சென்னை, நவ.14 தமிழ்நாட்டில் ரூ.62.51 கோடியில் புதிதாக 12 இடங்களில் தோழி விடுதிகள் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் நேற்று (13.11.2025) அடிக்கல் நாட்டினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருப்பத்தூா், நாமக்கல், மயிலாடுதுறை, விருதுநகா், திண்டுக்கல், நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூா், திருவாரூா், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 740 ஊழியா்கள் தங்கும் வகையில் இந்த விடுதிகள் கட்டப்படவுள்ளன.
இந்த விடுதிகளில் தங்கும் பெண்களின் தேவைகளுக்கேற்ற பல்வேறு வகையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. தோழி விடுதிகளின் அமைவிடம், வசதிகள், கட்டண விவரங்கள் உள்ளிட்ட தகவல்களையும், முன்பதிவு செய்வதற்கான வசதியை இணையதளம் மூலம் பெறலாம்.
ஏற்கெனவே, 19 தோழி விடுதிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 14 விடுதிகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தமிழ்நாட்டில் 27 புதிய தோழி விடுதிகள், கூடுதலாக 2,790 மகளிர் பயன்பெறும் வகையில் வரும் ஆண்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளன.
பூஞ்சோலை இல்லம்: கோவை மாவட்டத்தில் ‘பூஞ்சோலை’ என்ற பெயரில் அமையவுள்ள அரசு மாதிரி கூா்நோக்கு இல்லத்துக்கு ரூ.16.95 கோடியிலும், புதிய திருச்சி, அரசு கூா்நோக்கு இல்லத்தில் ரூ.10.95 கோடியிலும் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அதேபோல, ராயபுரம் அரசு குழந் தைகள் இல்லத்தில் ரூ.7 கோடியில் புதிய கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், சமூகநலத் துறை அமைச்சா் கீதா ஜீவன், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், துறை செயலா் ஜெயசிறீ முரளிதரன், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், கூடுதல் இயக்குநா் மற்றும் தமிழ்நாடு பணியாற்றும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநா் ஷரண்யா அறி உள்ளிட்டோர் பங்கேற்றனா்.
