ராமநாதபுரம், நவ.11– ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மது நூஹ் (44) என்ற கடல் விவசாயி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடலில் விவசாயம் செய்து, நிலத்தில் மட்டுமல்லாமல் கடலிலும் விவசாயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்.
மீன் குஞ்சுகள்
மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் மீன்வளம் குறைந்ததால், மீனவர்கள் மாற்றுத் தொழிலுக்குச் செல்லும் நிலையில், மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் (CMFRI) பயிற்சியைப் பெற்று இவர் கடல் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடற்கரையில் இருந்து 100 மீட்டர் முதல் 2 கி.மீ. வரை கடலில், 6 மீட்டர் சுற்றளவுள்ள மிதவைக் கூண்டுகளை இரும்பு மற்றும் பாலி எத்திலினைக் கொண்டு அமைத்து, அதில் 7 மீட்டர் ஆழத்தில் வலையை அமைக்க வேண்டும். ஒரு கூண்டில் 25 கிராம் எடை கொண்ட அதிகபட்சமாக 1,000 கோபியா மற்றும் கொடுவா மீன் குஞ்சுகளை விடலாம்.
மீன் குஞ்சுகளுக்குப் புழுக்கள், பாசிகள், சிறிய மீன்கள் உணவாக அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மீனும் 10 மாதங்களில் $1.5$ முதல் $2$ கிலோ வரை வளரும். ஒரு கிலோ மீன் அதிகபட்சம் ரூ.450 வரை விலை போகும். 10 மாதத்தில் ஒரு கூண்டுக்கு ஒரு டன் மீன் மகசூல் எடுக்கலாம்.
ஒரு கூண்டுக்குச் செலவு போக சுமார் ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.
கோபியா மீன்களுக்கு உலக அளவில் அதிக கிராக்கி உள்ளதுடன், புரதச்சத்து நிறைந்தவை. கொடுவா மீனை விட கோபியா மீன்கள் அதிக லாபம் தரக்கூடியவை, வேகமாகவும் வளரக்கூடியவை.
ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் மீன் வளர்ப்புடன் கடல் பாசியையும் வளர்க்கிறார். மூங்கில்களை சதுர/செவ்வக வடிவில் மிதவைகளாகச் செய்து, நார்/நைலான் கயிறுகளில் பாசியின் நாற்றை வைத்து, கல் நங்கூரம் துணையுடன் கடலில் மிதக்கவிட வேண்டும்.
ஒரு கிலோ ‘கப்பா பைக்கஸ்’ என்ற கடற்பாசியைக் கயிறில் கட்டிப் போடும்போது, ஒன்றரை மாதத்தில் அதிகபட்சம் 10 கிலோ வரை வளர்ந்து மகசூல் கொடுக்கிறது.
உலர வைக்கப்பட்ட பாசி, ரகத்திற்கு ஏற்ப கிலோ ரூ100 முதல் ரூ120 வரை விற்பனையாகிறது. மாதம் 300 கிலோ உற்பத்தி செய்யும் ஒருவர் குறைந்தபட்சம் ரூ25,000 வரை வருமானம் ஈட்ட முடியும்.
கடல் பாசிகள் உணவு பதப்படுத்துதல், ஊறுகாய், அய்ஸ்கிரீம், பால் பொருட்கள், ஜெல்லி, பானங்கள், வாசனைப் பொருட்கள், கால்நடைத் தீவனங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படுகின்றன.
