வாசிங்டன், நவ.12- ரசியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்திய நாடு நிறுத்தியுள்ளதால் அந்நாடு மீது விதிக்கப்பட்ட அதிகபட்ச வரி குறைக்கப்படும் என டிரம்ப் கூறினார்.
வர்த்தக ஒப்பந்தம்
ரசியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார்.
இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செய்யப்படும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது.
இருந்தாலும் ஒருபுறம் அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்துகொண்டு இருக்கிறது. அமெரிக்காவுக்கும்,
இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்துக்காக இதுவரை 5 சுற்று பேச்சு வார்த்தைகள் நிறைவடைந்துள்ளன.
இறுதிக்கட்டத்தில்…
ரசியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில் தற்போது ஓரளவு ரசியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஓவல் அலுவலகத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் பதவியேற்றார். அவருக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அந்த விழாவில் டிரம்ப் பேசியதாவது:-
பிரதமர் மோடியுடன் செர்ஜியோ கோர் ஏற்கெனவே நட்பு உறவை வளர்த்து கொண்டார். அவரது பதவிக்காலம் இந்தியா-அமெரிக்க இடையேயான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும். நாங்கள் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். கடந்த காலத்தில் இருந்ததை விட இது மிகவும் வித்தியாசமான ஒப்பந்தம். இந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தின் மிக அருகில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
இந்தியா என்னை நேசிக்கும்
இந்தியாவில் உள்ள 150 கோடி மக்கள் இப்போது என்னை நேசிக்கவில்லை. அவர்கள் மீண்டும் என்னை நேசிப்பார்கள். இப்போது ரசியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது காரணமாக இந்தியா மீது விதிக்கப்பட்ட வரிகள் மிக அதிகமாக உள்ளன.
தற்போது அவர்கள் ரசியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளனர். கச்சா எண்ணெய் வாங்குவது மிகவும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் இந்தியா மீது விதிக்கப்பட்ட அதிக வரிகளை குறைக்க போகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
