சென்னை, நவ.11- காவல்துறையில் காலியாக உள்ள 3,644 இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு 9.11.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் 45 மய்யங்களில் நடந்தது. இந்த தேர்வை பெண்கள் உட்பட 2.25 லட்சம் பேர் எழுதினர்.
சென்னையில் 10 மய்யங்களில் மொத்தம் 8 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 2,833 இரண்டாம் நிலை காவலர் பணியிடம், சிறைத்துறையில் 180 இரண்டாம் நிலை காவலர் பணியிடம், தீயணைப்புத்துறையில் 631 பணியிடங்கள் என மொத்தம் 3,644 காலிப்பணிடங்களுக்கு, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அறிவிப்பு வெளிட்டது.
பின்னர் தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வுக்கு பட்டதாரிகள், பொறியாளர்கள் என மொத்தம் 2.50 லட்சம் பேர் இணையவழி மூலம் விண்ணப்பித்திருந்தனர். தமிழை ஒரு மொழி பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் மட்டுமே இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதன்படி விண்ணப்பங்கள் சரிபார்ப்பதை தொடர்ந்து 2.25 லட்சம் பேருக்கு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கியது. அதனைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் என 38 மாவட்டங்களில் மொத்தம் 45 தேர்வு மய்யங்களில் 9.11.2025 அன்று இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு தொடங்கியது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் செய்துள்ளது. தேர்வு நடக்கும் மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர்களாக அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாநகரங்களில் மாநகர ஆணையர்கள் மற்றும் 4 மண்டல காவல்துறை தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுத தகுதியானவர்களுக்கு அனுப்பட்ட விண்ணப்பதாரர்கள் காலை 8 மணிக்கு தேர்வு மய்யம் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் 9.11.2025 அன்று அதிகாலை 6 மணிக்கே விண்ணப்பதாரர்கள் தேர்வு மய்யங்கள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பின்னர் தேர்வு மய்யத்திற்குள் சரியாக 8 மணியில் இருந்து 9.30 வரை தேர்வு மய்யத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளுடன் வந்த பெண்கள் தங்களது குழந்தைகளை கணவன் மற்றும் உறவினர்களிடம் கொடுத்துவிட்டு தேர்வு மய்யத்திற்குள் சென்றனர். தேர்வு மய்யங்களில் முறைகேடுகளை தடுக்க தேர்வு நடைபெறும் வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு வளாகத்தில் 2 முதல் 3 நபர்கள் தேர்வுகளை கண்காணித்தனர்.
தேர்வு நடக்கும் பகுதி அருகே காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொண்டனர். காலதாமதமாக வந்த யாரையும் காவல் துறையினர் தேர்வு மய்யத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு எளிமையாக இருந்ததாகவும், சில வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். இந்த எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்று சரிபார்ப்பு நடைபெறும் என சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
