“அகஸ்தியர் எனும் புரளி” என்ற பெயரில் நூலாசிரியர் மூ.அப்பணசாமி எழுதியுள்ள நூல் நாடோடியாக – நாடற்ற இனமாக இருந்த ஆரியர்கள் இந்திய துணைக் கண்டத்திற்குள் நுழைந்து, அங்கு வாழ்ந்திட்ட வடஇந்திய தொல்குடி மக்களை அடிமைப்படுத்திய வரலாற்றை விரிவாகக் கூறுகிறது.
‘ஆரிய மயமாக்கல்’ என்ற திட்டத்தோடு நுழைந்திட்ட ஆரியர்கள் தென்இந்திய பகுதியில் நுழைவதற்குத் தடையாய் இருந்த விந்திய மலையை அகஸ்தியர் தன் காலால் அமுக்கி தாழச் செய்து, ஆரியர்கள் தென் இந்தியாவிற்குள் பரவி நிலை பெற்றதைத் தக்க முறையில் எடுத்துக் கூறுகிறது.
அகஸ்தியர் என்ற புராணக் கதை – ஆரியர்களின் கற்பனை என்று நிறுவுகிறார்.
ரிக் வேதத்தில் ‘அகஸ்தியர்’ என்ற பெயர் தொடங்குகிறது. இவரது ஆயுட்காலம் 14,000 ஆண்டுகளுக்கு மேல் என்று புராணம் கூறுவதைக் குறிப்பிட்டு, “அகஸ்தியர்” என்பதை புரளி என்ற பொருத்தமான சொல்லால் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
புரட்டு என்பது பொய்மை. புரளி என்பது உலகெங்கும் பரவிடக் கூடியது. எனவே, புரளி என்றே நூலாசிரியர் பெயரிட்டுள்ளார்.
திராவிடர்களை அடிமைப்படுத்த ஆரியர்கள் உருவாக்கிய அகஸ்தியர் எனும் கற்பனை குறித்து 1920ஆம் ஆண்டிலேயே சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் சிவராஜா பிள்ளை (இலங்கையைச் சேர்ந்தவர்) எழுதிய “Agstiya in Tamil Land” எனும் ஆங்கிலப் புத்தகத்தில் “சல்லி சல்லியாக” நொறுக்கி இருப்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
ஆரிய மயமாக்கலுக்கு எழுதப்பட்ட கட்டுக் கதையே “அகஸ்தியர்” என்பது என்று தந்தை பெரியார் ‘குடிஅரசு’ இதழில் வெளியிட்ட கருத்துகளோடு, ஆய்வறிஞரும், மார்க்சிய சிந்தனையாளரும் ஆகிய டி.டி.கோசாம்பி ஆகியோரின் கருத்துகளை ஆதாரமாக்கி எழுதியுள்ளார்.
தென் இந்தியாவினை ஆரிய வசமாக்க ஆரியர்கள் செய்திட்ட முயற்சியின் தொடக்கமே அகஸ்தியர் என்று நிறுவுகிறார்.
சிந்துவெளி, சிவகளை, கீழடி என பல தொல்லியல் ஆய்வு முடிவுகளைக் கொண்டு திராவிட நாகரிகத்தின் தொன்மைச் சிறப்பு – ஆரிய எதிர்ப்பு என்ற தளத்தில் அரிய தகவல்கள் – ஆய்வுகள் கொண்டு இந்நூலை நூலாசிரியர் உருவாக்கி உள்ளார்.
சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அணிந்துரை வழங்கியுள்ளார். உயிர் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலின் விலை ரூ.95.
ஆரியம் விட்ட கரடி – “அகஸ்தியர் எனும் புரளி” எனும் அறிஞர் மூ.அப்பணசாமி எழுதிய நூல் ஆரிய மாயையை அழித்திடும் அரிய நூல்.
திராவிடர்களுக்கு இந்நூல் கவசமாய்த் திகழும் படியுங்கள் -பரப்புங்கள்.
