பவுத்த, சமண அறிஞர்களை ஒழிக்க உருவான கற்பனைப் பிறப்பே சாணக்கியன்!

கட்டுரை, ஞாயிறு மலர்

வரலாற்று ஆதாரம் இல்லை

நந்த வம்சம் முடிவிற்கு வந்து மவுரிய பேரரசை சந்திர குப்த மவுரியர் உருவாக்கினார். கி.மு.360 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் காலகட்டத்தில் சாணக்கியர் என்று ஒருவர் வாழ்ந்தார் என்றோ, அவர் சந்திர குப்த மவுரியருக்கு தலைமை ஆலோசகராகவும், அவரை வழி நடத்தினார், அவருக்கு உதவினார் என்பதற்கோ எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. தற்போதுள்ள சாணக்கியர் பற்றிய கதைகள்,  குபதர் காலத்தில்  அதாவது பவுத்த சமணங்கள் அழிந்துகொண்டு இருந்த காலகட்டம் – வேத மரபை குப்தர்கள் தூக்கிப் பிடித்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை. 9ஆம் நுற்றாண்டு முதல் 12ஆம் நுற்றாண்டு வரையிலான அனைத்து பவுத்த, சமணக் குறிப்புகள் மற்றும் ‘முத்ராராக்ஷசம்’ போன்ற சமஸ்கிருத நாடகங்களில் வேண்டுமென்றே சாணக்கியா என்ற பெயர் சேர்க்கப்பட்டு அதோடு சந்திரகுப்தரையும் இணைத்துவிட்டார்கள்.

மதங்களின் போட்டி மற்றும் அரசியல் தேவைகள்

இந்திய அளவில் மிகச்சிறந்த அரச வம்சத்தை முதல் முதலாக உருவாக்கியது சந்திரகுப்த மவுரியர் ஆவார். அவர் உருவாக்கிய மவுரியப் பேரரசு மத்திய ஆசியா, கீழை தேசம், இந்தியப் பெருங்கடல் நாடுகளில் புகழ்பெற்றது.

இவ்வளவு புகழ்வாய்ந்த பேரரசை நிறுவியதற்கு பார்ப்பனர்களின் ஆலோசனையே காரணம் என்று புராணங்கள் போட்டி போட்டுக் கதை புனைந்தன.

பவுத்தர்கள்: சந்திரகுப்தரின் பேரன் அசோகரை பவுத்தத்தின் காவலராகப் போற்றிப் பேசினர்.

சமணர்கள்: சந்திரகுப்தர் தனது இறுதிக்காலத்தில்  சமணத்தைத் தழுவி ஆடைகளைத் துறந்து நடைபயணமாக இன்றைய தெற்கு கருநாடகவில் உள்ள மலைக்குகை ஒன்றில் நீண்ட நாள் வாழ்ந்து பின்னர் பட்டினி கிடந்து உயிர் துறந்தார்.

சுங்கமித்திரம், சுங்கவம்சம் வரை வேதமரபு உருவாகவே இல்லை. பவுத்தர் காலத்தில் முளைவிட்டுக் கொண்டு இருந்த வேதமரபை அவரது பவுத்தமே துடைத்தெறிந்துவிட்டது.

சமண, பவுத்தத்தை ஒழிப்பதற்காகவே…

ஆகவே, இந்திய வரலாற்றில் பவுத்தமும், சமணமும் கோலேச்சிய நிகழ்வை மறைக்க பார்ப்பனர்கள் தங்களுக்கென ஒரு கதையை உருவாக்கினர். சந்திரகுப்தரின் வெற்றிக்கு ஒரு பார்ப்பனர் (சாணக்கியர்) தான் காரணம் என்றும், அவரே அர்த்தசாஸ்திரத்தை எழுதிய கவுடில்யர் என்றும் அடையாளப்படுத்தினர்.

அர்த்த சாஸ்திரம் நூலானது கி.பி.600களிலிருந்து கி.பி.900 வரையிலான காலகட்டத்தில் எழுதப் பட்டதற்கான சான்றுகள் அதிலிருந்தே கிடைக்கின்றன. அர்த்த சாஸ்த்திரத்தில் சொல்லப்படும் ரோமானிய அசுரபியா என்பது அக்காலகட்டத்தில் ரோமானியப் பேரரசுகளின் மன்னர்களான மூன்றாம் லியோ (717–741), அய்ந்தாம் கான்ஸ்டன்டைன் (741–775), நான்காம் லியோ (775–780), ஆறாம் கான்ஸ்டன்டைன் (780–797) போன்றோர் புழக்கத்திற்கு விட்ட நாணயங்கள் குறித்து எழுதியுள்ளார்கள்.

‘சூள வம்சம்’

சீனப் பட்டுப்பாதையின் மாற்றம் குறித்து யுவாங் சுவாங் கூறியவைகள் குறித்து அதில் உள்ளது. இவைகளே அர்த்தசாஸ்திரம் என்பது இன்றிலிருந்து 1000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது என்று வலுவான சான்றுகளாக உள்ளது.

அர்த்த சாஸ்திரக் குறிப்புகளின்படி அவரது காலத்தில் இலங்கையை ஆட்சி புரிந்த பொலன்னறுவையின் முதலாம் பராக்கிரமபாகு என்ற மன்னர்தான் முதல் முதலாக அர்த்த சாஸ்திரம் குறித்த குறிப்புகளை மேற்கோள் கட்டியுள்ளதாக அவரது ஆட்சிகாலத்தில் எழுதப்பட்ட ‘சூளவம்சம்’ என்ற நூல் குறிக்கிறது.

இந்நூல், கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்களைக் கூறுகிறது. இதில் பிந்தைய கால அரசர்களின் அரசவை குறிப்புகள், நிர்வாகம் மற்றும் அரசியல் தொடர்பான தகவல்கள் உள்ளன.இதில் தான் அர்த்தசாஸ்திரம் தொடர்பான குறிப்புகளும் காணக்கிடக்கிறது

இலங்கையில் பொலன்னறுவையில் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பிக்கு (துறவி) அர்த்த சாஸ்திரத்தைப் பற்றி அதிகம் பேசி உள்ளார். அவர் அர்த்தசாஸ்திரம் குறித்து மன்னர்களுக்கு விளக்கினார். அவரது பெயர் கவுடல்யர் என்று ‘சூளவம்சம்’ கூறுகிறது.

இலங்கை பவுத்த துறவிகள் பலர் வணிகர்களோடு சேர்ந்து கீழை நாடுகளுக்குப் பயணப்படுவார்கள். அவர்கள் தங்களிடம் ஆலோசனைகளைக் கேட்கும் வணிகர்களுக்கு வணிக நுணுக்கம், நிதி மேலான்மை குறித்து ஆலோசனை கூறுவார்கள். இதனை பலர் தொகுத்து வைத்துள்ளனர்.

பாகியான்

மூன்றாம் நூற்றாண்டில் இந்தியத் தீபகற்பத்திற்கு வந்த பாகியான் என்ற துறவி தனது பவுத்த நாடுகளின் குறிப்புகள் (A Record of Buddhistic Kingdoms அல்லது Fo-kwo-ki). என்ற நூலில் வணிகர்கள் நிதி மேலான்மை குறித்து பவுத்த துறவிகளிடம் ஆலோசனை கேட்டதாக தனது பயண அனுபவமாக குறிப்பிடுகிறார்.

இதன்படி அர்த்தசாஸ்திரம் என்பது ஒருவர் எழுதிய நூல் அல்ல, குறிப்பாக சாணக்கியர் எழுதிய நூல் அல்ல, இது வணிகர்களுக்கும், அரசர்களுக்கும் பவுத்த துறவிகள் கூறும் ஆலோசனைகளின் தொகுப்பு என்பது புலனாகிறது.

சந்திர குப்தனுக்கு சாணக்கியர் என்ற கதைக் கரு எப்படி உருவாகியது என்றால் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சந்திரகுப்தரும் அலெக்சாண்டரும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். நந்த வம்சத்தின் நந்த மன்னரின் சிறந்த தளபதியாக திகழ்ந்த சந்திரகுப்தர் அலக்சாண்டரை சந்தித்தாகவும் கிரேக்க குறிப்புகள் கூறுகின்றன.

சாணக்கியரை சந்திரகுப்த மவுரியரோடு கோர்த்துவிட அலெக்சாண்டர் மற்றும் அவரது ஆசிரியரான அரிஸ்டாட்டிலை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டது பார்ப்பனரியம்.

அலெக்சாண்டருக்கு அரசியல் கல்வி

அலெக்சாண்டரின் தந்தையும், மாசிடோனியாவின் மன்னருமான இரண்டாம் பிலிப்பால் ரோமிலிருந்து மாசிடோனியாவிற்கு பெரும் மரியாதையோடு அழைக்கப்பட்டவர் அரிஸ்டாட்டில். அப்போது அலெக்சாண்டருக்கு வயது 12. சுமார் 4 ஆண்டுகள் அரிஸ்டாட்டில் அலெக்சாண்டருக்கு நிர்வாகம், போர், உளவியல் மற்றும் விவசாயம் தொடர்பான கல்வியை போதித்தார்.

ஏற்கெனவே மிகவும் புத்திசாலியும், உடனடியாக எந்த ஒரு முடிவையும் எடுக்கும் இளைஞராக இருந்த அலெக்சாண்டருக்கும் அரிஸ்டாட்டில் சிறந்த ஆசிரியாக விளங்கினார்.

இது தொடர்பாக அலெக்சாண்டர் தனது தளபதிகளிடம் அடிக்கடி கூறியுள்ளார். இன்றைய கந்தாகாரில் நடந்த போரின் வெற்றியைத் தொடர்ந்து சிந்துநதியைக் கடந்து வரலாற்று சிறப்பு மிக்க ஹைடஸ்பாஸ் போரை அலெக்சாண்டர் நடத்துகிறார்.

சாணக்கியன் என்பது கட்டுக்கதையே!

அதில் பேரஸ் தோல்வியுற்ற பிறகு அலெக்சாண்டர் குறித்து எங்கும் அதிகம் பேசப்படுகிறது. இதன் மூலம் இளம் அலெக்சாண்டரின் பின்னால் அரிஸ்டாட்டில் என்ற ஒருவர் இருந்தார் என்றதுதான் பிற்காலத்தில் சந்திரகுப்த மவுரியருக்கு ஒரு சாணக்கியன் என்ற கட்டுக்கதைப் பாத்திரம் உருவாக காரணமாக இருந்தது.

மேலும் வரலாற்றில் பல புனைக்கதைகளில் இளம் மன்னருக்கு ஒரு முதிய வயது ஆலோசகர் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

சந்திரகுப்தர்-சாணக்கியர் உறவு என்பது உலகெங்கிலும் உள்ள தொன்மங்களில் காணப்படும் ஒரு பொதுவான கதை வடிவம் (Narrative Trope) ஆகும். திறமையான இளைஞன் மற்றும் அவனது புத்திசாலியான வழிகாட்டி. என்று கொள்ளலாம்.

இதற்கு எடுத்துக்காட்டாக மேற்கு நாடுகள்: பிரிட்டனின் தொன்மமான ஆர்தர் மன்னர் மற்றும் சூனியக்காரன் மெர்லின்.

யாருமற்ற குமாரபாலன் அரசரானார்

இந்தியக் கதைகளில் அரபுப் படையெடுப்பாளர் களுக்கு எதிராக பப்பா ராவல் அரசனுக்கு ஹரித் ரிஷி என்ற யோகி வழிகாட்டினார் என்றும், சமண நூல்களில் குஜராத்தின், ஆச்சாரிய ஹேமச்சந்திரர் என்ற ஆசான், யாருமற்ற குமாரபாலன் என்ற இளைஞனைக் கண்டறிந்து, அவனுக்குக் கல்வி புகட்டி, அரசராக்கினார் என்று கூறுகின்றன.

தக்காணம் (14ஆம் நூற்றாண்டு): விஜயநகரப் பேரரசை நிறுவிய ஹக்கா மற்றும் புக்கா ஆகியோருக்குச் சைவ முனிவர் வித்யாரண்யர் வழிகாட்டினார்.

கிழக்கு ஆசியா: குப்ளாய் கான் 13ஆம் நூற்றாண்டில் ஃபாக்பா லாமாவிடம் ஆலோசனை நாடினார்; பின்னர் வந்த தலாய் லாமாக்கள் மங்கோலிய அரியணையை அங்கீகரித்தனர்.

இளம் இளவரசர்: டெலெமாக்கஸ். ஒடிஸியஸின் மகன்; அவரது தந்தை நீண்ட போரில் இருக்கும்போது, நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் இளையவர்.

முதிய ஆலோசகர்: மெண்டர். ஒடிஸியஸின் உண்மையுள்ள நண்பர் மற்றும் நம்பிக்கைக்குரியவர். ஒடிஸியஸ் போருக்குச் செல்லும்போது, தனது மகன் டெலெமாக்கஸை வழிகாட்டவும், கல்வி கற்பிக்கவும் இவரிடம் ஒப்படைத்தார்.

இளம் ராஜா: எட்டாம் ஹென்றி மன்னர் (King Henry VIII). அதிகாரம், உணர்ச்சி மற்றும் தன்னம்பிக்கை மிக்கவர், ஆனால் அரசியல் மற்றும் அரசாட்சி குறித்த நுணுக்கங்களில் ஆழமான அனுபவம் இல்லாதவர்.

முதிய ஆலோசகர்: தாமஸ் கிராம்வெல் (Thomas Cromwell) புத்திசாலித்தனம், இராஜதந்திரம் மற்றும் அரசியல் விவேகத்தால் அசுர வேகத்தில் உயர்ந்தவர். கர்தினால் வோல்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஹென்றியின் நெருங்கிய மற்றும் நம்பகமான ஆலோசகராக மாறினார்

அயர்லாந்து இளவரசி: பிடில்மருக்கு  முதிய ஆலோசகர்: பிரேவ்ஹார்ட் (Braveheart). இவர் ஃபிடில்மரின் அறிவார்ந்த வழிகாட்டி மற்றும் அவளை ஒரு நீதிபதியாக (Dálaigh) மாற்றியவர்.

உலகெங்கிலும் மன்னர்களைப் புகழும் போது அவருக்கு ஒரு சிறந்த ஆலோசகர் இருந்தார் என்று அவர் ஆலோசனையின் படி செயல்படுத்துகிறார் என்று உள்ளது.

சாணக்கியரின் புராணக் கதை ஒரு புனைவு

ஒரு பார்ப்பன அறிஞர் தன்னுடைய மூளை பலத்தால் அநியாயத்தை வீழ்த்தி, சிறப்பான ஒரு ஆட்சியை ஏற்படுத்த சந்திரகுபத மவுரியரை அரியணையில் அமர்த்தியதன் மூலம், பார்ப்ப்னர் மூளை வலிமை  அரசரையே என்றென்றும் வழிநடத்தும் என்பதை நிலைநிறுத்துவதே இதன் நோக்கம்.

இந்திய வரலாற்றில் நேர்மையான எத்தனையோ ஆட்சியாளர்கள் இருந்த போதும் அமித்ஷா அரசியல் சாணக்கியர் என்று கூறுகின்றனர்.

இதற்கு ராஜகோபாலாச்சாரியை முதல் முதலாக அரசியல் சாணக்கியர் என்று கூறினார்கள் அதன் பிறகு அமித்ஷாவைக் கூறுகிறார்கள்.

சமூகநீதியின் குரல்வளையை நெறித்தவர் இராஜாஜி

ராஜகோபாலாச்சாரி எந்த தேர்தலிலும் போட்டி இடாமலேயே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சமூகத்திற் கான சமூக நீதியின் குரல்வளையை நெறித்தவர் என்பது வரலாறு அதே போல் தற்போது அமித்ஷா வெளிப்படையாகவே ஹிந்து முஸ்லீம் பிரிவினையை தேர்தல் பரப்புரையாகவே செய்துவருகிறார்.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நூல்களும் இதழ்கள் அதிகம் வெளிவந்த போது ‘சாணக்கிய நீதி’ என்ற ஒன்றை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதி வெளியிட்டார்கள் பார்ப்பனர்கள். அது வெகுஜன ஊடகம் வசம் சென்ற பிறகு தொலைக்காட்சித் தொடர்கள், நூல்கள் மற்றும் நிர்வாக மேலாண்மை  தொடர்பான உரைகளில் சாணக்கியரைப் கொண்டு வந்து அவரை இந்தியாவின் மிகபெரிய ஆளுமைக்கான ஆலோசகர் என பார்ப்பனர்களும், ஊடகங்களும் கொண்டாடுகின்றன.

பார்ப்பனர்களின் அதிகார மய்ய ஆசையின் விழைவே சாணக்கியன்

ஆனால், அவர்கள் கொண்டாடுவது ஆவணப் படுத்தப்பட்ட வரலாற்று நபரை அல்ல; அது ஒரு வசதியான கற்பனை. இந்தக் கற்பனைக் கதை, பார்ப்பன அறிவைச் சடங்குகளிலிருந்து, அதிகாரத்தின் மய்யத்திற்கு மீண்டும் கொண்டு வந்து நிறுத்தும் நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டது.

மதம் அதிகாரத்தை விரும்புகிறது, அதிகாரம் ‘புனிதத்’ தன்மையை விரும்புகிறது.  மடங்கள் அரச ஆதரவை நம்பி உள்ளன; அரசர்கள் மத குருமார்களின் அங்கீகாரத்தை நம்பி உள்ளனர்.

பார்ப்னர்கள் மன்னுக்கும் பொன்னும் அடிமையானவர்கள் இல்லை என்று கூறுவர். ஆனால், அவர்கள்  மடங்களை பெரும் மன்னராட்சி பீடமாக வளர்க்கின்றனர். எடுத்துக்காட்டு: சங்கரமடம். அரசையே ஆட்டிப்படைக்கும் அமைப்புகளை உருவாக்குகின்றனர். எடுத்துக்காட்டு: ஆர்.எஸ்.எஸ்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *