சிம்லா, நவ.11- இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் இளம் பெண், தன்னை சிறுவயதில் மிரட்டி பாலியல் வன்முறை செய்ததாக, பா.ஜ.க. – சட்டமன்ற உறுப்பினர், ஹன்ஸ் ராஜ் மீது புகார் அளித்த நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில், முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சம்பா மாவட்டத்தில் உள்ள சுரா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பா.ஜ.க.வைச் சேர்ந்த ஹன்ஸ் ராஜ், 42, உள்ளார். மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர் மீது, ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் பெண் ஒருவர் சமீபத்தில் புகார் தெரிவித்தார்.
அதில், ‘நான் சிறுமியாக இருந்தபோது என்னை சட்டமன்ற உறுப்பினர் ஹன்ஸ் ராஜ் மற்றும் அவரது உதவியாளர்கள் மிரட்டி பாலியல் வன்முறை செய்தனர்.
இது தொடர்பாக என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. இதுபற்றி வெளியே தெரிவித்தால், என் குடும்பத்தினரை கொன்று விடுவதாக மிரட்டினர்’ என, குறிப்பிட்டிருந்தார்.
இது, சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, ‘என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; அரசியல் உள்நோக்கம் கொண்டவை’ என, சட்டமன்ற உறுப்பினர் ஹன்ஸ் ராஜ் தெரிவித்தார்.
இதற்கிடையே, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது உதவியாளர்கள் மீது அப்பெண்ணின் தந்தை காவல் துறையில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சட்டமன்ற உறுப்பினர், உதவியாளர்கள், அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை கடத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர், மற்றும் அவரது உதவியாளர்கள் மீது போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
