செயல்படாத பழைய வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எளிதில் பெற வசதி! – ஆர்பிஅய் அறிவிப்பு!

3 Min Read

மும்பை, நவ.13- நீண்ட காலமாக செயல்படாத வங்கிக் கணக்குகளில் உங்கள் பெயரில் அல்லது உங்களின் குடும்பத்தினரின் பெயரில் இருக்கும், உரிமை கோரப்படாத பணத்தை மக்கள் எளிதாகக் கண்டறிந்து பெறுவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. அதன்படி இதற்காக சிறப்பு முகாம்கள் மாவட்ட அளவில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் வங்கியில் சேமிப்பு கணக்கு, நிலையான வைப்பு (Fixed Deposit), மீளக்கூடிய வைப்பு (Recurring Deposit) போன்றவற்றில் பணத்தை சேமித்து வைத்திருப்போம். சில நேரங்களில் அந்த வங்கிக் கணக்குகளை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தாமல் விட்டு விட வாய்ப்புண்டு.

உதாரணமாக, கணக்கு வைத்த நபர் காலமானால், முகவரி மாற்றம் ஏற்பட்டால், குடும்பத்தினர் அந்த கணக்கு பற்றிய தகவலை அறியாததால், அல்லது வங்கி இணைப்பு மாற்றப்பட்டால், அந்த கணக்குகளில் உள்ள பணம் பயன்படுத்தப்படாமல் கிடக்கும். இதையே “உரிமை கோரப்படாத வங்கி பணம்” (Unclaimed Bank Deposits / Unclaimed Money) என்று அழைக்கப்படுகிறது.

ஆர்பிஅய் புதிய முயற்சி

ஆர்பிஅய் வெளியிட்ட தகவலின்படி, 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை செயல்படாத வங்கிக் கணக்குகள் “செயல்படாத கணக்குகள்” எனவும், 10 ஆண்டுகள் கடந்து உரிமை கோரப்படாத நிலையில் உள்ள பணம் “உரிமை கோரப்படாத டெபாசிட்” எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

இத்தகைய பணம் ஆர்.பி.அய்.-யின் “Depositor Education and Awareness (DEA)” நிதிக்குள் மாற்றப்படும். ஆனால் இதன் உரிமை வங்கிக் கணக்காளருக்கோ அல்லது அவரின் சட்டபூர்வ வாரிசுக்கோ இருக்கும்.

மறந்த வங்கி பணம்

இந்த உரிமை கோரப்படாத தொகையை நீங்கள் இணையத்தில் மிக எளிதாக கண்டுபிடிக்கலாம். அதற்காக ஆர்பிஅய் உருவாக்கியுள்ள “UDGAM” (Unclaimed Deposits – Gateway to Access Information)-இன் https://udgam.rbi.org.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு உங்கள் பெயர் மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை மட்டும் பதிவிட்டு தேடலாம். தற்போது 30 முக்கிய வங்கிகள் இந்த தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மேலும் பல வங்கிகள் இணைக்கப் படவிருக்கின்றன.

உரிமை கோரப்படாத கணக்கு

உங்கள் பெயரில் செயல்படாத கணக்கு அல்லது மறந்த வைப்புத் தொகை இருந்தால், அதற்கான விவரங்கள் உடனடியாக தோன்றும். அதன் பிறகு நீங்கள், அந்த வங்கிக் கிளையை நேரடியாக தொடர்பு கொண்டு, அல்லது இணையத்தில் தேவையான KYC ஆவணங்களை (ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை) சமர்ப்பித்து பணத்தைப் பெறலாம். விவரங்கள் சரியாகப் பொருந்தினால், அந்த தொகையை வட்டியுடன் மீண்டும் பெறலாம் என ஆர்பிஅய் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி நடவடிக்கை

இந்த முன்னெடுப்பை மக்கள் எளிதாகப் பயன்படுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி 2025 டிசம்பர் மாதம் வரை நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முகாம்களில், வங்கிகளில் நீண்டகாலமாகச் செயல்படாத கணக்குகளில் உள்ள பணத்தை, உரிய ஆவணங்களை வழங்கி உடனடியாகக் கோரிக்கையாகச் சமர்ப்பிக்கலாம்.

யூட்கம் தளம்

பலரும் வேலைமாற்றம், முகவரி மாற்றம் அல்லது குடும்ப காரணங்களால் தங்கள் பழைய வங்கிக் கணக்குகளை மறந்துவிடுகிறார்கள். இப்போது ஆர்பிஅய் அறிமுகப்படுத்திய UDGAM இணைய தளம் மற்றும் சிறப்பு முகாம்கள் வழியாக, அந்தப் பணத்தை மீட்கும் வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது. வங்கியில் மறந்துப்போன பணம் என்றும் இழந்துவிடப்படாது; சரியான ஆவணங்களுடன் உரிய உரிமையாளர் அதை எந்த நேரத்திலும் திரும்பப் பெறலாம் என்று ஆர்பிஅய் கூறியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *