சீர்மிகு பயன் தரும் சிங்கப்பூர் நாட்கள்!

6 Min Read

90 ஆண்டு காணும் ‘தமிழ் முரசு’ பணியகத்தைப் பார்வையிட்ட
91 ஆண்டு காணும் ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியர்!
சான்றோர் பெரு மக்களுடன் சந்திப்பு – உரையாடல்!

ஆசிரியர் உரை

ஆசிரியர் உரை

சிங்கப்பூர் நாட்டின் 60-ஆம் ஆண்டு விழாவை யொட்டி, சிங்கப்பூர்த் தமிழர் கலைக் களஞ்சியம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது

மின் புதையலாகக் கண்முன் நிற்கும்
காலப் பெட்டகம்

சிங்கப்பூருக்குப் பெருமைசேர்த்த தமிழர்கள், வரலாற்றுப் பொன்னேட்டில் தங்கள் பெயர் பொறித்த தலைவர்கள், அரசியல், மொழி, உணவு, பரவலாகக் காணப்பட்டு பிறகு அருகிப் போன தமிழ் மக்களின் வாழ்க்கைத் தொழில்கள், தமிழர்கள் கோலோச்சிய விளையாட்டுத் துறை, கலையுலகில் அவர்கள் முன்னெடுத்து நிகழ்த்திக் காட்டிய புதுமைகள்  உள்ளிட்ட பலவற்றைக் குறித்தும் இந்தக் கலைக் களஞ்சியத்தில் செய்திகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்ச் சமூகம் வாழ்ந்த கதை, வீழ்ந்த தருணம், ஆளுமைகள், அதிபர்கள் வென்ற வரலாறு, சாதித்த தமிழினம் என  அடிமட்டநிலையிலிருந்து அரசியல் அரியணை வரை மின்புதையலாகக் கண்முன் நிற்கும் காலப் பெட்டகமாகத் திகழும் இக் கலைக் களஞ்சியத்தின் ஆசிரியராகச் சிறப்பாகச் செயலாற்றியவர் பேராசிரியர் அருண் மகிழ்நன் ஆவார். கடந்த ஆண்டு இவரது “ஊர் திரும்பியவர்கள், வேர் ஊன்றியவர்கள்” புத்தகத்தி னைக் குறித்து சிங்கப்பூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் அருண் மகிழ்நனுக்குத்
தமிழர் தலைவர் சிறப்பு!

இந் நிலையில், சிங்கப்பூர் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, ஆய்வாளர் பேராசிரியர் அருண் மகிழ்நன் அவர்களும், ‘தமிழ் முரசு’ நாளேட்டின் ஆசிரியர் த.ராஜசேகர் அவர்களும் 10.11.2025 அன்று சந்தித்து உரையாடினர், அப்போது, வரலாற்று ஆவணமாக “சிங்கப்பூர்த் தமிழர் கலைக் களஞ்சியத்”தினை உருவாக்கியுள்ள பேராசிரியர் அருண் மகிழ்நன் அவர்களுக்கு, அவருடைய அரும் பணியைப் பாராட்டித் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார். கடந்த 2024-ஆம் ஆண்டு பொறுப்பேற்று, ‘தமிழ் முரசு’ நாளேட்டைத் திறம்பட நடத்திவரும் அதன் ஆசிரியர் த.ராஜசேகர் அவர்களுக்கும் பாராட்டு தெரிவித்துத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புச் செய்தார். அவர், ‘தமிழ்முரசு’ நாளேட்டின் 90 ஆண்டுகள் வரலாறு குறித்த மலரினைத் தமிழர் தலைவர் அவர்களுக்கு வழங்கினார்.

மேலும், ‘தமிழவேள்’ கோ.சாரங்கபாணி அவர்களது வாழ்க்கை, தொண்டறம், சாதனைகளைப் பதிவு செய்யும் அடுத்தத் திட்டம் குறித்து எடுத்துரைத்த அருண் மகிழ்நன் அவர்கள், “தமிழவேளைப் பார்த்துப் பழகி, அவரால் மதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர் மட்டுமே இன்றைக்கு எஞ்சியிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் தாங்கள். எனவே தங்கள் அனுபவங்களும் இதில் இடம்பெற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். பெருமகிழ்வுடன் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அதற்கு ஒப்புதல் வழங்கினார்.

ஆசிரியர் உரை

ஆசிரியர் உரை

‘தமிழ் முரசு’ அலுவலகத்தில்
தமிழர் தலைவர்

‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘தமிழ் முரசு’ அலுவலகத்திற்கு வருகை தரவேண்டும் என்று ஆசிரியர் த.ராஜசேகர் அவர்கள் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பையேற்று, நேற்று (11.11.2025) காலை 10.30 மணியளவில் தொ பாயா பகுதியில் அமைந்துள்ள, சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனக் கட்டடத்திலிருக்கும் ‘தமிழ்முரசு’ நாளேடு அலுவலகத்திற்கு, ‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சென்றார்.

அவரை மகிழ்வுடன் ‘தமிழ் முரசு’ ஆசிரியர் த.ராஜசேகர், செய்தி ஆசிரியர் இர்ஷாத் முகம்மது, ‘தப்லா!’ ஆங்கில வாரச் சிறப்பிதழின் ஆசிரியர் வெங்கடேஸ்வரன் என்ற வெங்கா சுப்பிரமணியம், தலைமைத் துணை ஆசிரியர் குணாளன் ஆகியோர் வரவேற்றனர்.

‘தமிழவேள்’ கோ.சாரங்கபாணி அவர்கள் காலத்தி லிருந்து எப்போது சிங்கப்பூர் வந்தாலும் தவறாமல் வரக் கூடிய இடமாகத் ‘தமிழ் முரசு’ அலுவலகம் இருந்ததையும், சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதன் அலுவலகத்திற்கு வருவதையும், அதிலும் இந்த புதிய அலுவலகத்தின் சிறப்பைப் பற்றியும், அதன் மாற்றங்கள் பற்றியும் மகிழ்வுடன் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அவர்களிடம் தெரிவித்தார்.

பல்வேறு வரலாற்று நிகழ்வுகளையும், தந்தை பெரியார், தமிழவேள் கோ.சாரங்கபாணி, சிங்கப்பூர் அ.சி.சுப்பையா ஆகியோரைக் குறித்த செய்திகளையும், ‘விடுதலை’ நாளேட்டின் அந்நாள் நினைவுகளையும் அனைவருடனும் ‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி பகிர்ந்து கொண்டார். புதிதாகப் பத்திரிகைத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இணையதளத்தின் புதுமைகள், செயற்கை நுண்ணறிவின் வருகை ஏற்படுத்தும் தாக்கம், பல்வேறு ஊடகங்கள் குறித்தும் அனைவருடனும் கலந்துரையாடினார். புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியிருப்பது குறித்து ‘தமிழ்முரசு’ ஆசிரியர்  குழுவினர் எடுத்து ரைத்தனர்.

1968-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிங்கப்பூருக்குத் தான் வந்து திரும்பவிருந்த நேரத்தில், ‘தமிழ்முரசு’ நாளேட்டின் நிறுவன ஆசிரியர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் ஆணைக்கிணங்க, அதன் ஞாயிறு இதழுக்காக, அந்நாளைய செய்தியாளர் தேவா தன்னை நேர்காணல் செய்ததையும், அது முழுப் பக்கம் இடம்பெற்றதையும் தமிழர் தலைவர் அவர்கள் நினைவுகூர்ந்தார்.

பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை செயல்படுத்திய முதல் நாடு சிங்கப்பூர்

எந்தக் கேள்வியும் கேட்கலாம் என்று கோ.சா அவர்கள் சொன்னதற்கேற்ப, பல்வேறு கேள்விகளுடன் ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக எடுக்கப்பட்ட அந்தப் பேட்டியில், “எல்லோரும் ஒரு விதமாக தமிழ் எழுத்தைப் பயன்படுத்தும்போது, நீங்கள் மட்டும் ‘விடுதலை’ ‘லை’ உள்பட சீர்திருத்த எழுத்துகளைத் தனித்துப் பயன்படுத்துகிறீர்களே, ஏட்டிக்குப் போட்டியாக நடப்பது பெரியார் இயக்கத்தின் பாணியா?” என்று அவர் கேட்ட கேள்விக்குத், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி அவருக்கு எடுத்துரைத்ததையும், 1930களில் தந்தை பெரியார், சிங்கப்பூர் அ.சி.சுப்பையா போன்றோர் முன்னெடுத்து, ‘விடுதலை’ ஏட்டில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட எழுத்துச் சீர்திருத்தத்தை, தந்தை பெரியார் நூற்றாண்டின்போது அன்றைய எம்.ஜி.ஆர் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏற்று ஆணையிட்டதையும், அதனை அப்படியே ஏற்றுச் செயல்படுத்திய முதல் நாடு சிங்கப்பூர் என்பதையும், நினைவூட்டி, இன்று அந்த எழுத்துச் சீர்திருத்தம் தான் ‘தமிழ் முரசு’ உள்பட உலகெங்கும் நடைமுறையில் இருப்பதையும், கணினி யுகத்திற்குப் பெரும் பலனளிப்பதையும் எடுத்துக் காட்டினார்.

‘தமிழ் முரசு’ நாளேட்டின் ஆசிரியர் குழுவினர், வடிவமைப்பாளர்கள், செய்திப் பிரிவினரையும், அவர்கள் நிகழ்த்தும் புதுமைகளையும் பாராட்டினார்.

ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்ட வருகையும், கலந்துரையாடலும் பெரும் பயனுடையதாக அமைந்தன. சிங்கப்பூர் தமிழர் மற்றும் இந்தியர் பற்றிய செய்திகளைத் தாங்கி வரும் ‘தப்லா!’ ஆங்கிலச் சிறப்பிதழின் தேவை குறித்தும், சிங்கப்பூர் நாட்டில் அனைவரும் சமமாக நடத்தும் மொழிக் கொள்கையின் உருவாக்கம் குறித்து  நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ அவர்கள் தெரிவித்த கருத்துகள் குறித்தும் ஆசிரியர் அவர்கள் எடுத்துச் சொல்லி மகிழ்ந்தார்.

ஆசிரியர் உரை

தமிழ் முரசு ஆசிரியர் குழுவுடன் தமிழர் தலைவர் கலந்துரையாடல்

20 முதல் 180 வரை காண முடிகிறது

“20-ஆம் ஆண்டைக் கண்டுள்ள சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம்; 60-ஆம் ஆண்டு விழாவைக் காணும் சிங்கப்பூர் நாடு, 90 ஆண்டுகளைக் கொண்டாடும் ‘தமிழ் முரசு’ 91-ஆம் ஆண்டில் நடை போடும் ‘விடுதலை’, அதன் 63 ஆண்டு ஆசிரியராக இருக்கும் 92 வயது நான்” என்று வயதுகளை அடுக்கிக் காட்டிய தமிழர் தலைவர் அவர்கள், அதே கட்டடத்தில் இயங்கிவரும் சிங்கப்பூர் ’தி ஸ்டிரைட் டைம்ஸ்’ ஏடு 180-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுவதையும் சுட்டிக் காட்டி, 20 முதல் 180 வரை இங்கே பார்க்கிறோம் என்று சொன்னபோது, வயதைக் கடந்து அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

தமிழர் தலைவர் அவர்களுடன் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் க.பூபாலன், உறுப்பினர் கவிதா மாறன், திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

இன்றும் கற்றார், இனியும் கற்பார் ‘ஆசிரியர்!’

நாளும் புதுமை கற்கும் மனம் தானே அவரை 93 வயதிலும் இளமையாகவே வைத்திருக்கிறது! “இங்கேயிருந்து கற்றுக் கொண்டு போகவே நான் வந்தேன். நிறைய கற்றிருக்கிறேன்; பெற்றிருக்கிறேன். அந்தப் புதுமைகளை எங்கள் ஏடுகளிலும் நடைமுறைக்குக் கொண்டுவருவோம்” என்று ஆசிரியர் கூறியதைக் கேட்டு அனைவரும் நெகிழ்ந்தனர். இன்றும் கற்றார், இனியும் கற்பார் ‘ஆசிரியர்’! அவர் கற்றவை, கற்பவை எல்லாம் நாம் பயன் பெற்றுக் கொள்வதற்குத் தானே!

– நமது சிறப்புச் செய்தியாளர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *