இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நிறுத்தம் சாத்தியமானதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேலிய இராணுவத்தினர் காசாவில் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவது உறுதியாகியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேலின் தொடர்ச்சியான அத்துமீறல்கள் மற்றும் தாக்குதல்கள், பாலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
இஸ்ரேலிய ராணுவம் காசாவின் தெற்குப் பகுதியான கான் யூனிஸ் பகுதியில் ஒரு ரகசிய ‘மஞ்சள் கோட்டை’ எல்லைக்கோடு போலப் பயன்படுத்துகிறது.
சாலையில் போடப்படும் கோடு போல இது கண்ணுக்குத் தெரியாது. மாறாக, இது செயற்கைக்கோள் படங்களில் மட்டுமே தெரியும் ஒரு எல்லை.
இந்த கோட்டைக் கடக்கும் பாலஸ்தீன மக்கள், எல்லை தெரியாமல், இஸ்ரேலிய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
போர் நிறுத்தத்தின் காரணமாக இஸ்ரேலியப் படைகள் இந்தக் கோட்டிற்குப் பின்னால் நகர்ந்துள்ளதாகத் தெரிகிறது. அங்கு சுமார் 40 இராணுவ நிலைகள் இருப்பது செயற்கைக்கோள் படங்களில் தெரிகிறது. ஆனால், இந்த ரகசிய எல்லை எங்குள்ளது என்று தங்களுக்குத் தெரியாததால், பாலஸ்தீனர்கள் தொடர்ந்து மரண அபாயங்களை எதிர்கொள்வதாக வேதனை தெரிவிக்கின்றனர். காசா பகுதியின் பாதிக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை இஸ்ரேல் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், 58% காசா நிலப்பரப்பு இன்னமும் இஸ்ரேலின் பிடியில்தான் இருக்கிறது.
துப்பாக்கிச்சூடு ஒரு பக்கம் இருக்க, மறுபுறம் பாலஸ்தீன மக்களின் வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
ஆஸ்கார் விருது பெற்ற ‘நோ அதர் லேண்ட்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற மசாபர் யாத்தா பகுதியில், பல பாலஸ்தீனிய வீடுகளையும், கால்நடைக் கொட்டகைகளையும் இஸ்ரேலியப் படைகள் இடித்துத் தள்ளியிருக்கின்றன. ஆயுதம் தாங்கிய இராணுவம் மற்றும் காவல்துறையினர் துணையுடன் இந்த அத்துமீறல் நடந்திருக்கிறது.
ஹெப்ரான் வடக்கில் உள்ள பெய்ட் உம்மார் நகரில், சுமார் 38,000 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தை அபகரிக்க இஸ்ரேலியப் படைகள் இராணுவ உத்தரவை பிறப்பித்துள்ளன. இந்த நிலப்பகுதிகள் பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் திராட்சைத் தோட்டங்கள், பாதாம் மற்றும் ஆலிவ் மரங்களைக் கொண்டிருக்கின்றன.
காசாவில் உள்ள அரசு ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இஸ்ரேல் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் மீறியுள்ளது:
அக்டோபர் 10 முதல் நவம்பர் 10 வரை, இஸ்ரேல் குறைந்தது 282 முறை சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது.
இந்த மீறல்கள் வான்வழித் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் நேரடித் துப்பாக்கிச் சூடு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒட்டகம் கூடாரத்தில் நுழைந்தால் என்னாகும்? அந்த நிலைதான் பாலஸ்தீனத்துக்கு இப்போது!
அமெரிக்கா இதில் தலையிட்டு, போர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதெல்லாம் ‘புஷ்வாணம்’ ஆகி விட்டது!
இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் இடம் பிடித்ததே ஓர் அத்துமீறல்தான்! பாலஸ்தீனம் என்பது பெரும்பாலும் அரபு முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் வாழ்ந்த பகுதியாகும். யூதர்கள் எண்ணிக்கை சொல்லும்படியாக ஏதுமில்லை.
யூதர்கள் தங்களுக்கென்று நாட்டை உருவாக்க முடிவு செய்தார்கள். 1897இல் சுவிட்சர்லாந்தில் நடந்த மாநாட்டில் தான் அது தீர்மானிக்கப்பட்டது. இதன் பின்னர்தான் அய்ரோப்பாவில் இருந்து ஆயிரக்கணக்கான யூதர்கள் பாலஸ்தீனத்திற்குக் குடியேறினர்.
யூதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க பாலஸ்தீனர்கள் எதிர்க்க ஆரம்பித்தனர். இது இயல் பானதே!
தொடக்க முதல் பாலஸ்தீனத்தை ஆதரித்து வந்த இந்தியா – இப்பொழுது இஸ்ரேல் பக்கம் பாசக் கரங்களை நீட்டிக் கொண்டு வந்து விட்டது.
ஆதிக்கத்தின் பக்கம் தானே ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் நிற்கும்!
போர்களை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட தோற்றுவிக்கப்பட்ட அய்.நா.வோ சப்த நாடியும் ஒடுங்கி, அப்படி ஓர் அமைப்பு இருப்பதாகவே தெரியவில்லை!
இனியொரு யுத்தம் உலகளவில் தோன்றினால் அணு ஆயுத யுத்தமாக மாறி உலக அழிவை முடிவு செய்யும் – எச்சரிக்கை!
