ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பார்ப்பனப் ‘பெருமக்கள்’ என்பவர்கள், சில ஆங்கில ஊடகங்கள் மற்றும் புதிய புத்தகங்கள், ஆய்வுகள் என்று மகுடமிட்டு, பழைய கற்பனை, ஆரியக் கலாச்சார பெருமைகளைப் பரப்பி, திராவிட நாகரிகத்திற்கு முன்பே அவர்களும், அவர்களது ‘‘சமைக்கப்பட்ட மொழியான’’ பேச்சு வழக்கில் இல்லாது, அருகி, குறுகிப் போன சமஸ்கிருதமும் இருந்ததாகப் புத்துயிர் அளித்து, ‘‘இல்லாத பெருமைகளை’’ச் செயற்கை ஆய்வு, ஆராய்ச்சிமூலம் பரப்புரை செய்யும் திட்டமிட்ட விஷம வேலைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும், சுயமரி யாதை இயக்கமும், பகுத்தறிவாளர்களும் இந்தப் ‘‘புரட்டு – ஓர் இமாலயப் புரட்டு’’ என்று மக்கள் மத்தி யில், சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாகப் பரப்புரை செய்து வருவதோடு, பற்பல சான்றாவணங்களைக் கொண்ட மறுப்பு ஆய்வு நூல்களையும் வெளியிடத் தவறுவதில்லை.
என்றாலும், திட்டமிட்டே இத்தகைய தவறான தகவல்களை (‘Disinformation Campaign’) பரப்பி வரும் பணியைத் தொடர்ந்து செய்து, நம்மவர்களின் மூளையில் விலங்கு போடும் பணியில் சளைக்காமல் ஈடுபட்டு வருகிறார்கள்.
கட்டுக்கதைகள், புராணக் கற்பனைகளையும் – பாரதம், இராமாயணம் போன்றவற்றையும் நடந்த வைகளாகவே, வரலாறுகளாகவே சித்தரிக்கும் புரட்டு வேலையைச் செய்கிறார்கள்.
அதுபோல, மதங்கள், சடங்குகளைத் தத்துவங்களாக (Philosophy) ஆக்கிக் குழப்புகிறார்கள்.
போலி விஞ்ஞானத்தை (Pseudo Science), அறிவியல் விஞ்ஞானமாகச் (‘Science’) சித்தரித்து, ‘ரசவாத’ப் பித்தலாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
ஆளுநர் ரவி என்ற ஆர்.எஸ்.எஸ். பரப்புரையாளர், ‘அகஸ்தியர்’ என்ற ஒரு புராணக் கதாநாயகனை உண்மையாளராக, உயரிய இடத்தை அவருக்கு அளித்து, ஆரியத்தின், பண்பாட்டுப் போதை மருந்தை தமிழ்நாட்டில் ‘‘விற்பனை’’ (Marketing) செய்ய முயன்று மூக்குடைந்து மூலையில் தள்ளப்பட்டுள்ளார்.
பல அறிஞர்கள் வெகுண்டெழுந்து வீறுநடையுடன், வித்தக ஆய்வினை செய்து, அவரது முயற்சியைக் கருகச் செய்தனர்!
இப்போது சர்.சி.பி.இராமசாமி அய்யரின் உற வுக்காரரான ஓர் அம்மையார், மகாபாரதத்தை நடந்த வரலாறு என்றுஆக்கிக் காட்டி, ஒருவகை புதிய தரவு – ஆய்வு என்று அம்முயற்சியைத் தொடங்கி உள்ளார்.
‘இனமலர்’ நாளேடு இதனை ‘‘‘மகாபாரதம்– கதையல்ல நிஜம்’ – அதிகாரப்பூர்வமாக நம்பிக்கையூட்டுகிறார் நந்திதா கிருஷ்ணா’’ என்று ஒரு கதையைத் தனது 3 ஆம் பக்கத்தில் (13.11.2025) கட்டவிழ்த்துவிட்டுள்ளது!
‘‘மகாபாரதம் – கதையல்ல நிஜம்: ஆதாரப்பூர்வமாக நம்பிக்கையூட்டுகிறார் நந்திதா கிருஷ்ணா!’’
சிந்துவெளி மக்கள் குதிரையை அறியாதவர்கள், சிந்துவெளியில் மகாபாரதத்துக்கான சான்றுகள் இல்லை என கூறப்படும் நிலையில், சி.பி.ஆர்., இந்தியவியல் ஆய்வு நிறுவன இயக்குநர் நந்திதா கிருஷ்ணா, கடந்த ஆறாண்டுகளுக்கு முன், ஒரு சுடுமண் சிற்பம் குறித்து எழுதிய கட்டுரை, தற்போது இணையதளத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:
உங்களின் கட்டுரை பற்றி சொல்லுங்கள்?
கடந்த ஆறாண்டுகளுக்கு முன், ஹாங்காங்கில் உள்ள ஒரு கலைப்பொருள் விற்பனையாளர் ஜெர்மி பைன், சுவரில் மாட்டும் சுடுமண்ணாலான அலங்கார புடைப்பு சிற்பத்தின் புகைப்படத்தை, மின்னஞ்சலில் அனுப்பி, அதன் முக்கியத்துவம் பற்றி கேட்டிருந்தார். அதுகுறித்த கட்டுரைதான் அப்போது பிரபலமானது.
அந்த சிற்பத்தின் சிறப்பம்சம் என்ன?
ஜெர்மி பைன் அந்த சிற்பத்தை பல ஆண்டு களுக்கு முன், நேபாளத்தில் வாங்கியதாக தெரிவித்தார். 7.5 செ.மீ., உயரம், 9 செ.மீ., அகலம் உள்ள அதில், நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் ஒருவரும், அருகில் ஒருவர் கையை நீட்டி ஏதோ சொல்வது போலவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது. தேரின் சக்கரம், ஆரங்களுடன் உள்ளது. தேரோட்டியின் அருகில் இருப்பவர், இரண்டு அம்பராத்துாணிகள் எனும் அம்புக்கூடைகளுடன் மகாபாரதக் காட்சியை முன்னிறுத்துகிறது.
இது போன்ற சித்திரங்களும், சிற்பங்களும் நிறைய கோவில்களில் உள்ளன; காலண்டர்களில் கூட உள்ளனவே. அதில் என்ன சுவாரஸ்யம்?
அந்த சிற்பத்தின் பின்புறத்தில், ஒரு ஓட்டை யிட்டு, அதிலிருந்து கனிமத்தை எடுத்து, ஆக்ஸ்போர்ட் ஆய்வகத்துக்கு அனுப்பி, ‘தெர்மோ லுாமினென்சென்ஸ்’ எனும் ஒளி வெப்பவியல் ஆய்வு செய்துள்ளனர். அதன் காலம், பொ.ஆ.மு., 1,600 முதல் 300 வரை என அந்த ஆய்வகம் வரையறுத்துள்ளது. அதாவது, தற்போதிலிருந்து 2,300 முதல் 3,600 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட தாக இருக்கலாம்.
அதில் ஆச்சர்யப்பட என்ன உள்ளது?
அந்த சிற்பம் கிடைத்த இடம் நேபாளம். அதில் உள்ள உருவங்கள் வரையறுப்பது பாரதப் போரை; அதன் காலம், 3,600 ஆண்டுகள். அது, சிந்துவெளி நாகரிகத்தின் இறுதி காலம்.
அதாவது, மகாபாரத கதை, ஒரு சிற்பமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது என்றால், அது குறித்த தகவல்கள் படிப்படியாக பல செவி வழியாக காலம் கடத்தப்பட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் சிந்துவெளி மக்கள், மகாபாரதத்தை அறிந்திருக்க வேண்டும்.
எப்படிச் சொல்கிறீர்கள்?
சிற்பம் கிடைத்த இடத்தின் அருகில் தான், மகாபாரதம் குறிப்பிடும் இந்திரபிரஸ்தா எனும் டில்லி, பன்பிரஸ்தா எனும் பானிபட், சோன்பிரஸ்தா எனும் சோனிபட், தில்பிரஸ்தா எனும் தில்பட், வியாக்பிரஸ்தா எனும் பாக்பட் ஆகியவை உள்ளன.
அதனால், மகாபாரத சிற்பம் என்பதை உறுதி செய்ய முடியுமா?
இல்லை. மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாக கிருஷ்ணர் வருவார். அவர், நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் பயணிப்பார். அர்ஜுனன் இரண்டு அம்பராத்துாணிகளை வைத்திருப்பார். மேலும், அர்ஜுனனின் தேரில் பூட்டிய குதிரைகளுக்கு சைப்யன், சுக்ரீவன், மேகபுஷ்பன், பலஹகன் என்ற பெயர்கள் உண்டு.
மேலும், யுத்தத்தின் போது தன் உறவினர்களை நோக்கி, அம்பு எய்த மாட்டேன் என கூறுவதும், அதைத் தொடர்ந்து பகவத் கீதை துவங்குவதும் அறிவோம். அதற்கு ஆதாரமாக, இந்த சிற்பத்தில் இரண்டு அம்பராத்துாணிகள் இருந்தாலும், அதை வைத்திருக்கும் நபர் வில்லேந்தவில்லை; அவர் கையை நீட்டி உள்ளார்.
குதிரைகள் இழுக்கப்படுவதால், பின் முழங்கால்கள் மடிந்து, நிலை நிறுத்துகின்றன. இதனால், இந்த சிற்பம் மகாபாரத காட்சி தான் என்பதை உறுதியாக சொல்லலாம்.
சரி… அவர்கள் அர்ஜுனனும், கிருஷ்ணரும் என்பதை உறுதி செய்ய, வேறு என்ன ஆதாரம் உள்ளது?
பொதுவாக, தாடியுடன் கூடிய ஹரப்பா மனிதனின் சிற்பத்தில், நெற்றியில் ஒரு பட்டம் கட்டப்பட்டிருக்கும். அதாவது, மன்னருக்கான அடையாளமாக அது கருதப்படுகிறது. இந்த சிற்பத்திலும், ஒரு நெற்றிப் பட்டம் உள்ளது. அதனால், அவர்கள் அதிகாரம் மிக்கவர்கள் என அறியலாம்.
இது போன்ற சிற்பமோ, தேரோ சிந்து வெளியில் கிடைக்கவில்லையே?
அது பழைய கதை. மத்திய தொல்லியல் துறையின் அகழாய்வு இயக்குநர் சஞ்சய்குமார் மஞ்சுள், உத்தர பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் செய்த அகழாய்வில், இதே போன்ற ஆரமுள்ள சக்கரத்துடன் சிறிய தேரை கண்டெடுத்தார். இதன் காலம், 3,800 முதல் 4,000 ஆண்டுகள் வரை இருக்கலாம் என கூறப்பட்டது. இது போன்ற தேரைப் பற்றிய குறிப்பு, ரிக் வேதத்திலும் உள்ளது.
அதனால் ஆச்சர்யப்பட்ட நான், அந்த கட்டு ரையை எழுதினேன். அதை, பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் கடந்த 2019, நவம்பர் 15ல் நடந்த இந்திய கலை மற்றும் வரலாற்று மாநாட்டிலும் வாசித்து, ஆய்வாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தேன். அந்த கட்டுரை தான், தற்போது இணையத்தில் வலம் வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
(‘தினமலர்’, 13.11.2025)
ஏதோ சிற்பம், சித்திரம் கிடைத்துவிட்டதாம்! குதிரை கள் பூட்டிய தேரை வைத்து உடனே ‘‘பாரத புராணத்தை – பவுராணிகராகி’’ இந்த அம்மையார் பரப்ப முயலுகிறார்!
இதுபோன்ற முயற்சிகளுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, தந்தை பெரியாரும், பல ஆய்வாளர்களும் வெளியிட்டு, மறுப்புரை தந்தும், திட்டமிட்டு விடாப்பிடியாக, ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால், அது மெய்யாகிவிடும் என்று நினைக்கிறார்கள்!
மகாபாரதத்தில் கீதை என்பதே தொடக்கத்தில் இல்லாத, இடைச்செருகல் (interpolation) என்பதை நாம் மட்டுமல்ல, மிகப்பெரிய அளவில், இந்தியா ஒப்புக்கொண்ட தர்மானந்த கோசாம்பி போன்றவர்களும் விரிவாகவே விளக்கியிருக்கிறார்கள்!
பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி, 28 ஆம் பதிப்பு கண்ட, நாம் எழுதிய ‘‘கீதையின் மறுபக்கம்’’ என்ற ஆய்வு நூலின் முதல் அத்தியாயத்திலேயே, ‘‘பாரதம், நடந்த கதை அல்ல’’ என்பதை விளக்கியுள்ளோம்! அப்படியே அதனை இங்கே தருகிறோம்.
பாரதம் நடந்த கதையா?
மகாபாரதம் நடந்த கதையல்ல; அது ஒரு கற்பனைதான் என்பதற்குப் பல்வகையான ஆராய்ச்சி அறிஞர்களின் ஆய்வுகளும், கருத்துரைகளும் நோக்கத்தக்கனவாகும்.
(1) வேத கால இலக்கியங்களில் கவுரவர்கள்தான் குறிப்பிடப் படுகிறார்கள்; பாண்டவர்களைப்பற்றிய குறிப்பேதும் இல்லை. எட்வர்ட் வாஷ்பர்ன் ஆப்கின்ஸ் என்ற மகாபாரத ஆராய்ச்சி அறிஞரின் கூற்றுப்படி, பிரமாணங்களிலோ, சூத்திரங்களிலோ கூட அவர்களைப்பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.
இதுபற்றி ஆராய்ச்சி அறிஞர் மாக்ஸ் முல்லரின் கருத்து:
“வேத கால இலக்கியங்களில் பாரதவர்கள், குரூஸ் என்ற கவுரவர்கள் பெயர்கள் அடிக்கடி வருகின்றன. ஆனால், பாண்டவர்கள் பெயரோ வரவே இல்லை. பாணினியின் இலக்கணத்திலும்கூட ‘பாண்டு’ என்ற பெயரோ, ‘பாண்டவர்கள்’ என்ற பெயரோ வரவே இல்லை. கவுரவர்கள், பாரதவர்கள் ஆகியோரை எப்படி வரிசைப்படுத்தி ஆதரவு தருவது என்ற விதி முறைகளைப்பற்றி ஆப்கின்ஸ், மாக்ஸ் முல்லர் ஆகிய இருவரும் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள்.”
இதிலிருந்து தெரிவதென்ன? பாணினியின் காலத்தில் – அதாவது கி.மு.5-ஆம் நூற்றாண்டில் – பாண்டவர்கள் பற்றிய குறிப்பேதும் இல்லை என்பதே!
(2) பாரதவர்களின் அரசரான சுதாஸ் என்பவ ருக்கும், இக்காலத்து ரவி நதிக்கரையான அக்கால பாருஷணி நதியின் கரையில் அமைந்த 10 அரசுகளின் கூட்டாட்சிக்கும் நடைபெற்ற ஒரு போர் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறது.
சிறு அளவில் நடைபெற்ற இந்தப் போர் அதில் குறிப்பிடப் படும்போது, தேசிய அளவில் – ஏன், பன்னாட்டளவில் என்று கூடக் கூறவேண்டும் – கவனத்தை ஈர்த்த மகாபாரதப் போர் பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லாதது அதிசயம் அல்லவா? இந்தப் போர் நடைபெற்றிருந்தால், நிச்சயம் ரிக் வேதத்திலோ அல்லது வேறு வேத கால இலக்கியங்களிலோ குறிப்பிடப்படாமல் இருந் திருக்க முடியுமா? என்பது ஆராய்ச்சியாளரின் கேள்வியாகும்.
டி.டி.கோசாம்பி அவர்கள் எழுதிய ‘பண்டைய இந்தியா அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு’ எனும் தமிழாக்க நூலில் மகாபாரத காவியத்தின் காலத்தைப்பற்றி நுணுகி ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ள கருத்துகளைக் காண்போம்.
முற்காலத்தில் தோன்றியிருந்த இச்சிறு நகரங்களில், டில்லி, மீரட் குருநிலத்தில் எழுந்த இரண்டு இந்திய மரபின்மீது அழிக்கமுடியாத அறிகுறிகளைப் பதித்துச் சென்றன. இருந்தாலும், காசி நகரே இறுதியாக ஒரு புண்ணியத் தலமாகியதுடன், இன்றும் பிராமணியத்தின் உறைவிடமாகவும் நிலைபெற்றுள்ளது. பஞ்சாபையும், உத்தரப்பிரதேசத்தையும் பிரிக்கும் எல்லைப் பகுதி வரலாற்றுக் காலங்களில் போர்த்துறைத் தந்திரங்களுக்கு முக்கியமாக விளங்கியது. இன்று இந்தியத் தலைநகராக விளங்கும் டில்லி, சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அத்தகுதியைப் பெற்று வந்திருக்கிறது. தொன்மைக் காலத்திலிருந்தே குருக்ஷேத்திரத்திலுள்ள பானிப்பட்டில் நடைபெற்ற நிச்சயமான முடிவுகளைக் கொண்ட பல போர்கள் நாட்டின் வடக்குப் பகுதி முழுவதற்குமான ஊழாற்றலை உறுதிப்படுத்தின. இந்தியாவின் பெருங்காவியமான மகாபாரதத்தில் அடங்கிய அடிப்படை விஷயம், குருநிலத்தில் நிகழ்ந்த ஊழிக்காலப் போரே. அரசகுல வம்சாவளிப் பெயர்களை வரலாற்றுக்கால அரசர்கள் வரையில், கணக்கிட்டுப் பார்க்கும்போது, உண்மையில் அவ்வாறு ஒரு போர் நிகழ்ந்திருந்தால், அதன் காலம் ஏறக்குறைய கி.மு.850 என்றுதான் கொள்ள முடியும். அதனால் இவ்வாறு நடந்ததாகக் கருதப்படும் போரின் அளவு மிகவும் அற்பமானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால், இதற்கு வழங்கப்பட்ட இலக்கிய முக்கியத்துவமோ, கிரேக்க நாட்டில் நடந்த ட்ரோஜன் போரைப் போலவே மகத்தானது.
குருக்ஷேத்திரத்திலுள்ள அஸ்தினாபுரத்தின் தொடக்கநிலைக் குடியேற்றம், பழைய வேதகாலத்தின் பழங்குடிக்குரிய ஒரு சிறு கிளையினரால் துவக்கப்பட்டது. அஸ்தினாபுரம் அய்அய்-இன் பூசி மெருகிட்ட சாம்பல் நிறப் பானைகளைப் பொதுவாக, ஆரியர்களுக்குரியனவென்று கொள்ளாமல், பூரு-குரு மக்களின் மண்பாண்டமாகவே கருதவேண்டும். ‘பாண்டவர்கள்’ என்று அழைக்கப்பட்ட (‘பாண்டு புத்திரர்கள்’) இரண்டாவது கிளையினர் இந்திரப்பிரஸ்தத்தில், (அநேகமாக, டெல்லியை அடுத்த புராணகிலாவின் சுற்றுப்புறம்) காடுகளுக்குத் தீயிட்டு அழிக்கும் பழைய வழக்கத்தின்படி நிலத்தைச் சீர் செய்தனர். அது தீக்கடவுளான அக்னி தேவனுக்கு அளிக்கப்பட்ட மாபெரும் பலியாகக் கருதப்பட்டது. அத்தீவட்டத்திலிருந்து தப்பிக்க முயன்ற எல்லா ஜீவராசிகளும் வெட்டிக் கொல்லப் பட்டு, திருத்தப்பட்ட புதிய நிலங்களில் உழவுத் தொழில் துவங்கிக் குடியேற்றம் நிகழ்வுற்றது. அடுத்தடுத்து வாழ்ந்த இரு உறவுக்கார அரசுகளும் பிறகு ஒருவரையொருவர் பழி தீர்த்து அழித்துக் கொள்ளும் வகையில், ஒரு போரை நிகழ்த்தின.
அகில உலகத்தையும் (இதன் பொருள் இந்தியா) ஆளவேண்டும் என்ற நோக்கத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் அப்போரில் பங்கு பெற்ற தாகப் பிற்காலத்தில் வர்ணிக்கப் பட்டது. பிராந்திய ராஜ்ஜியங்கள் கவசங்களும், ஆயுதங்களும் தாங்கிய துணைப்படைகளைத் தொலைதூரத்திலுள்ள டில் லிக்கு அனுப்பிவைத்ததாகக் கூறப்படுவதை உண்மையென்றே வைத்துக்கொண்டாலும், அக்காலத்தில் விளைந்த உணவு உற்பத்தி அவ்வாறு பெரும்படைகளைக் காப்பாற்றுமளவுக்குப் போதுமானதாக இருந்திருக்க முடியாது.
உண்மையிலேயே, கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டு வரை குரு நிலத்தில் வம்சத் தலைவன் ஒருவனால் ஆளப்பட்ட பழங்குடி அரசு இருந்து வந்தது; பின்னர் அது வெகுவிரைவிலேயே முற்றிலும் அழிந்துவிட்டது. பிற்காலப் புலவர்களின் கற்பனையில் தவிர, குரு வம்சத்தினர் எக்காலத்திலும் நாடு முழுவதையுமே தங்களின் ஆதிக்கத்திற்குள் உட்படுத்தியதற்குச் சான்றுகள் இல்லை. குருவமிச வாரிசான பரிக்ஷத்து மகாராஜா, சகல விதமான அரசு மரியாதைகளுடன் தக்ஷசீலத்தில் முடிசூட்டிக் கொண்டதாகக் கூறப்படு கிறது. ஆனால், நான்காம் நூற்றாண்டிற்கு முன்புள்ள தக்ஷசீலமோ ஒரு சிறு கிராமமாகவே இருந்து வந்தது. பின்னர் அது பரிக்ஷத்து என்பவர் இல்லாமலேயே, வர லாற்றில் நுழைந்து விட்டது. மகாபாரதப் போருக்குப் பின்னர் குரு வம்ச வழியில் வந்த நான்காவது மன்னர் வெள்ளம் ஏற்பட்டதால், அஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறிச் சென்றதற்குப் பொருத்தமாகச் சில அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் உள. பூரு-குரு நிலத்தின் தலைநகரை விட்டு ஓடிப்போன அம்மன்னர், நதி வழியே சென்று, கொசாம்பியைத் தலைநகராகக் கொண்டார்.
மகாபாரதத்தின் முக்கிய அம்சம், தெய்விகக் கதைக் கற்பனையான அப்பெரும் போர், பெருங்காவியமாக வளர்ச்சியுற்றதே. இலியத்தைப் (IIIiad) போல் இதுவும் ஓர் உயர்ந்த வம்சம் அழிந்ததைக் குறிக்கும் புலம்பலுடன் ஆரம்பமாகிறது. இருந்தாலும், வென்றவர்கள் ஆண்டு வந்ததால் அவ்வெற்றி (ஜெயா) களைச் சிறப்பித்து, ஒரு வகையான வஞ்சப் புகழ்ச்சியுடன் அப்பாடல்கள் எல்லாம் அநேகமாக மாற்றப்பட்டிருத்தல் இயல்பு. ‘ஜெயா’ என்ற அச்சொல்லின் சேர்க்கை இன்னமும் அப்பாடல்களில் காணப்படுகிறது. எந்த நிகழ்ச்சிகளைக் குறித்துப் பாடினாலும் (அக்காலத்தில், பிற நாடுகளில் நிலவியதைப் போலவே) அதற்கு முன்னுரையாக தெய்விக வாழ்த்துப்பா ஒன்றை (கிரேக்க நாட்டின் ஹோமியத்தைப்போல் இங்கு வேத வழக்கு) அமைப்பது மரபு. இக்காவிய நிகழ்ச்சியை ஆதரித்த வள்ளல் ஒருவர் இருந்திருப்பாரேயானால், அவருடைய வம்சாவளி புகழுரைகளுடன் கூறப்பட்டிருக்கும். மரபின் மீது தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளப் பிராமணர்களுக்கு இவ்வாழ்த்துப்பாக்கள் வசதியாக இருந்தன. பிராமணியம் தனது புரோகித ஜாதியைப் பெரிய அளவுக்கு வேறு ஆரியர்களிடமிருந்து பிரித்தெடுக்காத வரையில், பாடுவதைத் தொழிலாகக் கொண்ட பாணர்களே (சூதா) தொடக்க நிலைக் கவிஞர்களாகவும், பாடகர்களாகவும் விளங்கினர். பிராமணர்களால் திருத்தப்பட்டு இன்று நம்மிடையே புழங்கும் புதிய பதிப்பு. இந்த உருவத்தை கி.மு.200-க்கும் கி.பி.200-க்கும் இடையே பெற்றது. அதில் 80,000 பாடல்களும் சில உரைநடைத் தொகுப்புகளும் உள. தொடக்கத்திலிருந்த பாடல் உருவம் சீர்செய்ய முடியாத அளவுக்கு அழிந்து போய்விட்டது. ஆயினும் புதிய பதிப்பின் முகவுரைப் பாடல்கள், அப்பழைய உருவத்தில் மேலும் 24,000 பத்திகள் அக்காலத்தில் வழக்கில் இருந்ததைத் தெளிவுடன் கூறுகின்றன.
புதிய பதிப்புருவ ஆரியர்கள், பலதரப்பட்ட வாசகர்களைக் கவர்வதற்காகப் பொருந்தக் கூடிய பகுதிகளையெல்லாம் எடுத்து இத்துடன் சேர்த்தனர். இருப்பினும் குருநிலப் போருடன் எவ்விதத்திலும் தொடர்பற்ற பல கதை நிகழ்ச்சிகள், ஒரு கதைக்குள் அமைந்த பல கதைகளாகவும் புனையப்பட்டன. தகுந்த கதை அமைப்பைச் சேர்ந்ததன் வாயிலாக, அச்சேர்க்கைகளின் வீக்கம் மிகவும் தத்ரூபமாகியது.
சர்ப்ப அரக்கர்களாகிய நாகர்களைப் பூண்டோடு அழிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் மூன்றாவது ஜனமேெஜயன் என்ற அரசன் ஒரு மாபெரும் யாகம் செய்தான். சர்ப்ப அரக்கர்கள் தங்களுடைய தவ வலிமையால் பாம்பு அல்லது மனித உருவத்தைப் பெற வல்லவர்கள்; அவர்களில் ஒருவர், ஜனமேஜயரின் தந்தையான இரண்டாவது பரீக்ஷித்தைக் கொன்றதாலேயே அந்த யாகத்தீ வளர்க்கப்பட்டது. அப்போர்க் கதைகளும், வேறு நிகழ்ச்சிக்குரிய கதைகளும், அக்காலத்தில் நீண்ட நேரம் நிகழும் யாக பலிச் சடங்குகளின் போது திருப்பித் திருப்பிச் சொல்லப்பட்டன. அதாவது இன்று, வழக்கிலுள்ள மகாபாரதத்தில் முக்கியமாயிருப்பது அம்மாபெரும் யக்ஞம் பற்றிய விவரமே தவிர அப்பெரும் போர் பற்றிய விவரங்கள் அல்ல. இவ்வாறு புதிய சேர்க்கை யினால் மகாபாரதத்தை விரிவாக்கம் செய்தமுறை… எவ்விதத்திலும் கி.பி. 2-ஆம் நூற்றாண்டோடு நின்று விட்டதாகக் கூறமுடியாது. இது 19-ஆம் நூற்றாண்டு வரையிலும் கூடத் தொடர்ச்சியுற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வழங்கப்படும் பல்வேறு விதமான பதிப்புகளையெல்லாம் ஒப்பிட்டு நோக்குவதன் வாயிலாக, கி.பி.நான்காம் நூற்றாண்டிற்குரியதான ஒரு மூலப் பிரதியைக் கிட்டத்தட்ட உருவாக்க இயலும். ஆனால், பூர்வகால மூலப் பாடல்களைத் திரும்ப உருவாக்கலாம் என்ற சிந்தனைக்கு இடமே இல்லை.
பெரும்பாலான பிற்காலச் சேர்க்கைகள் வைதிகச் சடங்கு களிலிருந்தும், வைதிக மதத்திலிருந்தும் வேறுபட்ட மதத் தன்மைகளைக் கொண்டிருந்தன. பிராமணர்களுடைய பழைய கவுரவம் பவுத்த மதத்தால் முறியடிக்கப்ட்ட பிறகு, அவ்வாறு இழந்த முக்கியத் துவத்தை இந்த வேறுபட்ட மத நோக்கத்தினால் பிராமணர்கள் திரும்பவும் பெற்றனர். இச்சேர்க்கைகளில் மிகவும் அற்புதமாக விளங்குவது பகவத் கீதை. அது பாரதப் போருக்குச் சற்று முன்பாக பகவான் கிருஷ்ணனால் உபதேசிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. ஆயின், அந்த பகவானே பாரதக் கதைக்குப் புதியவர்; அப்போர் நடந்து பல நூற்றண்டுகள் கழித்தும் அந்த பகவானின் உயர்ந்த தெய்விகத் தலைமை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதில் வழங்கும் சம்ஸ்கிருதம், கிட்டத்தட்ட கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற்குரியது. ஆனால், அவ்வாறு கிருஷ்ணன், பகவான் அந்தஸ் தைப் பெறுவற்கு நீண்டகாலம் முன்பாகவே மகாபாரதத்தின் முக்கியச் சம்பவங்கள், ஒருமைப்பாடுடைய பிராமண காவியமாக முதல் நிலைத்திருத்தம் பெற்று, மகாபாரதக்கதை அமைப்பின் மூலம் நிகழ்ந்து விட்டது.
செர்மானிய அறிஞர் மாக்ஸ் முல்லர் அவர்கள், A His tory of Ancient Sanskrit Literature (சமஸ்கிருத இலக்கியங்களின் வரலாறு) என்ற நூலில் 40-ஆம் பக்கத்தில்.
“பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் நடைபெற்ற போர் – மகாபாரதத்தின் பிரதான கதையே அதுதான் – அப்போர் வேதங்கள் எதுவும் குறிப்பிடாத ஒன்றாகும்” என்று கூறுகிறார்!
(3) குருக்ஷேத்திரம் ஒரு புனிதமான இடம் என்றுதான் வேத இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகிறதே தவிர, ஒரு போர் நடைபெற்ற இடமாக அதை எங்கும் சுட்டிக்காட்டவே இல்லை.
(4) வியாசர், வைசாம்பாயணா (Vaisampayana) ஆகியவர்கள் “தைத்திரீய”, “ஆரண்யகா” என்ற நூல்களில் குறிப்பிடப்படுகிறார்கள். மேற்காட்டிய இருவரும் மகாபாரதத்தின் முதல் இரண்டு நூலாசிரியர்கள் என்று குறிப்பிடப்படவே இல்லை!
(5) “கதகசமிதா” என்ற ஒரு நூலில் கவுரவர்களின் அரசரான திருதராஷ்டிரன் பற்றிய ஒரு குறிப்பு வருகிறது; அது குருக்ஷேத் திரப் போரைப்பற்றியதாக இல்லை. அது திருதராஷ்டிரனுக்கும், அவனது புரோ கிதருக்கும் ஏற்பட்ட ஒரு தகராறு பற்றிய குறிப்பாகும்.
(ஆதாரம்: A.B. கெய்த் தொகுத்த கேம்பிரிட்ஜ் ஹிஸ்டரி ஆஃப் இண்டியா, A.B.Keith; Cambridge His tory of India, P.119)
(6) பரிக்ஷித் என்பவரை அதர்வவேதம் மிகப்பெரிய அரசன் என்று புகழுகிறது; ஜனமேஜெயன் என்பவரையும் சதபத பிரமாணம் நிரம்ப யாகங்கள் நடத்தியவர் என்றும், புரோகிதர்களுக்கு ஏராளமான தானங்கள் அளித்தவர் எனவும் சிறப்பித்துப் புகழ்ச்சி உரை கூறுகிறது. அந்த இரண்டு பேர்களில் எவருமே அர்ச்சுனனின் பரம்பரை என்று குறிப்பிடவே இல்லை.
(ஆதாரம்: கெய்த் நூல் – பக். 120-121)
(7) மகாபாரதத்தில், அர்ச்சுனன் இந்திரனின் இயற்கைப் புதல்வனாவான்; ஆனால், சதபத பிரமாணத்தில் இந்திரனும் அவனே (அர்ச்சுனனே) என்று குறிப்பிடப்பட்டுள்ளது!
(8) ஒரு ‘அக்குரோணி’ படை என்பது 21,870 ரதங்கள், 21,870 யானைகள், 65,610 குதிரைகள், 1,09,350 காலாட்படை சைன்யம்.
(ஆதாரம்: ஏ.சு. ராமச்சந்திர தீட்சிதர் War in Ancient India P.198)
இதுபோன்ற 18 அக்குரோணி சைன்யங்கள் – 11 அக்குரோணி சைன்யம் கவுரவர்களுடையது – 7 பாண்டவர்களுடையது; குரு க்ஷேத்திரத்தில் அணிவகுத்து நின்றன என்று கூறப்பட்டுள்ளது. இன்றுள்ள நிலையில்கூட இவ்வளவு பெரும் சேனை அணி வகுப்பது எளிதானதா?
21,870 தேர்ப்படை x 18 = 3,93,660 ரதங்கள்
21,870 யானைப் படை x 18 = 3,93,600 யானைகள்
65,610 குதிரைப்படை x 18 = 11,80,980 குதிரைகள்
1,09,350 காலாட்படை x 18 = 19,68,300 வீரர்கள்
எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு பெரிய போர்க்கள மைதானம் – இவ்வளவு பெரிய சைன்ய படைகள் இருக்க வாய்ப்பு உண்டா? இது ஓர் அதீதக் கற்பனை அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
இவ்வளவு குதிரைப்படைகள் கொண்ட சைன்யம் உண்டா? அன்றைய மக்கள் தொகை எவ்வளவு? அதில் இவ்வளவு பேர் படையில் இருக்க வாய்ப்பு உண்டா? பகுத்தறிவுக்குப் பொருந்துகிறதா?
சாதாரணமாக ஒரு கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒவ்வொரு ரதத்திலும் 2 பேர்; ஒவ்வொரு யானையின் மேலும் இரண்டு பேர் என்று கணக்கிட்டாலும், இறந்தவர்களின் எண்ணிக்கை 1660 மில்லியன் ஆகும். அதாவது 16 கோடி ஆகும். ஒவ்வொரு போர் வீரனும் 400 முறை செத்திருக்க வேண்டும் போலி ருக்கிறது!!!
(9) அக்காலத்தின் போர்க்கருவிகள் எப்படிப்பட்ட வைகளாக இருந்திருக்க முடியும்? ஹரப்பா நாகரி கத்திற்குச் சொந்தமானவைகள்கூட கற்கருவிகள், சரியாக இல்லாத கோடரிகள், வில்லின் முனைகள் – இவைகள்தான். செம்பு, பித்தளை, கல்லால் ஆனவை என்கிறபோது, குருக்ஷேத்திரத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க் கருவிகள் எப்படி இருந்திருக்க முடியும்?
(10) அக்காலத்தில் இருந்த போக்குவரத்து மற்றும் அரசியல் நிலவரப்படி, மற்ற பகுதிகளிலிருந்து சைன்யங்கள் – சேனைகள் வந்திருக்கவும் முடியாது.
(11) தென்னாட்டிலிருந்து வந்திருக்க வாய்ப்பே இல்லை; மகதத்தைப் பொறுத்தவரை அது ஆரியரல்லாதவர்கள் ஆண்ட – ஆரியர்களின் கணக்கின்படி “தூய்மை கெட்ட தேசப்பகுதியாகும்.” தரை வழியோ தகவல் தொடர்பு சாதனங்களோ வளராத அக்காலகட்டத்தில் இவ்வளவு பெரிய சேனைகளை எப்படித் திரட்டியிருக்க முடியும்?
(12) அசாம் பகுதியைச் சேர்ந்த பாகதத்தா என்ற அரசன் (இவன் பிரக்சோதிஷா ராஜ்ய அரசனாம்) குருஷேத்திரப் போரில் பங்கு பெற்றதாகக் கூறப்படு வதும் வெறும் கற்பனையாகவே இருக்கமுடியும். காரணம் வேத கால இலக்கியங்களோ கி.மு.5 ஆம் நூற்றாண்டிலிருந்த பாணினியோ இவ்வரசன் பற்றிய எந்தக் குறிப்பும் கூறவில்லை.
(13) அதுபோலவே, யவனர்களும், சாகர்களும், பகல்வாக்களும், கவுரவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தார்கள் என்று கூறப்படுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை; காரணம் – குறிப்பிடப்பட்டுள்ள இவர்களில் எவரும் கி.மு. 150 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு எவ்விதப் பங்களிப்பையோ, இடத்தையோ இந்திய வரலாற்றில் பெற்றவர்கள் அல்லர்.
“கீதையைப்பற்றிய உண்மைகள்” என்ற ஆங்கில நூலில் சிந்தனையாளர் வி.ஆர்.நார்லா அவர்கள் வேடிக்கையான ஒன்றைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை!
‘நியூமராலஜி’ (Numerology) என்ற எண் கணித ஜோதிட மூட நம்பிக்கையாளராகவே இந்தப் போர்பற்றி எழுதியவரும் இருந்திருப்பார் போலும்! இதோ அந்த வேடிக்கையைப் பாருங்கள்.
மகாபாரதப் போரில் பங்கேற்ற சைன்யங்கள் எண்ணிக்கை 18 (18 அக்குரோனி படைகள்); மகாபாரதப் போர் நடைபெற்ற நாள்கள் 18.
பாரதப் போர் முடிவுற்றதும், பாண்டவர் தரப்பில் எஞ்சியவர் ஆறுபடை, 18 இல் மூன்றில் ஒருபகுதி. கவுரவர் தரப்பில் எஞ்சியவர் 18-இல் ஆறில் ஒரு பகுதி.
யுதிஷ்டிரர் ஆண்ட ஆண்டுகள்
18 x 2 = 36 வருடங்கள்!
கிருஷ்ணன் இறந்தது மகாபாரதப் போருக்குப்பின்
18 x 2 = 36 வருடங்கள் கழித்து!
பாரதம் சண்டைபற்றி வர்ணிப்பது – 18 காண்டங்க ளில்
பகவத் கீதையின் அத்தியாயங்கள் – 18 அத்தி யாயங்கள்!
எனவே 18, 18, 18 என்று பதினெட்டாம் பெருக்கே பெருக்கு!
பாரதத்தின் காலம் பற்றி இராமாயணப் பாத்திரங்கள் என்னும் நூலில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் அரிய ஆய்வுரை இதோ:-
“அதன் காலமே சுத்தப் புரட்டு. அதாவது, இராமாயணம் ‘திரேதாயுகத்தில்’ நடந்தது என்பதாகும்.”
திரேதாயுகத்திற்கு உண்டான வருஷம் 12,96,000 தான். ஆனால், அந்த யுகத்தில் இராவணன் அய்ம்பது இலட்சம் (50,00,000) வருடங்கள் ஆண்டிருக்கிறான் என்பது இராமாயணக் கதையின்படி உள்ள சேதியாகும்.
13 இலட்ச வருடத்திற்கு உள்பட்ட ஒரு யுகத்தில் நடந்த செய்கை, 50 இலட்சம் வருடம் நடந்ததாக இருக்க முடியுமா?
நான்கு யுகமும் சேர்ந்தாலே மொத்தம் 43,20,000 ஆண்டுகள் தான் ஆகின்றன.
மற்றும் இராமாயணம், பாரதக் கதைக்குப் பின் எழுதப்பட்ட கதையாகும்.
இராமயணக் கதை எழுதப்பட்ட காலத்தைவிட, பாரதக் கதை எழுதப்பட்ட காலம் முந்தியது என்பதற்கு ஆதாரம் என்னவென்றால்,
பாரதக்கதை எழுதப்பட்ட காலம் மிகவும் காட்டுமிராண்டிக் காலமானதாகும்.
அக்காலத்தில் கற்பு இல்லை. பாண்டவர் முதல் பலரும் விபச்சாரத்தில் பிறந்த பிள்ளைகள்.
மிருகங்கள், பட்சிகள், மச்சங்கள் மக்களுடன் கூடிப் பிள்ளைகள் பெற்றிருக்கின்றன.
ஒரு பெண் 5 புருஷர்களுடன் வாழ்ந்த காலம்.
பொய், புரட்டு, சூது, வஞ்சகம், ஏமாற்றம், பெரு மையாய் – சாமர்த்தியமாய் கொள்ளப்பட்டிருக்கிறது.
பிரதான புருஷர்கள் வைப்பாட்டி வைத்துக் கொண்டதுடன் விபசாரமும் செய்திருக்கிறார்கள்.
இயற்கைச் சாத்தியத்திற்கு விரோதமான காரி யங்கள் பல நடந்திருக்கின்றன.
ஆகவே, பாரதத்தில் நீதி, ஒழுக்கம், கற்பு, அஹிம்சை என்பனவாதிகள் பற்றிய கவலையற்ற காலம் அது. இக்குணங்கள் இகழப்பட்ட காலம் ஏற்பட்டவுடன், அவைகளை மறைத்து நேர்மையையும் ஒழுக்கத்தையும் கற்பு முறையையும் காட்டுவதற்கு ஆக புதியதாய்ப் புனைந்த கதையே இராமாயணம்.
அப்படி இருந்தாலும் ஆரியத்திற்கு மாத்திரம் தான் அக்கதை நீதி, நேர்மை, ஒழுக்கம், கற்பு என்பதாகக் கருதப்பட்டவைகளே தவிர, உண்மையில் அவை அப்படிப்பட்டவை அல்ல. அதாவது, கூடுமானவரை என்று தான் கருதப்படத் தக்கவையாகும்.
இவை இரண்டிலிருந்தும் ஆரியர்களின் முந்திய நாகரிகமும், பிந்திய நாகரிகமும் அதாவது, திராவிட நாகரிகத்தைப் பார்த்து ஏற்றுக் கொண்ட நாகரிகமும் ஓர் அளவுக்குக் காணக்கூடிய தாகும்.
இவை ஒருபுறமிருந்தாலும், இராமாயணம் என்பதாக வால்மீகி என்பவன் பேரால் எழுதப்பட்ட கதை ஓர் ஒரிஜினல் (மூலக்கதை) அல்ல. திருடப்பட்ட, வேறொருவரால் எழுதப்பட்ட கதையைப் பார்த்து, பாத்திரங்களின் பெயர்களை மாத்திரம் மாற்றி எழுதப்பட்ட கதை. அதாவது, கந்தபுராணத்தைப் பார்த்து எழுதப்பட்ட கதை. இதற்கு ஆதாரம் பேராசிரியர் ஆர்.பி. சேதுப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட ‘வேலும் வில்லும்’ என்கிற புத்தகத்தைப் பார்த்தால் விளங்கும்” என்கிறார்.
ஆர்.ஜி. பண்டர்கார் (R.G.Bhandarkar) என்பவர் நவீன கால இந்தியா பற்றி எழுதிய துவக்ககால வரலாற்று ஆசிரியர்களில் மிகவும் முக்கியமானவர். அவருடைய அறிவுக்காகவும், ஆற்றலுக் காகவும் மிகவும் மதிக்கப்பட்ட அறிஞர் ஆவார். அவரது கருத்து என்னவென்றால்,
மகாபாரதமோ, இராமாயணமோ நடந்த வரலாறு அல்ல; புராணங்களும் அவ்வாறே என்பதாகும். நவீன தற்காலக் கல்வி ஏன் நம் மக்களைப் பகுத்தறிவுடன் ஆய்ந்து, எதையும் ஏன் – எதற்கு என்று கேட்டுப் பகுத்தறிவைப் பயன்படுத்தி, உண்மை எது, கற்பனை எது என்று இனம் பிரித்து உரைத்துப் பார்த்து ஏற்கும் வாய்ப்பையே ஏற்படுத்தாத கல்வியாக இருக்கிறதே என்று மிகவும் மனம் வருந்தினார்.
அவருக்குப் பிறகு அவருடைய சம காலத்த வரானாலும் அவரது ஜூனியர் போன்ற ஒரு வரலாற்று அறிஞர் ஆர்.சி.தத் (R.C.Dutt) என்பவர் ஆவார். அவர் தெளிவாக எழுதியுள்ளார். “மகாபாரதத்திலுள்ள போர்ச் சம்பவங்கள் எல்லாம் அப்பட்டமான கற்பனையேயாகும்; அதுமட்டுமல்ல, பஞ்ச பாண்டவ சகோதரர்கள் அய்வர் என்பதும், அவர்களுடைய பொது மனைவி பாஞ்சாலி திரவுபதை என்பவைகூட கட்டுக் கதைகளே” என்றார். அவர்தான் ரிக் வேதத்தை வங்காள மொழியில் மொழி பெயர்த்த அறிஞர் ஆவார்! எப்படி ஒரு சூத்திரன் வேதத்தினை மொழி பெயர்க்கலாம்; அதுவே அபச்சாரம் என்றெல்லாம் வங்காளத்துப் பார்ப்பனர்கள் அந்நாளில் எழுப்பிய எதிர்ப்பினை அவர் பொருட்படுத்தாமல் தன் பணியைச் செய்தவர்!
அவரது இராமாயணம், பாரத ஆங்கிலச் சுருக்க மொழி பெயர்ப்பு வெளியீடுகள் மிகவும் பிரசித்தி பெற்றவைகளாகும்! எனவேதான் குருக்ஷேத்திரப் போர், பஞ்ச பாண்டவர்கள், பொது மனைவி (பாஞ்சாலி) திரவுபதை எல்லாம் கற்பனை என்பதை அவரால் ஓங்கி அடித்துச் சொல்ல முடிந்தது!
பண்டர்கார், தத் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் இப்படிச் சுட்டிக்காட்டு முன்பே, ராம்மோகன் ராய் அவர்கள் மகாபாரதத்தின் துவக்கப் பாட்டுகளில் ஒன்றைக் காட்டி, அதில் வியாசனே, தனது காவியம் ஓர் கற்பனைக் காவியம் என்றே குறிப்பிட்டுள்ளான் என்பதை எழுதியுள்ளார்!
உலகின் பல்வேறு மதங்களையும் ஒப்பீடு செய்து முழுமையாக ஆய்வு செய்த அறிஞர் என்ற வகையில், ஒப்பீட்டு மதங்கள் என்ற ஒரு புதுப்பாடப் (Comarative Religion. Roy placed no value on the Gita) பகுதியை உருவாக்கிய நிலையில், கீதைக்கு எந்த முக்கியத் துவத்தினையும் தர அவர் தயாராக இல்லை! மதங்கள்பற்றி விரிவாக அவர் எழுதிய நூலில் கீதையை அறவே புறக்கணித்து விட்டார் அவர்!
காந்தியார் அப்படி அல்ல. கீதையை மிகவும் மதித்தவர். எந்த அளவுக்குப் போனவர் என்றால், “1889 ஆம் ஆண்டில் கீதையை நான் முதலில் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றேன்; அன்றிலிருந்தே அது எனக்குத் தாய் ஆகும்” என்று கூறியவர்!
அவரே மகாபாரதத்தினை நடந்த கதை என்று ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
“நான் கீதையுடன் முதன்முதலில் தொடர்பு கொள்ளும் போதே அது ஒரு வரலாற்று நூலல்ல என்று எனக்குத் தோன்றியது. உடலால் செய்யும் போராகக் காட்டியிருப்பது மனிதனின் உள்ளே நடைபெறுகிற நல்லதற்கும், கெட்டதற்கும் நடைபெறுகிற – முடிவில்லாத போராட்டத்தையே குறிப்பதாகும்.”
(ஆதாரம்: ‘Gita, My mother’ – M.K.Gandhi P.1)
விவேகானந்தரும் இதேபோன்ற கருத்தையே கூறியதோடு, அர்ச்சுனன் பேரனான ‘ஜெனமே ஜெய’ என்பவன்பற்றி சதபத பிராமணத்தில் வருகையில் அர்ச்சுனன்பற்றி எந்தக் குறிப்பும் கூறப்படவில்லை என்பது, அது கற்பனையே என்பதைக் காட்ட வில்லையா என்றும் கேட்டார்!
அதுபற்றித் தனியே ஒரு பகுதியையே தந்துள்ளோம், காண்க!
சங்கரர் பற்றியேகூட விவேகானந்தர் கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!
அறிஞர் டி.டி.கோசாம்பியின் நுண்மாண் நுழைபுலம், அவர் பல்துறைக் கொள்கலன் (multi faceted genius) என்பதைத் தெளிவாகக் காட்டும். இந்திய வரலாற்றிற்கு மார்க்சியக் கண்ணோட்டத்தினைத் தந்தவர் அவர்! இந்திய நாணயங்கள் பற்றி ஆய்வு செய்ய அறிவியல் பூர்வமான முறைகளைப் புகுத்திய பன்னாட்டுப் புகழ் வாய்ந்த கணிதமேதையாவார்!
நமது வரலாற்றாசிரியர்கள் துவக்க காலத்தில் அவரது ஆய்வினை ஏற்கத் தயங்கினார்கள். அடுத்து அவரைக் கேலி செய்தார்கள். ஆனால், அவரது 58 ஆம் வயதில் அவர் மரணத்திற்குப் பின் அவரையே ஒரு புதுநோக்கு உருவாக்கிய கர்த்தர் (trend-setter) என்று ஒப்புக்கொண்டனர்! அவரது அறிவு நாணயம், தெளிவு, கொள்கை உறுதி எல்லாமே பாராட்டத் தகுந்தது. அவர் கூற்று என்ன தெரியுமா?
“நம்மிடம் உள்ள ஆதாரங்களைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கையில், இராமாயணத்திலும், பாரதத்திலும் நிகழ்ந்த போர்கள் எங்கே – எந்த இடத்தில் நடந்தன என்பதையோ, எந்தக் காலகட்டத்தில் – எப்போது நடைபெற்றன என்பதையோ சொல்ல இயலாததாக உள்ளதோடு, வரலாற்று ரீதியான சம்பவங்களாகவும் அவைகள் இல்லை!”
குருக்ஷேத்திரப் போர் என்பது அப்பட்டமான கட்டுக்கதையே தவிர வேறில்லை என்று டி.டி. கோசாம்பி அவர்கள் (An Introduction to the Study of Indian His tory p.4) குறிப்பிடுகிறார்.
வாழும் வரலாற்று ஆசிரியர்களான டி.சி.சிர்க்கார், எச்.டி.சாங் காலியா (D.C. Sirkar, H.D. Sankalia) என்ற இரண்டு அறிஞர்கள் முறையே epigraphy என்ற ‘எழுத்தியல்’, ‘கணிப்பு ஆய்வு நிபுணர்’, ‘தொல்பொருள் ஆய்வு நிபுணர்’ ஆவார்கள்!
வரலாற்றுப் பின்னணி இன்றி அவர்களால் இத்துறைகளில் தனித்துவம் பெற்றிட முடியாது என்பது அறிந்ததே!
அவ்விருவரும் சேர்ந்து, குருக்ஷேத்திரப் போர் அப்படியே ஏதாவது நடைபெற்றிருந்தாலும்கூட அது ஒரு குடும்பச் சண்டையாக மட்டும்தான் இருந்திருக்க முடியுமே தவிர, மற்றப்படி வேறில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்!
அவர்கள் வெளியிட்ட நூல் ஒன்று அதன் தலைப்பு “Mahabaratha – Myth and Reality – edited by P.Gupta and K.S.Ramachandran.”
இதுபற்றிச் சிந்தனையாளர் வி.ஆர்.நார்லா குறிப்பிட்டுவிட்டு, ‘‘இந்த அறிஞர் பெருமக்கள்கூடப் பழைமையிலே பிறந்து, பழமையிலே வளர்ந்து, பழைமைப் பாசியை விட்டு வெளியேறி முற்றிலும் தூய சிந்தனையாளர்களாக ஆக மறுக்கிறார்கள், அதுதான் வேதனையைத் தருகிறது’’ என்கிறார்!
நியாயமாக அவர்களது அந்தப் புத்தகத்தின் தலைப்பு எப்படி அமைந்திருக்க வேண்டும்? “Mahabarata! Myth and Reality” என்பதற்குப் பதிலாக, “Mahabarata! Myth or Reality?” என்று அல்லவா கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட அந்நூல் தலைப்பு அமைந்திருக்கவேண்டும்? அப்படி இல்லாததற்கு என்ன காரணம் கூறுகிறார்கள் அவர்கள்?
மிகப்பெரும்பாலோர், காலங்காலமாய் பாரதம், இராமாயணத்தை நம்புகிறார்களாம்! ஆகவே, அவைகள் அனைத்தும் கற்பனையாக இருக்க முடியாதாம்! இதுபற்றி அறிஞர் நார்லா ஓர் ஆணித்தரமான கேள்வி யைக் கேட்கிறார்:
“கிரகணங்கள் ஏற்படுவது எதனால் என்றால், ராகுவும், கேதுவும் சூரியனையும், சந்திரனையும் விழுங்குவதால்தான் என்ற மூடநம்பிக்கைக் கருத்துகூட, பல கோடி மக்களால், பல லட்சக் கணக்கான ஆண்டுகளாக நம்பப்பட்ட கருத்துதானே; அதையே இன்று ஏற்று நம்பிக் கிடந்தால் அதைவிடக் கொடுமை வேறு உண்டா? அதுபோன்றதே இதுவும்” என்று கூறிவிட்டு,
“இப்படிப்பட்ட மனப்பான்மை உடையவர்கள், பல்கலைக் கழகங்களிலும், தேசிய விஞ்ஞான ஆய்வுக் கூடங்களிலும், நமது தொழில் நுணுக்க நிறுவனங்களிலும், ஏன், நமது வெட்கத்திற்குரிய நிலையில் – அரசுத் தலைமைப் பொறுப்புகளிலும் அங்கம் வகிப்பது எவ்வளவு மோசமான நிலைமையை நமது நாட்டில் தோற்றுவித்துள்ளது? இதனால்தான் நமது தேசிய வாழ்வின் ஒவ்வொரு முனையும் சீர்கெட்ட நிலையில் – பகுத்தறிவின்றி – பழமைப் பாசியால் பாதிக்கப்பட்டுள்ளது” என்னும் கருத்தினை ஆணித்தரமாக வெளியிட்டுள்ளார்.
(‘கீதையின் மறுபக்கம்’, முதல் அத்தியாயம்)
வாசகர்கள் திறந்த மனதுடன் படித்து, காய்தல், உவத்தல் இன்றி, சீரிய பார்வையோடு சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவார்களாக!
