திருச்செந்தூர், நவ.14- திருச்செந்தூர் கோவிலில் பொது தரிசன வரிசையில் காத்திருந்த பெண் பக்தருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவசரகால வழி திறக்கப்படாததால் வெளியேற முடியாமல் சுமார் 1 மணி நேரம் கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூர் கோவில்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2 ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
நேற்றும் (13.11.2025) கோவிலில் வழக்கம்போல் பக்தர்க ளின் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார். 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பெண் கதறல்
அப்போது பொது தரிசன வரிசையில் காத்திருந்த பெண் பக்தர் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் அவசர கால வழியில் உள்ள கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவர் வெளியே வர முடியாமல் தவித்தார். மேலும் அவசர கால வழியில் கோவில் பாதுகாவலர்கள் யாருமே இல்லை. இதனால் நேரம் செல்ல செல்ல அந்த பெண் பக்தர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். தன்னை இங்கிருந்து எப்படியாவது வெளியேற உதவுமாறு கூச்சலிட்டார். இதைக்கண்ட சக பக்தர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.
ஒரு மணி நேரம் தவிப்பு
சுமார் ஒரு மணி நேரம் அந்த பெண் பரிதவித்த நிலையில், இந்த காட்சியை வெளியே இருந்து பார்த்த பக்தர் ஒருவர் விரைந்து சென்று கோவில் பாதுகாவலர் ஒருவரை அழைத்து வந்தார். அதன்பிறகு அவசர கால வழியில் உள்ள கதவை பாதுகாவலர் திறந்து விட்டார்.
இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் பக்தர் தட்டுத்தடுமாறி வெளியேறினார். எனவே அவசரகால வழியில் உள்ள கதவுகள் பூட்டப்பட்டுள்ள இடத்தில் கோவில் பாதுகாவலர்களை பணியில் அமர்த்தவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
