ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு அலுவலர் மீதான வரவேற்கத்தக்க நடவடிக்கை!

2 Min Read

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு கலால் துறை உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் சண்முகம், (வயது 48). இவர், அக்., 2ஆம் தேதி கல்லடிக்கோடு என்ற பகுதியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் சீருடை அணிந்து பேரணியில் கலந்து கொண்டார்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அஜித்குமார் அறிவுரையின்படி, கலால் துறை நடத்திய விசாரணையில் இது உறுதி செய்யப்பட்டது. அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் மீறப்பட்டதாக, காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், மாநில கலால் துறை ஆணையர் அஜித்குமார், உதவி ஆய்வாளர் சண்முகத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

(‘தினமலர்’ 12.11.2025)

இது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும்.

ஆர்.எஸ்.எஸ். என்பது ஹிந்து ராஷ்டிரம் என்பதைக் கொள்கையாகக் கொண்டது.

இந்தியா என்பது பல்வேறு இனங்கள், மதங்கள், மொழிகள், கலாச்சாரங்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டமாகும்.

இந்த வரலாற்று உண்மையை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொண்டதில்லை.

குறிப்பாகத் தமிழ்நாட்டில் வாழும் இந்த மண்ணுக்குரிய மக்களின் தாய்மொழி கண்ணோட்டத்தில் பார்த்தாலே – ராஷ்டிரிய சுயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) என்பதே நமக்கு அந்நியத் தன்மை கொண்டது என்பது சொல்லாமலே விளங்கும்.

மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு உண்டு என்றால் – அது ஆர்.எஸ்.எஸ். தான்.

ஆர்.எஸ்.எஸ். என்பது வன்முறையின் மறுபெயர்! இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு  மதக் கலவரங்களுக்கும் தாய் வீடு அதுதான்.

1925ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு 1927ஆம் ஆண்டிலேயே நாக்பூரில் வகுப்புக் கலவரத்துக்கு வித்திட்ட ஒன்றாகும்.

நம் காலத்திலேயே 500 ஆண்டு கால வரலாறு படைத்த ‘அயோத்தி’ பாபர் மசூதியை அதுவும் அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்ந்தெடுத்து (டிசம்பர் 6 – 1992) அடித்துத் தரைமட்டமாக்கியதில் ஆர்.எஸ்.எஸ். தான் முன்னணிப் படையாக செயல்பட்டது என்பது உலகம் அறிந்த உண்மையாகும். அப்பொழுது ஒரு முறையும் இந்த ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்படவில்லையா?

‘பசுவதைத் தடுப்பு’ என்ற பெயரால், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராசர் டில்லியில் தங்கி இருந்த வீட்டை ஒரு பட்டப் பகலில் தீ வைத்துக் கொளுத்தியதிலும் இந்த ஆர்.எஸ்.எஸ்.தானே முதல் வரிசையில் நின்றது (1966 நவம்பர் 7).

கபூர் கமிஷன், டி.பி. மதன் கமிஷன், ரகுபார் தயாள் கமிஷன், ஜெகன் மோகன் கமிஷன், நீதிபதி நாராயண் கமிஷன், நீதிபதி பி. வேணுகோபால் கமிஷன் உள்ளிட்ட பல்வேறு ஆணையங்களும் ஆர்.எஸ்.எஸில் வன்முறைகளைப்பற்றி ஆதாரப் பூர்வங்களுடன் பட்டியலிடவில்லையா?

அந்த ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவை இந்திய ஒன்றிய அரசு அதிகாரப் பூர்வமாகக் கொண்டாடுகிறது; அஞ்சல் தலை வெளியிடுகிறது; ரூபாய் நாணயம் வெளியிடுகிறது; ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அரசுப் பணியில் சேரலாம் என்று ஆணை பிறப்பிக்கிறது என்றால் நாடு எங்கே போகிறது?

இந்த நிலையில், கேரள மாநிலத்தில் அரசு அலுவலர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் சீருடை அணிந்து பேரணியில் கலந்து கொண்டார் என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது – வரவேற்கத்தக்கதே!

மற்ற மற்ற மாநிலங்களும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *