சென்னை, நவ.14– சென்னையில், பல ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தகங்களில் மேற்கூரை இல்லாமல் இருப்பதாக பயணிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
ரயில் நிலையம்
சென்னையில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு ரயில்களை பயன்படுத்தும் பயணிகள் வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் மூலம் வந்து, தங்கள் வாகனங்களை அங்கு நிறுத்திவிட்டு ரயில் ஏறி செல்கின்றனர். பின்னர் மாலையில் பள்ளி, கல்லூரி மற்றும் பணி முடிந்து தங்கள் வாகனங்களை எடுத்து செல்கின்றனர். இங்கு, தனியார் வாகன நிறுத்தகங்களை விட கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களுக்கு மிக அரு கிலும் உள்ளது. இதனால் ஏராள மான பயணிகள் ரயில்வே வாகன நிறுத்தகங் களை பயன்படுத்தி வருகின்றனர்.
ரயில்வே வாகன நிறுத்தகங்களை பொறுத்தவரையில், ஒப்பந்தம் கோரும்போது, மேற்கூரை, கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டு, ஒப்பந்தம் வழங்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், சென்னையில் உள்ள பல ரயில்வே வாகன நிறுத்தகங்களில் முறையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேற்கூரை இல்லை
அந்தவகையில், சேத்துப் பட்டு, மாம்பலம், பரங்கிமலை உள்பட பல்வேறு ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிடங்களில் மேற்கூரை இல்லாமலும், சென்டிரல் போன்ற சில ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் இடம் முழுவதும் மேற்கூரை அமைக்கப்படாமலும் உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் வெயில் மற்றும் மழையில் வீணாகி வருகிறது. மேலும், கடும் வெயிலால் சில இருசக்கர வாகனங்கள் பஞ்சராகும் நிலையும் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களை எடுத்துச்செல்லும் உரிமையாளர்கள் கடும் அவதியடைகின்றனர்.
காசு வாங்கினால் போதுமா?
இதுகுறித்து ரயில் பயணிகள் சிலர் கூறியபோது, ‘பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் வாகன நிறுத்தகங்களை அமைத்துள்ளது. ஒப்பந்தம் கோரி தனியாரிடம் ஒப்படைத்த பின்பு ரயில்வே அதிகாரிகள் அங்கு சென்று அனைத்து வசதிகளும் உள்ளதா? என ஆய்வு செய்வார்களா? இல்லையா? என்பது கேள்வி குறியாக உள்ளது. காலையில் வீட்டில் இருந்து வாகனங்களை சுத்தம் செய்து எடுத்து வந்து வாகன நிறுத்தகத்தில் விட்டு சென்றால், மாலையில் தூசு படிந்தும், பறவைகள் எச்சமிட்டும் படுமோசமாக கிடக்கிறது.
காசு வாங்கினால் மட்டும் போதுமா?… அதற்கான பாதுகாப்புகள் வேண்டாமா? ரயில்வே நிர்வாகம் வாகன நிறுத்துவதற்கான ஒப்பந்தம் வழங்கும் நபர்கள் சரியான முறையில் மேற்கூரை உள்பட அடிப்படை வசதிகள் செய்து தந்த பிறகே ஒப்பந்தம் வழங்கிட வேண்டும், அதன்பின், அனைத்து வாகன நிறுத்தங்களிலும் அனைத்து வசதிகளும் சரியான முறையில் உள்ளதா என்பதை ரயில்வே உயர் அதிகாரிகள் (திடீர்) ஆய்வு மேற்கொள்ள வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளனர்.
