‘டெக்கான் கிரானிக்கல்’ நாளேட்டில் நவம்பர் 11 அன்று மூத்த பத்திரிகையாளர் சிகா முகர்ஜியின் கட்டுரை, தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
தனது கட்டுரையில் அவர் குறிப்பிட்டதாவது:
இந்தியாவின் தேர்தல் ஆணையம், அரசியல மைப்பின் கீழ் ஒரு சுயாட்சி அமைப்பாக நிறுவப்பட்டி ருந்தாலும், அதன் நடைமுறை இன்று பெரும் நம்பிக்கைக் குறையை ஏற்படுத்தியுள்ளது. “தூய்மை யான வாக்காளர் பட்டியல்” என்ற பெயரில் தொடங்கிய சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) பல பிழைகள், தவறுகள், மறைப்புகள், மற்றும் அரசியல் குற்றச்சாட்டுகளுடன் மோதிக் கொண்டிருக்கிறது.
வாக்காளர் பட்டியலின் ‘பிழைகள்’ –
ஒப்புக்கொள்ள முடியாத அலட்சியம்
அரியானாவின் அம்பாலா மாவட்டத்தில், ஒரே வாக்காளரின் ஒளிப்படம் 200-க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாளங்களில் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி அதை வெளிப்படுத்தியபோது, தேர்தல் ஆணையத்தின் தற்போதைய ஆணையர் ஞானேஷ் குமார் “பிழை நிகழ்ந்துள்ளது” என ஒப்புக்கொண்டார். ஆனால், அதை சரி செய்யும் நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே உள்ளன.
அரசு அதிகாரிகளும், தேர்தல் ஆணையமும், “முன்னாள் அதிகாரிகள் செய்த தவறுகள்” என்ற காரணத்தைச் சொல்லிக் காப்பாற்ற முயல்கின்றன. ஆனால், இத்தகைய தவறுகள் தேர்தல் தகுதியை மறுக்கும் அளவுக்கு தீவிரமானவை என்றால், அதை அலட்சியமாக பார்க்க முடியாது.
வரலாற்று ஒப்புமை –
ஜனநாயக நம்பிக்கையின் சிதைவு
மம்தா மேற்கு வங்க முதலமைச்சர் ஆவதற்கு முன்னர், “அறிவியல் முறையில் திரித்த தேர்தல்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அரசின் செயலகம் (Writers’ Buildings) நோக்கி ஊர்வலம் சென்ற வரலாற்று தருணத்தை ஷிகா முகர்ஜி நினைவூட்டுகிறார்.
இன்று அதே நிலை இந்திய தேர்தலிலும் மீண்டும் உருவாகி விட்டது. வாக்காளர் அடையாளங்கள் பெயர், முகவரி மட்டுமின்றி ஒளிப்படங்கள், வாக்கா ளர் அடையாள அட்டையின் (EPIC) எண்கள் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், பிழைகள் பெருகியுள்ளன. சில இடங்களில் ஒரே நபரின் ஒளிப்படம் நூற்றுக்கணக்கான பெயர்களில் இடம்பெற்றுள்ளது.
சட்டத்தின் பெயரில் அரசியல் தூய்மை?
தேர்தல் ஆணையம் தற்போது “தூய்மையான வாக்காளர் பட்டியல்” உருவாக்கப் போவதாக அறி வித்துள்ளது. ஆனால், “தூய்மை” என்ற இந்த வார்த்தை ஆபத்தானதாக மாறுகிறது — ஏனெனில் அது சில சமூகங்கள், குடியேற்றங்கள், சிறுபான்மையினரை வெளியேற்றும் அரசியல் கருவியாக பயன்படும் அபாயம் உள்ளது.
மேற்கு வங்கம் போன்ற இடங்களில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பில் ஆணையம் மிகக் கடுமையாக நடக்கிறது. ஆனால், பாஜக ஆட்சி மாநிலங்களில் அதே ஆணையம் “பிழைகள் எதுவும் இல்லை” என அலட்சியம் காட்டுகிறது. இதுவே ஷிகா முகர்ஜியின் முக்கிய குறிப்பு —
“ஒரு பத்தாண்டுகளில் பிழைகளுடன் இருந்த தேர்தல் முறைமையை திடீரென ‘தூய்மை’ என்ற பெயரில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாது.”
சமூக-அரசியல் விளைவுகள்
இந்த தீவிர திருத்தம் (SIR) நாடு முழுவதும் பரவியபோது, பன்முக சமூகங்களின் வாக்குரிமை ஆபத்தில் உள்ளது. பெரும்பாலான கூலி தொழிலா ளர்கள், குடியேற்றக்காரர்கள், தாழ்த்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
பெரியளவில் மீளாய்வு செய்யப்படாமல் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம், “வாக்குரி மையின் மேன்மையேயே” சிதைக்கும் அளவுக்கு ஆபத்தானது.
‘தூய்மையான தேர்தல் பட்டியல்’ என்ற பெயரில் அரசியல் பிழைகள்
“தூய்மை” என்ற வார்த்தை தேர்தலில் நேர்மை, நம்பிக்கை, நியாயம் என்ற அடையாளமாக இருக்க வேண்டியது. ஆனால் இன்று, அது அடையாள நீக்கம் என்ற அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது.
தேர்தல் அதிகாரிகளின் பிழைகள், வாக்காளர் அட்டைகளில் தவறான இணைப்புகள், மற்றும் மீண்டும் மீண்டும் இடம் பெறும் ஒளிப்படங்கள் அனைத்தும் அமைப்பின் ஊழல் நிலையை வெளிப்படுத்துகின்றன.
இத்தகைய சூழலில், தேர்தல் ஆணையம் “நேர்மை” பற்றி பேசுவது தன்னையே கிண்டல் செய்வது போல் உள்ளது.
ஷிகா முகர்ஜி எழுத்து மிகத் தெளிவாக ஒரு கேள்வியை முன் வைக்கிறது —
“பத்தாண்டுகள் கடந்த பிழைகளை சரி செய்யாத ஆணையம், திடீரென ‘தூய்மையான தேர்தல் பட்டியல்’ என்ற பெயரில் ஜனநாயக நம்பிக்கையை மீட்டெடுக்க முடியுமா?”
அவரின் பதில் தெளிவானது:”முடியாது” என்பது தான்.
ஒரு பிழையான முறைமையை திருத்தாமல் “புதிய பெயரில்” மறைப்பது, ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பாதிக்கும், என சிகா முகர்ஜி குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
(ஆதாரம்: ஷிகா முகர்ஜி எழுதிய கட்டுரை,
‘டெக்கான் கிரானிக்கல்’, 11 நவம்பர் 2025)
தமிழில்: குடந்தை கருணா
