சென்னை, நவ.14 ‘சென்னை ஒன்’ செயலியில் தலா ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி, மெட்ரோ, மாநகர பேருந்து, ரயிலில் ஒரு முறை சலுகை பயணம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில், மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க வசதியாக ‘சென்னை ஒன்’ செயலி கடந்த செப்.22-ஆம் தேதி தமிழ்நாடு அரசு தொடங்கி வைத்தது.
இந்த செயலியில் அனைத்து பொது போக்குவரத்து பயணத்துக்கான பயணச்சீட்டு பெறும் வசதி இருப்பதால், பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், இந்த செயலியை ஊக்குவிக்கும் வகையில், புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பிஎச்அய்எம் எனப்படும் பீம் மற்றும் நேவி செயலியை பயன்படுத்தி யுபிஅய் வாயிலாக பணம் செலுத்துவோர், சென்னை மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளின் முதல் பயணச்சீட்டை ஒரு ரூபாய் மட்டுமே செலுத்தி முதல் பயணம் செய்ய முடியும்.
அதாவது, விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயிலில் செல்வதற்கு ‘சென்னை ஒன்று’ செயலியை பயன்படுத்தி ‘பீம் மற்றும் நேவி’ செயலிகள் வாயிலாக பயணச்சீட்டு எடுத்தால் ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தினால் மட்டும் போதும். இதே போல, மாநகர் பேருந்துகளில் பயணச்சீட்டு எடுப்பவர்களுக்கும் இது பொருந்தும். மின்சார ரயிலில் பயணிப்பவர்களும் இந்த சலுகையை பயன்படுத்த முடியும். ஆனால், இந்த சலுகை ஒரு பயணச்சீட்டு ஒரு முறை மட்டும் தான் கிடைக்கும். இந்த சலுகை நேற்று (13.11.2025) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பிஜேபி ஆளும் மகாராட்டிரா மாநிலத்தில் தொடர் விபத்துகள்
புனே, நவ.14- புனேயில் பிரேக் பழு தான கன்டெய்னர் லாரி அடுத்தடுத்து 20 வாகனங்கள் மீது மோதிய சங்கிலி தொடர் விபத்தில் 8பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர்.
கன்டெய்னர் லாரி
மராட்டிய மாநிலம் சத்தாராவில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு மும்பை நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் நேற்று (13.11.2025) வந்து கொண்டு இருந்தது. மாலை 5.30 மணி அளவில் புனே நெவ்லே மேம்பாலத்தை நெருங்கியபோது அங்குள்ள செல்பி பாயிண்ட்’ அருகே திடீரென கன்டெய்னர் லாரியின் பிரேக் பழுதானது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிகெட்டு ஓடி அடுத்தடுத்து அந்த சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதியது. கன்டெய்னர் லாரி மோதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாத வாகனங்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டு பல்டி அடித்தன. அடுத்தடுத்து சுமார் 20 வாகனங்கள் மீது மோதிய கன்டெய்னர் லாரி கடைசியாக மற்றொரு கன்டெய்னர் லாரி மீது மோதி நின்றது. அப்போது 2 லாரிகளுக்கு நடுவே கார் ஒன்று சிக்கி அப்பளம் போல நொறுங்கியது. மேலும் 2 கன்டெய்னர் லாரிகளும், நடுவில் சிக்கிய காரும் தீப்பிடித்து எரிந்தது. கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்த இந்த எதிர்பாராத கோர விபத்தால் அந்த சாலையே கலவரக்காடாக மாறியது.
8 பேர் பலி
இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள், சரக்கு வாகன ஓட்டுநர் கிளீனர் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.
