட்டைகளால் செய்யப்பட்டிருக்கும்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 21 நாட்கள் எங்கள் வீட்டில் தங்கி, ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்துள்ளார்.
அதேபோல எம்.ஆர்.ராதாவும் 10 நாட்கள் தங்கி, தினம் ஒரு ஊரில் கூட்டத்தில் பேசுவார். சென்னை, தேனாம்பேட்டையில் இருந்த எம்.ஆர்.ராதா வீட்டிற்கு வழக்குரைஞர் சண்முகநாதன், என்.ஆர்.சாமி ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன்.
புதுமையான திருமணம்!
1966 டிசம்பர் 19, 20 காரைக்குடி, காந்தி தியேட்டரில் காங்கிரசை ஆதரித்து திராவிடர் கழக மாநாடும், அடுத்த நாள் சமதர்ம மாநாடும் நடைபெற்றது. அந்த மாநாட்டில் எங்கள் சகோதரி தமிழரசி – ஜெயராமன் திருமணம் நடைபெற்றது.
அந்தச் சமயத்தில் சுயமரியாதைத் திருமணம் செல்லாது. அக்னி குண்டம் ஏற்படுத்தி தீ வளர்க்க வேண்டும் என்பார்கள். எனது தந்தையார் என்.ஆர்.சாமி ஒரு மண் சட்டியில் தீ வளர்த்து, ராமாயணம், மகாபாரதம் என ஒரு புராணப் பெயர்களைத் தாளில் எழுதி, அந்த நெருப்பில் போட்டு கொளுத்தச் சொன்னார். அது அப்போது பெரும் பேசு பொருளாக மாறியது.
ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் எனது தந்தை என்.ஆர்.சாமி செயலாளர். வயது குறைவாக இருந்த சண்முகநாதன் தலைவர். அப்போது அவர் மாணவராக இருந்தார். ஒரு மாணவரைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே பெரியார் அப்படி செய்தார்.
12 வயதில் சிறைச்சாலை!
1948இல் தமிழ்நாடு நீங்கலாக இந்தியத் தேசப்பட எரிப்பு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. ஆனால் முதல் நாளே பலரையும் கைது செய்துவிட்டார்கள்.
எனக்கு அப்போது 12 வயது. தேசப்படத்தையும், தீப்பெட்டியையும் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு கொப்புடைய அம்மன் கோயில் அருகே நின்றுகொண்டிருந்தேன். இதைக் கவனித்த காவலர்கள் என்னைக் கைது செய்து, மிதிவண்டியில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
ஆசிரியர் ‘அவியல் அகப்பையர்’ என்கிற புனைப் பெயரில் விடுதலையில் எழுதுவார்கள். ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் பங்குபெற்று பெரியார் சிறையில் இருந்தபோது, “கூண்டுக்குள் சிங்கம்” என தலைப்பிட்டு ‘விடுதலை’யில் நாட்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு வெளிவரும்”, எனப் பல்சுவை நிகழ்வுகளை சாமி.திராவிடமணி சிறப்பாகக் கூறினார்.
