பெரியார் இயக்கத்தில் வந்திங்கே கூடுங்கள்!!

 

கும்மியடி பெண்ணே கும்மியடி! – இந்தக்
குவலயம் கேட்கவே கும்மியடி!!
கும்மியடி பெண்ணே கும்மியடி! – பெரியார்
கொள்கை மலரவே கும்மியடி!!

தாயென முந்தியே வந்தோமே! – இந்தத்
தாரணி ஆண்டுமே நின்றோமே!!
நோயென வந்த தனியுடமை – அதில்
நுடங்கித்தான் விட்டது நம்முரிமை!!

(கும்மியடி)

உரிமைகள் மீட்கவே கும்மியடி! – இந்த
உலகையும் மாற்றவே கும்மியடி!!
பிரிவினை நீக்கவே கும்மியடி! – சாதி
பேதங்கள் போக்கவே  கும்மியடி!!

(கும்மியடி)

ஆணுக்கே நாமும் அடிமையென்றான் – எரியும்
அடுப்பிலே பூட்டியே அடக்கிவைத்தான்!!
பேணையும் ஈறையும் தேடவைத்தே – நம்
பிள்ளைக்கும் நம்மைப் பணியவைத்தான்!!

(கும்மியடி)

(உரிமைகள்)

பெரியார் அய்யாதான் வந்தபின்னே! – நாம்
பெற்றோமே கல்வி உரிமைகளை!!
சரிக்குச் சரியாக வேலைகளில் – நாமும்
தரத்தினால் வென்றோமே போட்டியிலே!!

(கும்மியடி)

(உரிமைகள்)

ஆட்டுக்கும் வாலை யளந்தவனை – நாம்
ஆராய்ந்தே தூரத்தில் தள்ளிவைப்போம்!
கேட்டுக்குக் காரணம் யாதென்றே – நாம்
கேள்விக் கணைகளால் துளைத்தெடுப்போம்!!

(கும்மியடி)

(உரிமைகள்)

கைகட்டும் காலமும் போனதடி! – கல்வி
கற்று நிமிர்கின்ற காலமடி!!
வாய்கட்டும் காலமும் போனதடி! – இனி
வானைத் தொடுகின்ற நேரமடி!!

(கும்மியடி)

(உரிமைகள்)

ஏழை எளியவர் ஏற்றமுற – இங்கு
எல்லோர்க்கும் எல்லாமும் வேண்டுமடி!
காளையர் கன்னியர் யாவருமே – வந்து
களத்தினில் நின்றாலே ஆகுமடி!!

(கும்மியடி)

(உரிமைகள்)

சாதி மதங்கள் இல்லையென்றே – பெரியார்
தந்த கொள்கையில் சேருங்கடி!
ஏதில்லை பேதமும் என்றுசொன்ன – பெரியார்
இயக்கத்தில் வந்திங்கே கூடுங்கடி!!

(உரிமைகள்)

(கும்மியடி)

– பாவலர் சுப.முருகானந்தம்
மாநிலச் செயலாளர் , பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

(குறிப்பு: பெண்களுக்கு இடையிலான கும்மிப் பாட்டு)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *