சென்னை, நவ.11- மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், அய்.எஸ்.அய்.எஸ். அமைப்பு மற்றும் அல்-கொய்தா அமைப்புகளால் பல்வேறு இடங்களிலும் வன்முறை பரவி காணப்படுகிறது. அவர்கள் மக்களிடையே வன்முறையை பரப்புவதுடன், வெளிநாட்டு தொழிலாளர்களை கடத்துவதும், மிரட்டி பணம் பறிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில், 5 இந்தியர்களை ஆயுதம் ஏந்திய குழு ஒன்று கடந்த 6ஆம் தேதி கடத்தி சென்றுள்ளது. மேற்கு மாலியின் கோப்ரி பகுதியருகே தனியார் மின் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த இந்திய தொழிலாளர்கள் 5 பேரை அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுவினர் கடத்தி சென்றனர்.
இந்நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது;
கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்கு ஆப்ரிக்கா – மாலி நாட்டில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மற்றும் தென்காசியை சேர்ந்த பொன்னுதுரை, புதியவன், பேச்சிமுத்து, இசக்கிராஜா மற்றும் தளபதி சுரேஷ் ஆகிய அய்ந்து தொழிலாளர்கள், அந்த நாட்டிலுள்ள ஆயுத குழுவால் கடத்தப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடத்தப்பட்டிருக்கும் அத்தொழிலாளர்களை மீட்டு, அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
வெளிநாட்டு மருத்துவப் பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை
தமிழ்நாட்டில் வாய்ப்புகள் அதிகம்
அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சென்னை, நவ. 11- மருத்துவச் சேவைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு ஒருங்கிணைந்த சிகிச்சைகளை (Integrated Treatments) வழங்குவதற்கான கட்டமைப்பும், வளங்களும் இங்கு அதிகமாக உள்ளதாகப் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கருத்தரங்கு
சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்க் ஹெல்த் (Sing Health) மற்றும் குளோசெல் (Glocell) நிறுவனங்களின் சார்பில் சென்னையில் 9.11.2025 அன்று நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், நூற்றுக்கணக்கான மருத்துவத் துறையினரும் பங்கேற்றனர். சிங்கப்பூர் துணைத் தூதர் எட்கார் பாங் சே சியாங், சிங்கப்பூர் மருத்துவர்கள் ஷெபாலி டாகோர், ஜி ஷங் வைய் மார்க் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சுகாதார சவால்கள்
கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:
மருத்துவச் சேவைகளை வழங்குவதில் பிற மாநிலங்களுக்குத் தமிழ்நாடு முன்னோடியாக விளங்கி வருகிறது. சர்க்கரை நோய், உடல் பருமன் கொண்டவர்களுக்கு விசா கிடையாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததிலிருந்து, வாழ்க்கை முறை நோய்கள் (Lifestyle Diseases) குறித்த அச்சம் உலகம் முழுவதும் நிலவுவது உணரப்படுகிறது.
உண்ணும் உணவிலும், குடிநீரிலும் நச்சுகள் கலந்திருப்பது கவலை அளிக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கையாள்வது குறித்த புரிதல் விவசாயிகளுக்கு இல்லை. உணவு, காற்று, நீர் ஆகியவை நஞ்சாக மாறுகிறது. மற்றொருபுறம் மனித மனங்களும் நஞ்சாக மாறி வருகிறது. மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இணையதள விளையாட்டுகள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு அடிமையாவதே இதற்குக் காரணம்.
சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களைச் சரிபார்க்காமல் அடுத்தவருக்கு அனுப்பும் போக்கு அதிகரித்துள்ளது. பொய்யான தகவல்களால் பாதிப்புக்குள்ளாகும் நபரின் மனநிலை குறித்து யாரும் சிந்திப்பதில்லை; இந்த நிலை மாற வேண்டும்.
அலோபதி சிகிச்சையில் மட்டுமல்லாமல், பாரம்பரியமிக்க சித்த மருத்துவத்திலும் சிறந்த கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டைத் தமிழ்நாடு கொண்டுள்ளது.
எனவே, வெளிநாடுகளில் இருந்து சிகிச்சைக்காக வருவோருக்கு, அலோபதியுடன் சித்தாவையும் இணைத்து ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்க சிங்க் ஹெல்த் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் கவனம் செலுத்தலாம். அதற்கான வாய்ப்புகளும், வளங்களும் இங்கு அதிகமாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.
