உலகெங்கும் ஆணாதிக்கம் நிலைபெற்று காணப்படுகிறது. பெண்களின் உரிமைக்குரல் கேட்கிறது. நடைபெற்ற புரட்சிகள் – புரட்சிகரமான சமூகம் படைக்க நடைபெறும் செயல்கள் அனைத்தும் பெண் விடுதலையை போதிய அளவிற்கு முன்னிறுத்தி நடைபெறுகிறதா? என்றால் இல்லை என்பது தான் கள நிலவரம்.
பெரியாரின் கொள்கை
ஆனால், உலகப் புரட்சியாளர்களில் தனித்துவம் மிக்கவராய் திகழும் தந்தை பெரியார் தனது சமூகப் புரட்சியில் பெண் அடிமை ஒழிப்பிற்கு சரி பகுதி முக்கியத்துவம் தந்த தலைவராவார்.
பழங்காலத்தில் பெண்கள்
தமிழ்நாட்டில் ஆரியப் பண்பாட்டுப் படையெ டுப்பு – இந்து மதத்தின் ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன்பு பண்டைய காலத்து பெண்கள் பலமிக்க வீராங்கனைகளாகவும் பார் போற்ற ஆண்டிட்ட ஆட்சியாளர்களாகவும், புலமைமிக்க கல்வி – கேள்வியில் தேர்ந்தவர்களாகவும், தொல்குடி பெருமை மிக்கவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மையாகும்.
![‘பெரியார்’ பட்டம் வழங்கப்பட்ட நாள் உலகம் போற்றும் பொன்னாள் [13.11.1938] தந்தை பெரியார், திராவிடர் கழகம்](https://viduthalai.in/wp-content/uploads/2025/11/9_c-8.jpg)
முனைவர் க.அன்பழகன்
மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர்
திராவிடர் கழகம்
பெண்களின் பெருமை
மேலும், தமிழ்ச் சமுதாயம் தாய் வழிச் சமுதாயமாக விளங்கியதோடு, பெயர்களில் கூட தாய் – அம்மா – கண்ணு என்றும், தங்கம் – வைரம் – மாணிக்கம் – மரகதம் – ரத்தினம் என்றும் பல புகழ்மிக்க மதிப்பு மிக்க பெயரிட்டு – சமுதாயம் உயர்நிலையில் வைத்துப் பார்த்தது.
வரலாற்றில் பெண்கள்
பெண்கள் வேட்டையாடி வந்தனர் – குடும்பத்தை காத்திடும் பணியில் முன்னிலை வகித்ததை ராகுல சாங்கிருத்தியாயன் என்ற அறிஞர் தனது ‘வால்காவி லிருந்து கங்கை வரை’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
புறநானூறு, கலிங்கத்துப் பரணி, தமிழினப் பெண்டிரின் வீரத்தை – மொழிப் புலமையை பறைசாற்றுகிறது.
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு
இவ்வளவு சிறப்பிருந்தும் பெண்கள் நம் சமுதாயத்தில் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக் குப் பின்பு அடிமை ஆக்கப்பட்டனர். மனுதர்மத்தில் வர்ணதர்ம முறையில் அய்ந்தாம் இடம் வகிக்கும் அவர்ணஸ்தர்களுக்கு அடுத்து ஆறாவது நிலையில் ‘ஸ்திரிகள்’ என்று ஆக்கப்பட்டனர்.
ஆரிய மனுதர்ம முறைப்படி பெண்களுக்கு சொத்துரிமை இல்லை; கணவன் இறந்தால் கைம் பெண்; அவர்கள் வெளியில் நடமாட உரிமையில்லை; மறுமணம் செய்ய வாய்ப்பில்லை; பருவமடையும் முன்பே பால்ய விவாகம்; படிக்கும் வாய்ப்பில்லை; பிள்ளை பெறும் எந்திரம்; ஆண்களை சார்ந்தேபிறப்பு முதல் இறப்பு வரை வாழ வேண்டும்; ரவிக்கை அணியக் கூடாது; கோயிலில் ‘தேவதாசிகள்’ எனும் பெயரில் பொட்டுக்கட்டி விடப்பட வேண்டும் – அவர்கள் ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.
பெண்ணுரிமைப் போராட்டம்
பெரியாரைப் போல் உலகில் புரட்சிகர சமுதாயம் படைக்க போராடிய எவரும் பெண் விடுதலை குறித்து இவர் அளவிற்கு சிந்திக்கவில்லை. தந்தை பெரியாரின் போராட்டத்தால் பெண்கள் பல வெற்றிகளை அடைந்துள்ளனர். நம் நாட்டில் பெண்களின் உயர்வுக்கு பெரியாரே காரணம் என்றால் அதை மறுப்பதற்கில்லை எனலாம்.
சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாடு
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கொண் டாடும் இத்தருணத்தில் சுயமரியாதை இயக்கம் 1925இல் தொடங்கி 1929இல் முதல் மாகாண மாநாடு செங்கற்பட்டில் நடைெபற்ற போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சிலவற்றை நினைவு கூறுவது சாலப் பொருத்தமாகும்.
l குடும்பத்தின் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வேண்டும்.
l பெண்களை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாக நியமித்திடல் வேண்டும்.
l பெண்களை காவல்துறையில் சேர்க்க வேண்டும்.
l பெண்கள் ஆட்சி அதிகாரத்தில் இடம் பெற வேண்டும்.
l அனைத்திலும் 50% இடஒதுக்கீடு வேண்டும்.
l கைப்பெண் மறுமணம் செய்திடும் உரிமை வேண்டும்.
l ஜாதி ஒழிப்பு திருமணம் நடைபெறல் வேண்டும்.
என பல தீர்மானங்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கு, பெண் அடிமைத் தன்மையை ஒழிப்பதற்கு நிறைவேற்றப்பட்டன.
பெண்கள் காட்டிய நன்றி
பெண்களுக்காக இந்த அளவிற்கு உலகில் எந்த ஒரு நாடும், தலைவரும் சிந்திக்காத வகையில் சிந்தித்து அதற்காகப் போராடி பல வெற்றிகளை குவித்து, பெண்களை முன்னேற்றிய தந்தை பெரியாருக்கு நன்றி காட்டிட – போற்றிப் புகழ்ந்திட தமிழ்நாட்டுப் பெண்கள் மனதார விரும்பி, அதுவரை ஈ.வெ.ராமசாமி என்று அழைக்கப்பட்டவருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தை கொடுக்க விரும்பினார்கள்.
தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு
சென்னையில் 13.11.1938ஆம் ஆண்டு ‘தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு’ ஒற்றை வாடை நாடகக் கொட்டகையில் பெண்களே நடத்திய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு மிகப் பெரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடத்தப்பட்டது. மாநாட்டில் 5000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் பெண்கள் மட்டும் 2000 மேற்பட்டோர் என்பதுகுறிப்பிடத்தக்க செய்தியாகும்.
பெரியார் பட்டம்
மாநாட்டின் தலைவராக திருவரங்க நீலாம்பிகை அம்மையார் இருந்தார். இவர் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளாரின் மகளாவார். ஆயிரக்கணக்கில் பெண்கள் கூடிய மாநாட்டில் பகுத்தறிவுப் பகலவன் தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தை வழங்கினர். ‘பெரியார் வாழ்க’ என்று பெண்கள் அனைவரும் மாநாட்டில் முழக்கமிட்டு பெரியார் பட்டத்தை வழங்கினார்கள்.
இம்மாநாட்டில் மீனாம்பாள் சிவராஜ் தமிழ்க் கொடி வைத்தார். பண்டிதை அ. நாராயணி அம்மையார், மூவலூர் இராமாமிர்தத்தம்மையார், மலர்முகத்தம்மையார், டாக்டர் எஸ். தருமாம்பாள், இராணி அண்ணா, திருவாட்டிகள் சி. கலைமகள்பட்டு, தாமரைக் கண்ணி அம்மையார், பார்வதி அம்மையார் உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் மாநாட்டில் பங்கேற்று பெரியாருக்குச் சிறப்புச் செய்தனர்.
‘பெரியார்’ எனும் பட்டம் வழங்கப்பட்ட தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முதல் தீர்மானமே ‘பெரியார்’ பட்டம் வழங்கிடும் பொருள் குறித்த தீர்மானமாகும்.
பெரியார் பட்டம் குறித்த
முதல் தீர்மானம்
‘‘இந்தியாவில் இதுவரையும் தோன்றிய சீர்திருத்த தலைவர்கள் செய்ய இயலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாததாலும் அவர் பெயரை சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் ‘பெரியார்’ என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது’’ என்ற தீர்மானம் பலத்த வரவேற்புடன் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் வழங்கப்பட்ட இப்பட்டம் பெண்களின் சமூக வரலாற்றில் வைரக்கல் பொதித்த மகுடமாகும்.
உலகத்தில் நேற்றும் – இன்றும் – நாளையும் ‘பெரியார்’ என்ற பட்டத்திற்கு உரியோராக பலர் இடம் பெறலாம். அது எழுதும் போதும் – சொல்லும் போதும் உச்சரிக்கப்படும்.
ஆனால், அறிவாசான் அய்யா அவர்களுக்கு வழங்கப்பட்ட ‘பெரியார்’ என்ற பட்டம் எழுதும் போதும், சொல்லும்போதும் மட்டுமல்ல. மனதால் அவரை நினைக்கும் போதெல்லாம் ‘பெரியார்’ என்ற பட்டமே ‘பெயராக’ நிற்கும் பெரும் புகழுக்குரியது ஆகும்.
உலகில் அப்படிப்பட்ட புகழ்மிக்க பட்டத்திற் குரியவர்தான் தந்தை பெரியார் – அறிவாசான் பெரியார் – உலகப் பெரியார் – ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒரே பெரியார்.
‘பெரியார்’ பட்டம் வழங்கப்பட்ட இந்த வரலாற்று நிகழ்வு உலகின் நினைவில் என்றும் நிலைத்து நிற்கும் நிகழ்வாகும்.
வாழ்க பெரியார்!
