சென்னை, நவ.13 சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை வரும் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே தங்கள் பணியைத் தொடங்க வேண்டிய சூழலில், பணிபுரியும் இடத்திற்கே உணவை எடுத்து வந்து சாப்பிடுவதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.186.94 கோடி ஒதுக்கிடு செய்துள்ளது. அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தனியார் நிறுவனமானது, ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டது.
காலை உணவில் இட்லி போன்றவை, மதியம் ரசம், சாம்பார், கூட்டு, இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவை அடங்கும். இந்த உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கும். இந்நிலையில் சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை வரும் 15-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
2026 தேர்தல்:
முஸ்லிம் ஜமாத்துகள் எடுத்த முடிவு
யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் 2026-இல் திமுக தான் ஆட்சி அமைக்கும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 8,000 முஸ்லிம் ஜமாத்துகள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டனர். ஜமாத்தில் இருப்பவர்கள் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும், திமுகவிற்குதான் வாக்களிப்பார்கள். எஸ்.அய்.ஆர். விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரேசன் கடைகளில் கோதுமை விநியோகம்
ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியதற்கு, அமைச்சர் அர.சக்கரபாணி விளக்கம் அளித்திருந்தார். அதன்படி, நவ. 15-ஆம் தேதிக்குள் அனைத்து ரேசன் கடைகளுக்கும் கோதுமை அனுப்பப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதத்திற்கான கோதுமையை இதுவரை பெறாத ரேசன் அட்டைதாரர்கள், 15-ஆம் தேதிக்கு பின் ரேசன் கடைகளுக்குச் சென்று வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடக்கம்
பொங்கல் பரிசு வழங்கும் பணியை தமிழ்நாடு அரசு இப்போதே தொடங்கிவிட்டது. இன்னும் 4 நாள்களில் (நவ.15 முதல்) ரேசன் கடைகளில் இலவச வேட்டி, சேலை விநியோகம் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த பிறகு, தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் விநியோகம் நடைபெற உள்ளது. மேலும், பச்சரிசி, வெல்லம், கரும்பு, பரிசுத் தொகை உள்ளிட்டவை வழங் குவது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம்.
