சிங்கப்பூர்: பெரியார் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

27 Min Read

சிறிய நாடான சிங்கப்பூர் பல நாடுகளுக்கு ஆசானாகத் திகழ்கிறது என்றால்,
தந்தை பெரியார் அதற்கு அடித்தளமிட்டார்;
பெரியார் சமூக சேவை மன்றம் அந்தப் பணியைத் தொடருகிறது!

சிங்கப்பூர்,  நவ.11-   சிறிய நாடான சிங்கப்பூர் பல நாடு களுக்கு ஆசானாகத் திகழ்கிறது என்றால், பெரியார் அதற்கு அடித்தளமிட்டார்; பெரியார் சமூக சேவை மன்றம் அந்தப் பணியைத் தொடருகிறது! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents

சிங்கப்பூரில் பெரியார் விழா – 2025!

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் 20 ஆம் ஆண்டு விழாவும், சிங்கப்பூர் நாட்டின் 60 ஆம் ஆண்டு விழாவும் இணைந்து இவ்வாண்டு ‘பெரியார் விழா’ – 2025, 9.11.2025 அன்று மாலை 6 மணியளவில், சிங்கப்பூர்  உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் கொண்டாடப்பட்டது. “பெரியாரும்- சிங்கப்பூரும்” என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார் . அவரது சிறப்புரை வருமாறு:

தந்தை பெரியாருடைய
சுயமரியாதைக் கொள்கைகள்

சிங்கப்பூர் நாட்டில் 70 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு நல்ல, ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’, ‘‘எல்லோருக்கும் எல்லாமும்’’ என்ற சிறப்பான, அனைவரையும் அணைத்து, அனைவ ருக்கும் பெருமை சேர்க்கக் கூடிய அளவில், சமூகத்தி னுடைய எந்தப் பிரிவையும் யாரும் ஒதுக்கிவிடக் கூடாது. மதம், ஜாதி இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, எல்லாவற்றிலும் மனித குலத்தினுடைய மாண்பு, உலகம் ஓர் குலம் என்பதை மய்யப்படுத்தி, தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதைக் கொள்கை களை, மானுடப் பற்றுதான் நமக்கு எல்லாமே என்று சொல்லக்கூடிய அளவிற்கு உருவாக்கிய பெரியார் சமூக சேவை மன்றத்தின் 20 ஆம் ஆண்டு விழா வான இந்த விழாவில், அற்புதமான நிகழ்ச்சிகளை இதுவரை கண்டு சிறப்பிக்கின்ற இந்த அரங்கத்தில், இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள  அல்ஜூனிட் குழுத்தொகுதி அடித்தள அமைப்பின் ஆலோசகரும், வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கக்கூடியவருமான அருமை இளைஞர் திரு. ஜெக தீஸ்வரன் ராஜு பிபிஎம் அவர்களே,

பெரியார் சமூக சேவை மன்றத்தின்
20 ஆம் ஆண்டு!

இந்நிகழ்விற்குச் சிறப்பாக தலைமையேற்றும், வரவேற்புரையாற்றியும், பெரியார் சமூக சேவை மன்றம் இனிமையாக நடக்கக்கூடிய ஒரு பெரிய வாய்ப்பையும் உருவாக்கிக் கொண்டிருக்கக் கூடிய, இவ்விழாவை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய ஆற்றல்மிகு அதனுடைய தலைவர் பொறியாளர் க.பூபாலன் அவர்களே,

முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய பெரியார் சமூக சேவை மன்றத்தின் மதியுரைஞர்கள் தமிழறிஞர் முனைவர் அய்யா சுப.திண்ணப்பனார் அவர்களே,

அதேபோல, இந்த அமைப்பை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்தது மட்டுமல்லாமல், இன்னமும் இந்த அமைப்பைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டிருக்கக் கூடிய அருமைத் தோழர் வீ.கலைச்செல்வம் அவர்களே,

இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, பெருமை கொள்ளக்கூடிய ஒரு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ‘பெரியார் விருது’ வழங்குதல் ஆகும்.

மூத்த எழுத்தாளர் மு.அ.மசூது அவர்களுக்கு ‘பெரியார் விருது!’

இதுவரையில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், பெரியார் விருது, தகுதி உள்ளவர்களுக்கு – ‘இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து’ என்பதைப்போல, முழுத் தகுதி உடையவர்களை அடையாளம் காணுவதில் பெரியார் சமூக சேவை மன்றம் என்றைக்குமே மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான ஒன்று என்ற பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கக்கூடிய இந்த அமைப்பின் சார்பாக, இந்த ஆண்டு ‘பெரியார் விருது’ பெற்ற, கல்வியாளரும், மூத்த எழுத்தாளருமான பெருமைக்குரிய திரு. மு.அ.மசூது அவர்களே,

அதேபோல, ‘பெரியார் பெருந்தொண்டர் விருதை’ப் பெற்ற சு.தெ.சுசீலா அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்தரங்கம் என்ற பெயரால், மாணவக் கண்மணிகள், இளைஞர்கள் மிக அற்புதமான உரையை இங்கே ஆற்றியிருக்கிறார்கள்.  அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக, முன்னுதாரணமாக இருக்கிறது பெருமைமிகு சிங்கப்பூர்!

இந்த பெரியார் சமூக சேவை மன்றம், 20 ஆண்டு களில் என்ன சாதித்தது?

ஒரு நவீன சிங்கப்பூர் – மற்றவர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய சிங்கப்பூர் நாடு 60 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. மற்ற நாடுகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக சிங்கப்பூர் சிறப்பாக இருக்கிறது. உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக, முன்னுதாரணமாக இருக்கிறது பெருமைமிகு சிங்கப்பூர்  – அதனுடைய 60 ஆவது ஆண்டு என்று சொன்னால், அந்த 60 ஆண்டு காலத்தினுடைய சிறப்புகளை, வாய்ப்புகளை முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.  இந்த நிகழ்ச்சிக்கு என்ன விளைச்சல்? இது எந்த அளவிற்குப் பயன்பட்டு இருக்கிறது?

பெரியாரும், அவருடைய கொள்கைகளும் எந்த அளவிற்கு இந்த இளைஞர்களைப் பக்குவப்படுத்தி இருக்கிறது? அதை எந்த அளவிற்கு இந்த நாடு ஊக்கப்படுத்துகிறது? இளைஞர்களை உற்சாகப்படுத்து கிறது? என்ற இரண்டையும் இணைத்து, 20-ம், 60-ம், 30-ம் என்று சேரக்கூடிய அளவில், அந்த வாய்ப்புகளை இங்கே காட்டியிருக்கிறார்கள்.

வியக்க வைக்கும் கருத்தரங்கம்!

விஜயகுமார், அருள் ஆஸ்வின், பிலவேந்தர்ராஜ் சுந்தர், ஆரோக்கியராஜ், செல்வி. நரசிம்மமூர்த்தி தமிழ்மதி ஆகியோர் அதனுடைய அடிப்படையாகத்தான் கருத்தரங்கத்தினை மிக அற்புதமாக நடத்தியிருக்கி றார்கள்.

பெரியாருடைய அறிவு என்றால், எந்த அளவிற்கு உச்சகட்டத்திற்கு, செயற்கை அறிவு நுண்ணறிவு- பகுத்தறிவினுடைய அடுத்த கட்டம் நுண்ணறிவுதான் என்று மிகப்பெரிய அளவிற்கு, ‘‘அறிவை விரிவு செய் – அகண்டமாக்கு – விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை’’ என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்களே, அதைச் சிறப்பாகக் காட்டக்கூடிய வகையில் இங்கே நடைபெற்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் சிறப்பாக இருந்தன.

மதியழகனின் தயாரிப்பில்
நாட்டிய நிகழ்ச்சி!

அதோடு இன்னொரு சிறப்பையும் குறிப்பிட வேண்டும். நாட்டிய நிகழ்ச்சியை, மதியழகன் அவர்கள், இசைப்பாடகராக, கவிஞராக இருந்து அவரே தயாரித்து இங்கே நடத்தியதைப் பார்த்தபோது, எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெற்றோம் நாம். அந்த நிகழ்ச்சியை நடத்தியமைக்காக அவருக்கு நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில்கூட இப்படி ஒரு சுருக்கமான நேரத்தில், இவ்வளவு அழகாக செய்திருப்பார்களா என்று சொல்ல முடியவில்லை.

‘‘ஆடற்கலைக்குத் அழகு தேடப் பிறந்தவள்,

ஆடாத பொற்பாவை ஆட வந்தாள்!

என்னோடு ஆட வந்தாள்!

மகிழ்ந்து ஆட வந்தாள்!’’ என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொல்வார்கள்.

10 நிமிடங்கள் என்றுதான் சொன்னாலும், எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் கேட்கலாம்.

ஆசிரியர் உரை

பெரியார் என்ன செய்தார்?

பெரியார் என்ன செய்தார்? என்பதற்கு இதைத்தான் செய்தார் என்று சொல்வதற்கு இளைஞர்கள் மத்தியில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி.

அதுபோலவே, பரிசுகள் வாங்கிய பிள்ளைகளை ஏராளமாகப் பார்த்தோம்.

சிறப்பான தலைப்பை எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள், ‘‘பெரியாரும் – சிங்கப்பூரும்’’ என்று.

பெரியாரும் – சிங்கப்பூரும் என்ன செய்தது என்பதை மேடையில் கண்டோம். பெரிய அளவிற்கு விளக்கங்கள், அறிவுரைகள், தேர்வுரைகள் கூட தேவையில்லை.

காட்சிகளும், அதனுடைய விளைச்சல்களும் மிகச் செழிப்பாக, செழுமையாக இருந்தன.

இந்த மகிழ்ச்சி எனக்கு உற்சாகத்தைத் தரு கிறது. என்னுடைய அருமைச் சகோதரர் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் இந்நிகழ்விற்கு வந்து கேட்டுக்கொண்டி ருக்கின்றார்.

சுப.வீ. அவர்கள் சிங்கப்பூருக்கு வருவதைவிட, அவருக்கு முன்னால், திராவிடப் பள்ளி வந்திருக்கிறது. திராவிடப் பள்ளியில் இங்கே ஏராளமானவர்கள் மாணவர்களாக இருக்கிறார்கள். இப்போதும் அவர் பேராசிரியர்தான்.

பெரியாருக்குப் பெருமை!
திராவிட இயக்கத்திற்குப் பெருமை!!

எனவே, இன்றும் அவருடைய மாணவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அதுதான் அவருக்குப் பெருமை. பெரியாருக்குப் பெருமை, திராவிட இயக்கத்திற்குப் பெருமை. அவரையும், அனைவரையும் வருக, வருக என்று சொல்லி என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏன், நான் வரவேற்புரையும் சேர்த்துச் சொல்கிறேன் என்று சொன்னால், நான் ஒரு பெரியார் பெருந்தொண்டன்.

‘‘பெரியாரின் பெருமைகளைப் பேசாத நாட்க ளெல்லாம் பிறவா நாட்கள்’’ என்று கருதக் கூடியவன். பெரியாரின் வாழ்நாள் மாணவன்.

எங்கெல்லாம் பெரியாருடைய தாக்கங்கள்,  பெரியாருடைய தாக்கங்கள் மட்டுமல்ல, நோக்கங்கள் நிறைவேறக்கூடிய அளவிற்கு இருக்கிறதோ, அதன்மூலம் விளைகின்ற ஆக்கங்கள் இருக்கின்றனவே, அந்த ஆக்கங்கள் எப்படிப்பட்டவை என்பதையும் புரிந்துகொள்ளக் கூடிய நல்ல வாய்ப்பு ஏற்படும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

இங்கே ஒரு காட்சி. அந்தக் காட்சியை உங்களுக் கெல்லாம் சொன்னால், மகிழ்ச்சியாக இருக்கும்.

இது ஒரு நல்ல விழா – குடும்ப விழா – கொள்கைக் குடும்ப விழா – பாசத்திற்குரிய விழா – வரலாற்றில் பதிவு செய்யவேண்டிய விழா!

20 ஆண்டுகாலம் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு ஓர் அமைப்பை நடத்துவது எளிதல்ல!

இந்த விழாவினுடைய வெற்றிக்கு அடை யாளம் என்னவென்றால், பெரியார் சமூக சேவை மன்றத் தோழர்களின் 20 ஆண்டுகால உழைப்புதான்.  ஓர் அமைப்பைத் தொடங்குவது என்பது எளிது. ஆனால், அந்த அமைப்பை 20 ஆண்டுகாலம் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு அதனைத் தொடர்ந்து நடத்துவது அவ்வளவு எளிதல்ல.

கண்டிப்பான, கட்டுப்பாடு மிகுந்த நாடு, சிங்கப்பூர். எனவே, இந்த நாட்டில், ஒழுங்கு முறையோடு, அதைச் சிறப்பாக, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்து, தக்கவர்களை அடையாளம் கண்டு, விருதுகளைக் கொடுத்து, அமைப்பைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு வரும்போது, இதனுடைய வெற்றி எங்கே இருக்கி றது என்று பார்த்தால்,  இன்றைய நிகழ்ச்சியே போதும்.

மாணவர்கள், இருபால் மாணவர்கள், பாலின வேறுபாடில்லாமல், இங்கே மாணவர்கள் பரிசு வாங்கினார்கள்.

நம்முடைய அய்யா கணேசன் அவர்கள்தான் பரிசுகளை வழங்கினார். பரிசு வாங்கிய பிள்ளை களின் முகமெல்லாம் உற்சாகத்தோடு இருந்தன.

முன்னேற்றத்தை நோக்கிப்
போய்க் கொண்டிருக்கிறது!

இளையோர், எவ்வளவுக்கெவ்வளவு சிறப்பாக இருக்கிறார்களோ, அந்த அளவிற்கு இந்த நாடு வள மையாக இருக்கிறது; முன்னேற்றத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது, வளர்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதற்கு அடையாளம்.

ஒளிப்படம் எடுப்பதற்காக எல்லோரையும் ஒன்று சேர்த்து வைத்திருந்தனர் இவ்வமைப்பின் தலைவர் பூபாலன், ஒருங்கிணைப்பாளர் செல்வி ஆகியோர்.

அதற்குப் பிறகு, ஒளிப்படம் எடுக்கின்றவரும், அவர்களும் சேர்ந்து, மாணவர்களையெல்லாம் பின்னால் தள்ளிவிட்டு, பின்னால் இருந்த எங்களை முன்னுக்குக் கொண்டு வந்தார்கள்.

இளைஞர்கள்தான், முதியோர்களை முன்னுக்குக் கொண்டு
வருகிறவர்கள்!

எங்களைப் போன்றவர்கள் முன்னுக்கு வர வேண்டும் என்று சொன்னால், அந்த இளை ஞர்களால்தான் அது முடியும்.

ஒரு காலத்தில், முதியோர்கள், இளைஞர்களுக்கு வழிவிட மாட்டார்களா? என்று கேட்டார்கள்.

ஆனால், இளைஞர்கள்தான், முதியோர்களை முன்னுக்குக் கொண்டு வருகிறவர்கள். எனவே, நீங்கள் பழைமையிலே ஊறித் திளைத்துக் கொண்டிருக்காதீர்கள். புதுமையைக் கண்டு நீங்கள் மருளாதீர்கள், அச்சப்படாதீர்கள், அதை வரவேற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த நிகழ்ச்சியும் இருந்தது.

60, 20, 80 அதைத் தாண்டிய 90 – இவை யெல்லாம் விருதுகளாகவும், மற்றவைகளாகவும் வந்திருக்கின்றன.

எனவே, வயது ஒரு பொருட்டல்ல நண்பர்களே!

தந்தை பெரியாரின் சொன்னார், ‘‘எனக்கு வயது முக்கியமல்ல; அவர்களுடைய உணர்வுகள்தான் முக்கியம்’’ என்று.

அந்த வகையில், இந்நிகழ்ச்சி ஓர் அற்புதமான, சிறப்பான ஒரு நிகழ்ச்சியாகும்.

1929 இல் மலேயாவிற்குச் சென்றார் தந்தை பெரியார்!

இதற்கு முன்பு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பலமுறை நான் உரையாற்றி இருந்தாலும், இந்த முறை எனக்கு அவர்கள் கொடுத்திருக்கின்ற தலைப்பு ‘‘பெரியாரும் – சிங்கப்பூரும்’’ என்ற அற்புதமான தலைப்பாகும்.

பெரியார் அவர்கள், மலேயாவிற்கு 1929 ஆம் ஆண்டில் வந்தார் அன்னை நாகம்மையார் அவர்களோடு.

அதேபோல, 1954 ஆம் ஆண்டு இறுதியிலும், 1955 ஆம் ஆண்டு தொடக்கத்திலும் தந்தை பெரியார் அவர்கள் வந்தார், அன்னை மணியம்மையார் இருந்த காலத்தில்.

இந்த இரண்டு காலகட்டத்திலும், இங்கே என்னென்ன தாக்கங்கள் ஏற்பட்டன என்பதையெல்லாம் இங்கே எடுத்துச் சொன்னார்கள்.

மற்ற நாட்டுத் தலைவர்கள் இங்கே வரு வார்கள். இந்த நாட்டிலே இருப்பவர்கள், அவர்க ளுக்கு விருந்தளிப்பார்கள். அவர்களைப் பெருமைப்படுத்துவார்கள், அவர்கள் சென்றுவிடுவார்கள்.

அந்தச் சுற்றுலா அனுபவங்களையெல்லாம்கூட தங்களுடைய பயணக் குறிப்புகளாக எழுதி வைப்பார்கள் என்பது பொதுவானது.

ஆனால், தந்தை பெரியார் அவர்களுடைய வர லாற்றில், ஒரு தனிச் சிறப்பு என்னவென்றால்,  சிங்கப்பூர், மலேயா பயணத்தில், குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், சிங்கப்பூர் இன்றைக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும்.

பெரிய நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டக்கூடிய சிங்கப்பூர்!

சிங்கப்பூர் நாட்டை சிறிய நாடு என்று சொல்வார்கள், எங்கே? பூகோளக் கணக்கில். ஆனால், உண்மையிலேயே சிங்கப்பூர் சிறிய நாடா என்றால், இது சிறிய நாடு அல்ல நண்பர்களே, பெரிய நாடுகளுக்கெல்லாம் வழிகாட்டக்கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய ஓர் எடுத்துக்காட்டான நாடாக இன்றைக்கு வளர்ச்சியில் இருக்கிறது.

வேறு எந்த நாட்டிலும் நீங்கள் பார்க்க முடியாத ஒரு செய்தியை – நான் பலமுறை இந்த நாட்டிற்கு வந்து விட்டுச் செல்கின்றவன்  – பலரை இங்கே சந்திக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றவன். ஒவ்வொரு முறையும் நான் இங்கே வரும்போது, நான் ஏற்கெனவே பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன்; மீண்டும் அதை இந்த அறிவு சார்ந்த அவையினருக்குச் சொல்ல விரும்புகின்றேன்.

நான் கற்றுக்கொண்டு போவதற்கு வருகின்ற நாடு சிங்கப்பூர்!

அது என்னவென்றால், இங்கே பெற்றுக்கொண்டு போவதற்காக நான் வரவில்லை; பல பேர் சுற்றுலாவிற்காகப் பெற்றுக்கொண்டு போவதற்காக வருவார்கள். ஆனால்,  நான் கற்றுக்கொண்டு போவதற்கு வருகின்ற நாடு என்றால்,  அது சிங்கப்பூர் நாடுதான்.

இங்கே கற்றுக் கொண்டு போகவேண்டும். அதனு டைய வளர்ச்சி, முன்னேற்றம் என்று சொல்லும்போது, வளர்ச்சியினுடைய வேகம், அதனுடைய தாக்கம் ஒரு நாட்டிலே வரவேண்டும் என்று சொன்னால், அது வெறும் பொருளாதாரத்தை மட்டுமே பொருத்தது அல்ல.

ஏனென்றால், இந்த நாடு, பல அமைப்புகள், இனங்கள் இவையெல்லாம் இணைந்தவை. ஆனாலும், இந்த நாட்டு மக்கள் சிங்கப்பூரியர்களாக வாழ்கிறார்கள் என்பது இருக்கிறதே, அதுதான் தனிப் பண்பு.

ஆனால், அதேநேரத்தில், அவரவர்களுடைய பண்பாட்டை விட்டுவிட்டார்களா?

மொழி, கலை உணர்வுகளை அவர்கள் அறவே மறந்துவிட்டார்களா, துறந்துவிட்டார்களா? அல்லது  அவற்றை இணைத்துவிட்டார்களா? என்றால், அதுதான் இல்லை.

நவீன சிங்கப்பூரை உருவாக்கிய
லீ குவான் யூ-வின் சாதனை!

அதைத்தான் நவீன சிங்கப்பூர் நாட்டின் தந்தையாக இருக்கின்ற, இன்றைக்கும், என்றைக்கும் நினைவில் போற்றப்பட வேண்டிய, சிங்கப்பூரை உருவாக்கிய லீ குவான் யூ அவர்களுடைய சிறப்பான சாதனை, அந்தச் சாதனையாகும்.

ஏனென்றால், ஒரு வளமான நாடு – அதி லும் மலேயாவிலிருந்து வெளியேறிய,  வெளி யேற்றப்பட்ட நேரத்தில், அந்த நாடு எவ்வளவு சாதாரணமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு அது எந்த அளவிற்கு – ஒரு பரப்பு எல்லையைப் பொறுத்ததல்ல – அறிவியல் திறன் என்பதுதான் மிகவும் முக்கியம்.

‘‘புத்திசாலியே பலவானாவான்’’: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்!

நீண்ட நாள்களுக்கு முன்பு, பலம் என்பதற்கு, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் ஒரு வார்த்தையைச் சொல்வார். மிக எளிமையாக எதையும் சொல்லக்கூடியவர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை, தன்னுடைய வாழ்நாள் ஆசிரியராகக் கொண்டு, பச்சை அட்டைக் ‘குடிஅரசை’யே தன்னுடைய பாடப் புத்தகமாகப் பயின்றவர் கலைவாணர் அவர்கள்.

அவர் ஒரு திரைப்படத்தில் சொல்லுவார், ‘‘பலவான் புத்திசாலி ஆவானா? புத்திசாலியே பலவானாவான்’’ என்று.

யாருக்குப் புத்தி இருக்கிறதோ, யாருக்கு அறிவுச் செறிவு இருக்கிறதோ, அவர்கள்தான் பலம் பெற்ற வர்களாக இருப்பார்கள்.

அந்த வகையில் பார்த்தீர்களேயானால், எதற்கும் முன்னோட்டமாக இருக்கின்ற நாடு, இந்த சிங்கப்பூர் நாடாகும்.

அதற்கு என்ன அடித்தளம் என்று சொல்லுகின்ற நேரத்தில்,  கடந்த 60 ஆண்டுகாலத்தில், சிறப்பாக சிங்கப்பூரை உருவாக்குவதற்கு என்ன செய்யவேண்டும்? என்று நினைக்கின்றபோது, அவர் எல்லாவற்றையும் பல கோணத்தில் ஆராய்ந்தார்.

‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்ற கொள்கையை நிலைநாட்டினார்!

அதில் மொழி உணர்வு, பண்பாட்டு உணர்வு, மக்களை ஒன்று திரட்டவேண்டும் என்று நினைக்கக்கூடிய உணர்வு இவை அத்தனைக்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று நினைத்த காரணத்தினால்தான், பெரும்பாலான மக்கள் பேசுகின்ற மொழியே ஆட்சி மொழியாக இருக்கட்டும் என்று சொல்லப்பட்ட நேரத்தில், யாரும் புறக்கணிக்கப்படக் கூடாது என்று சொல்லித்தான், இதற்கு அந்த சிறப்பு வரவேண்டும் என்று சொல்லி, பல இனங்கள், பல மொழிகள், பன் மதங்கள் இருந்தாலும், ‘‘எல்லோரும் ஓர் நிறை’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ‘‘அனை வருக்கும் அனைத்தும்’’ என்ற அந்தக் கொள்கையை நிலைநாட்டினார்.

பெரியாருடைய கொள்கை, சமூகநீதிக் கொள்கை, ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ அதைத்தான் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிகள் பின்பற்றுகின்றன. அப்படிப்பட்ட அந்த ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்று சொல்லும்போது, இந்த மக்களுக்கு அடித்தள உணர்வை உண்டாக்க, இங்கே நாடகத்தில் நடித்துக் காட்டினார்கள்; நண்பர்கள் விளக்கினார்கள்; மாணவச் செல்வங்கள் விளக்கினார்கள்.

ரப்பர் மரத் தோட்டத் தொழிலாளர்களாக மலேசியாவிற்கு வந்தனர்!

1929 ஆம் ஆண்டிற்கு முன்பு மலேயாவிற்கு நம் மக்கள் வந்தார்கள். ரப்பர் மரத் தோட்டத்தில் தொழில் செய்வதற்காகத்தான் நம்முடைய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கொண்டுவரப்பட்டார்கள். ஆனால், இங்கே வந்த அவர்களுக்குப் படிப்பு இல்லை. மாறாக, அவர்களுடைய உணர்வுகள் அப்படியே இருக்க வேண்டும்; அடிமைகளாக இருக்கவேண்டும். அதுதான் தங்களுக்கு வசதி என்று அன்றைய முதலாளிகள் நினைத்த காரணத்தினால், ரப்பர் பால் மரம் வெட்டுகின்ற தொழிலை தொடர்ந்து செய்ய வைத்தனர்.

பெரியார் அவர்கள் 1929 ஆம் ஆண்டு வந்த பொழுது இங்கே கள்ளுக்கடைகள், மதுக்கடைகள் இருந்தன. அவற்றைக் குடித்துவிட்டு, ரப்பர் மரத்தில் பால் எடுக்கின்ற பணிகளைச் செய்துகொண்டு, பள்ளிக்கூடத்தைப்பற்றி கவலைப்படாமல் இருந்தனர்.

வரலாற்றுச் சுவடுகள்
மிகவும் முக்கியம்!

மலேயாவிற்குச் சென்ற தந்தை பெரியார்,  பெரிய நகரங்களுக்குச் செல்லவில்லை முதலில். தோட்டப் பகுதிகளுக்குச் சென்றார். அங்கே இருக்கின்ற தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் – இன்றைக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் அறிவார்ந்தவர்களாக, நன்றாகப் படித்துவிட்டுச் செல்கின்றனர். ஆனால், அன்றைய வரலாற்றை நீங்களெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும். வரலாற்றுச் சுவடுகள் மிகவும் முக்கியம்.

நம்மைப் போன்றவர்கள் பலர் பிறக்காத காலத்தில், 1929 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் மலேயாவிற்கு வந்தபோது, சிங்கப்பூர் நாடு அப்போது தனியே இல்லை. தோட்டப்புரத்து மக்களிடையே தந்தை பெரியார் உரையாற்றினார்.

‘‘மலேசியா, சிங்கப்பூரில் பெரியார்!’’

சில புத்தகங்களை உங்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும். இந்த புத்தகம் ‘‘மலேசியா, சிங்கப்பூரில் பெரியார்’’ என்ற தலைப்பில் நாங்கள் தொகுத்திருக்கின்றோம்.

அன்றைய வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடியாதவர்கள் அய்யா சுப.திண்ணப்பனார் அவர்கள் தலைமையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டு, பல பதிப்புகளாக வந்தி ருக்கின்ற புத்தகம் இது.

இதில் இருக்கின்ற ஒரு செய்தியை இன்றைய இளைஞர்களுக்குச் சொல்லவேண்டும்; வர லாற்றில் பதிவு செய்யவேண்டும் என்பதற்காக இந்தச் செய்திகளைச் சொல்கிறேன்.

அடிக்கட்டுமானம் முன்னோட்டமாக அமைந்தது; அதன்மேல் மாளிகை எழுப்புவதற்கு வசதியாக இருந்தது. செய்யக்கூடிய ஆற்றல் நிறைந்தவர்கள் அதிபர்களாக வந்தார்கள் இங்கே. ஆகவே, இரண்டும் இணைந்தது.

எங்களுக்குப் பெரிய மகிழ்ச்சி!

இரண்டும் இணைந்ததினுடைய நற்பலன், இன்றைக்கு ஜாதியால் பிரிக்கப்படவில்லை. தீண்டாமையின் பெயரால் ஒதுக்கப்படவில்லை. மக்கள் மத்தியில் பிரிவினை இல்லை. எல்லோரும் ஓர் நிலை; எல்லோரும் சகோதரர்கள்; வெவ்வேறு இனத்தவர்கள் என்றாலும், இனத்தால் மாறுபட்டாலும், மனதால் ஒன்றுபட்டவர்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஒன்றுபடக்கூடிய ஓர் அற்புதமான ஒரு சூழலை தந்தை பெரியார், அடித்தளமிட்டதைப்போல, விதை போட்டவர்கள் போல அன்றைக்கு உருவாக்கினார்கள்.

இன்றைக்கு அந்த விதைகள் எல்லாம் வளர்ந்தி ருக்கின்றன. அதைப் பார்க்கின்றபொழுது எங்களுக்குப் பெரிய மகிழ்ச்சி.

பெரியார், 1929 ஆம் ஆண்டில் மலேயா வந்தார்; மறுபடியும் 1955 இல் சிங்கப்பூருக்கு வந்தார். சிங்கப்பூ ரின் வளர்ச்சியைக் கண்டார்; அங்கே பேசினார். இந்த வளர்ச்சி உங்களுக்கு நிலைக்க வேண்டுமானால், மீண்டும் பேதம் உள்ளே வந்துவிடக் கூடாது.  அதற்குரிய திட்டங்களை உருவாக்கினார்கள். அந்தத் திட்டங்களைப் பின்பற்றுவதற்குத் தமிழவேள் கோ.சாரங்கபாணி போன்ற இன்னும் பலர் அவருக்குக் கை கொடுத்தார்கள். அப்படிப்பட்ட ஒரு பெரிய சமூக மாற்றம் வந்ததற்கு, பெரியார் சில கருத்துகளைச் சொன்னார்.

60 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிங்கப்பூரைவிட, அதற்கு முன் இருந்த சிங்கப்பூர் எப்படி இருந்தது;

சிங்கப்பூர் ஹாப்பி வேர்ல்டு ஸ்டேடியத்தில் தந்தை பெரியாருக்கு வரவேற்பு!

1955 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த தந்தை பெரியாருக்கு, சிங்கப்பூர் ஹாப்பி வேர்ல்டு ஸ்டேடி யத்தில் வரவேற்பு பெரிய அளவிற்கு அளிக்கப்படுகிறது.

அப்போது சிங்கப்பூரில், பெரியார் அவர்கள் உரை யாற்றும்போது, ‘‘நான், 1929 ஆம் ஆண்டு மலேயாவிற்கு வந்தபோது, மக்களிடையே கண்ட முன்னேற்றம், பகுத்தறிவு முயற்சிகளைவிட பன்மடங்கு அதிகமாக இந்தப் பயணத்தில் காணுகிறேன்’’ என்றார்.

அதைவிட எண்மடங்கு அதிகமாக நாங்கள் இப்போது பார்க்கிறோம். இந்த அரங்கத்தையும், இந்த நிகழ்ச்சிகளையும், இந்த வளர்ச்சிகளையும், பெரியார் சமூக சேவை மன்றத்தின் 20 ஆம் ஆண்டு விழாவில், விருது வழங்கப்பட்ட அறிஞர் பெருமக்கள், அய்யா ஜெகதீஸ்வரன் ராஜு போன்றவர்கள் இங்கே வந்திருக்கின்றார்கள் என்றால், அந்த விதைகள் கிளம்பியிருக்கின்றன; நல்ல அளவிற்கு வளர்ந்தி ருக்கின்றன. பெருமைப்பட்டு நிற்கின்றார்கள்.

சிங்கப்பூரில் இனிமேல் பேதத்திற்கு இடமில்லை!

எல்லாவற்றையும்விட வேர்களும் சரியாக இருக்கின்றன; விழுதுகளும் பழுதில்லாமல் வளர்ந்து கொண்டிருக்கின்றன. விழுதுகளை அசைக்க முடியாமல், ஒரு நவீன சிங்கப்பூர் உருவாகியிருக்கின்றது என்று சொன்னால், எடுத்துக்காட்டாக இருக்கின்றது என்றால், இந்த நாட்டில் இனிமேல் பேதத்திற்கு இடமில்லை என்று மிகப்பெரிய அளவிற்கு, பேதமிலா பெருவாழ்வு பெறுவதற்கு வாய்ப்பைப் பெற்றிருக்கின்றார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம்.

அறவழி இல்லா மற்றெல்லாம்
புகழுக்கு உரியன அல்ல!

பெரியார் தன் உரையில், ‘‘முன்னேற்றம், பகுத்தறிவு முயற்சிகளைவிட பன்மடங்கு அதிகமாக இந்தப் பயணத்தில் காணுகிறேன் என்று சொல்லிவிட்டு, மனித சுபாவம் எந்தக் காரியத்திலும் இன்பம் காணுவது; இன்னொன்று புகழ் பெறுவது. இதுதான் மனித சுபாவம். இந்தச் சீர்மையைப் பெற விரும்பும்பொழுது, பணச் சேமிப்பில் அற வழியையே மேற்கொள்ளவேண்டும். அறவழி இல்லா மற்றெல்லாம் புகழுக்கு உரியன அல்ல.  இதைத்தான் வள்ளுவர்,

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல (குறள் 39) என்று கூறியிருக்கிறார்.

அறவழியால் நாம் பெற்ற பணத்தை, நாம் பெற்றெ டுத்த பிள்ளைகளுக்கு மட்டும் கொடுத்துப் பயனில்லை.

பிறருக்கு ஏழை, எளிய பிள்ளைகளுக்கும் உதவும் வகையில், பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்களை எடுத்து நிறுத்துங்கள்’’ என்று சொன்னார்.

ஜாதியைப்பற்றி கவலைப்படாதீர்கள்.

இப்போது ஜாதிக்கு இடம் உண்டா? என்று சொன்னால், அதற்கு இரண்டு செய்திகளைச் சொல்கி றேன்.

இவர் ஜாதியைப்பற்றி பேசுகிறாரே என்று யாரேனும் தவறாகவோ, வேறு விஷமமோ செய்ய முடியாது என்பதற்காக இதனைச் சொல்கிறேன்.

இந்தியாவில் இருந்த அந்த ஜாதி நோய், மற்ற இடங்களுக்கும் பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவில், பாதரசத்திலே உள்ளே நுழைக்கிறார்கள்.

அமெரிக்காவில், கலிபோர்னியாவில், கணினி பொறியாளராக சென்றிருக்கின்றவர்கள் வேதத்தை உருவாக்கியதால், வழக்குகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன.

ஜாதி மிகமிக ஆபத்தானது!

எப்படி ஒரு நோய், ஒரு நாட்டிலே புறப்பட்டாலும், அது பறவைக் காய்ச்சலாக இருந்தாலும், பன்றிக் காய்ச்சலாக இருந்தாலும், கோவிட்-19 ஆக இருந்தாலும், அது பல ரூபத்தை எடுப்பதைப்போல, ஜாதி மிகமிக ஆபத்தானது. பிறவி பேதம் என்பது பழைமையான எண்ணத்திற்குக் கொண்டு போய் விட்டுவிடும் எச்ச ரிக்கையாக இருங்கள் என்று சொல்லுகின்ற நேரத்தில், அவருடைய உணர்வுகள் இன்றைக்கும் தேவை.

ஏனென்றால், கோவிட்-19 தொற்றுக்கு ஒரு மருந்தை கண்டுபிடித்ததற்குப் பின்புகூட, அந்தக் கோவிட் வேறு ரூபத்தில்  வரும். எப்போது வரும் என்றும் சொல்ல முடியாது.

அப்படி வருகின்ற நேரத்தில்தான், இரண்டு செய்தி களை உங்களுக்கு ஆதாரமாகச் சொல்கிறேன். இது எங்கள் கருத்து அல்ல.

பெரியார் குரல் என்றால், இதைத்தான் பேசுவார்கள் என்று சில பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்களே, அவர்களுடைய மனதில் இருக்கின்ற கரவு மாற வேண்டும். அல்லது எங்களைப்பற்றித் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக அன்போடும், பண்போடும் நாங்கள் இதைச் சொல்லுகின்றோம். இந்தக் கருத்தை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. எல்லா அறிஞர்களும் சொல்லவேண்டிய கருத்து. அதைச் சரியாக இந்த நாட்டிலே ஒழுகியிருக்கிறார்கள்.

சிங்கப்பூர் மேனாள் அதிபர்
எஸ்.ஆர்.நாதன்!

60 ஆண்டுகாலம் ஆகின்ற சிங்கப்பூரின் சிறப்புமிகுந்த அதிபர் – உங்களுக்கெல்லாம் நினைவில் என்றைக்கும் மாற்ற முடியாதவர், மறக்க முடியாதவர் எஸ்.ஆர்.நாதன் அவர்கள்.

பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பாக 2015 இல் இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெற்றபோது, ‘‘பெரியார் பணி 2015’’ மலருக்கு ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பி இருக்கிறார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் எஸ்.ஆர்.நாதன் என்ன சொல்லியிருக்கின்றார் என்று சொன்னால்,

‘‘1930 ஆம் ஆண்டு பிற்பகுதியில் பெரியாரை நான் உவாவில் பார்த்திருக்கின்றேன். அவருடைய பேச்சுகளையும் கேட்டிருக்கின்றேன்.  அவர் இங்கே ஆதிதிராவிட முன்னேற்றச் சங்கம் என்ற ஓர் அமைப்பை நிறுவினர். வறுமையில் வாடும் இந்தியர்களுக்கு உதவி செய்யுமாறு வலியுறுத்தினார். மலேசியா, சிங்கப்பூரில் உள்ள ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்காகவும், துப்புரவுத் தொழிலாளர்களுக்காகவும் வேலை செய்து, தீண்டத்தகாதவர்களாகத் தள்ளப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்குரிய வகைகளைக் கண்டறியுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் தீண்டத்தகாதவர்களாக இருந்த மக்கள் படும் வேதனையையும், வாழ்க்கை முறை களையும்பற்றி பெரியார் பேசும் தமிழ்ப் பேச்சுகள் அனைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தின.

அவருடைய முன்னேற்றச் சிந்தனைகள்பற்றிய பேச்சு, சிங்கப்பூர் மக்களுக்கு இன்றும் தேவைப்படு கின்ற ஒன்று’’ என்று  அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, இது சாதாரணமாக ஏதோ வெளியில் இருந்து வந்து சொல்லுகின்ற கருத்து அல்ல நண்பர்களே, ஓர் எச்சரிக்கை!

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதை நீங்கள் தெளிவாக நினைத்துப் பார்க்கவேண்டும்.

அதுபோலத்தான், வருமுன்னர் காக்கவேண்டும் என்கிற முறையில் வருகின்றபோது, அதை அழகாகச் செய்தார் நம்முடைய நவீன சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ அவர்கள்.

‘‘Indians in Singapore, 1819-1945’’

நான் அதைத்தான் உங்களுக்கு அறிமுகப்படுத்து வதற்காக சொன்னேன். இதைப்பற்றி இரண்டு நூல்கள் எப்படி அந்த நேரத்தில் இருந்தன என்பதை அறிவார்ந்த இந்த அரங்கத்தவர்கள் பார்க்கவேண்டும்.

‘‘Indians in Singapore, 1819-1945’’ என்ற ஒரு நூல். பல ஆண்டுகளுக்கு முன்பு அய்யா திண்ணப்பனார் அவர்கள், தேசிய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கத்திற்கு எங்களை பேச அழைத்தபோது, அங்கே பேராசிரியராக இருக்கக்கூடிய திரு.ராஜேஷ் ராய் அவர்கள், ஆய்வு புத்தகமாகத் தொகுத்திருந்தார். அதில், Diaspora in the Colonial Port City  in Singapore என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வெளியிட்டிருக்கின்ற நூல்.

பகுத்தறிவோடு இருங்கள்;
எல்லோரும் படியுங்கள்!

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில், ஏன் இன்னும் சில இடங்களில்கூட, நெருங்காமை, பாராமை, தீண்டாமை என்று வைத்திருக்கிறார்களோ, அதுபோல, சிங்கப்பூரில் இருக்கக்கூடிய பகுதிகளில் எங்கெங்கெல்லாம் இருந்தது என்று சொல்லிவிட்டு, அவையெல்லாம் நீக்கப்பட்டன. காரணம் என்னவென்றால், பெரியார் வந்தார், சாரங்கபாணி போன்றவர்கள் வந்தார்கள்; அங்கே தமிழர் சீர்திருத்த சங்கம் உருவானது. அதனுடைய கொள்கைகள் வேறொன்றும் இல்லை. பகுத்தறிவோடு இருங்கள்; எல்லோரும் படியுங்கள், பெண்களை அடிமைகளாக்காதீர்கள் என்பதுதான்.

அன்றும், இன்றும், என்றும் பொருந்தக்கூடிய விளக்கம்!

பெரியார் ஒரே வரியில், சுயமரியாதை இயக்கத்தி னுடைய தத்துவத்திற்கு விளக்கம் சொன்னார். அது அன்றும், இன்றும், என்றும் பொருந்தக்கூடிய விளக்கமாகும்

அது என்னவென்றால், ‘‘பிறவி பேதம் கூடாது’’ என்பதுதான்.

பிறவி பேதம் என்றால், உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி என்பது மட்டுமல்ல; ஆண் உயர்ந்தவன் – பெண் தாழ்ந்தவள் என்பது இருக்கிறதே, அந்தப் பிறவி பேதம் – ஆண் – பெண் என்ற பாலின வேற்றுமையும் பிறவி பேதம்தான் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்

ஆகவே, அவையெல்லாம் எப்படி இருந்தன என்பதை இப்போது நான் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. அது தேவையும் இல்லை. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

மீண்டும் அந்த நோய் வந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, இதை எந்த அளவிற்குத் தெளிவாக உணர்ந்திருக்கின்றார்கள் என்று சொன்னால், நவீன சிங்கப்பூரை உருவாக்கியிருக்கக்கூடிய நவீன சிங்கப்பூ ரின் தந்தை லீ குவான் யூ அவர்கள் ‘‘One Man’s View Of The World’’   என்ற தலைப்பில் புத்தகம் எழுதி யிருக்கிறார்.

அந்தப் புத்தகத்தில் உள்ளதைக் குறித்து வைத்துக் கொண்டு பாருங்கள். அதில் சுமார் 30 நாடுகளைப்பற்றி குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார்.

ஒவ்வொரு நாடும் எப்படி இருக்கின்றது? அந்த நாட்டிற்குச் சமுதாய வளர்ச்சிக்கு எது உதவுகிறது? எது கேடாக இருக்கிறது? என்பதை ஒரு நல்ல வளர்ச்சி யாளன் என்ற முறையில், அவருடைய அறிவார்ந்த தெளிந்த அனுபவங்களை முன்னால் வைத்து இந்தப் புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார்.

அந்தப் புத்தகத்தில் ஒரு கருத்தைச் சொல்லி யிருக்கிறார். இந்தியாவிற்குப் போய்விட்டு வந்தவுடன் ஒரு கருத்தைப் பதிவு செய்கிறார்.

‘‘The caste system is a further complication for India. It is another key factor that holds back development in the country. According to the rules of the caste system, when you marry downwards, you automatically lose caste. Therefore, Brahmins tend to marry only Brahmins, Vaishyas only Vaishyas, Dalits only Dalits, and so on. The Brahmins, who are associated with the priesthood, are – as individuals – as bright as anybody in the world. Many among them are multilingual. So what effect does the caste system have on India? What I am about to propose is not popular, but I believe it to be true. At the macro level, the caste system freezes the genetic pool within each caste. Over many years, this had had an isolating impact on the overall intelligence of the people.’’

இந்தியாவில் ஜாதி முறைதான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, தன்னுடைய அனுபவத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

இந்தியாவிற்கு மட்டுமல்ல,
உலகத்திற்கே சுட்டிக்காட்டியிருக்கிறார்!

தன்னுடைய செயலாளர் ஒருவர், அவர் உயர்ந்த ஜாதி. என்னோடு அவரும் வருகிறார். இங்கே அவர் வேலை பார்க்கும்போது என்ன ஜாதி என்று பார்ப்பது கிடையாது. வெறும் தகுதிதான். இந்தியாவில் எனக்கு வரவேற்புரை கொடுக்கின்ற நேரத்தில், அவர் என்ன ஜாதி என்று கேட்டு, அதற்கு முன்னுரிமை கொடுத்தார்கள். ஜாதி எவ்வளவு கொடுமையாக இருக்கிறது பாருங்கள் என்று   லீ குவான் யூ சுட்டிக்காட்டியிருக்கிறார். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நல்லவாய்ப்பாக இதற்கிடமில்லாமல்  செய்த ஒரு நாடு இருக்கிறது என்றால், அது இன்றைக்கு சிங்கப்பூர் நாடுதான்.

இரண்டு முறை பெரியாரின் வருகைதான்!

எனவே, சிங்கப்பூர் சிறிய நாடா? பெரிய நாடா? என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள்.

பெரிய நாடுகளெல்லாம் அவதிப்பட்டுக் கொண்டி ருக்கின்றன. ஆனால், சிறிய நாடுகள்தான் அதற்கு ஆசா னாக இருந்துகொண்டிருக்கின்றது என்றால், அதற்குத் தாக்கம் பெரியாரின் இரண்டு முறை வருகைதான்.

இன்னொன்றையும் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்.

இன்றைய அதிபர்
தர்மன் சண்முகரத்தினம்!

60 ஆண்டுகள் காணுகின்ற ஒரு நாடு; 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஓர் அமைப்பு, பேதமில்லாத, ஒற்றுமையை – Social Position, Polarity, Immunity of large என்று சொல்லக் கூடிய அளவிற்குத் தனித்தனியே பார்க்காத, எல்லோரையும் ஒன்றுபடுத்தக்கூடிய ஒரு சமூகமாக வரவேண்டும் என்று சொல்லும்போது, இப்போது இருக்கின்ற நம்முடைய பெருமைக்குரிய அதிபர் தர்மன் சண்முகரத்தினம் – எல்லோருக்கும் அறிவுரை சொல்லக்கூடிய அளவிற்கு, பொருளாதாரத்திலும், மற்றவற்றிலும் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர் சில நாள்களுக்கு முன்பு சொன்னார்,

‘‘Singapore must remain socially progressive, tackling discrimination and remnants of caste practices while conserving its cultures.’’

‘‘சிங்கப்பூர் சமூக ரீதியாக முற்போக்கானதாக இருக்க வேண்டும், பாகுபாடு மற்றும் ஜாதிய நடைமுறைகளின் எச்சங்களை எதிர்த்துப் போராட வேண்டும், அதே நேரத்தில் அதன் கலாச்சாரங்களைப் பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.

இதை நாங்கள் வரவேற்று, பாராட்டி எழுதினோம்.

எனவே, அறிவில், சிங்கப்பூர் நாடு, புராதன நாடு களுக்கு வழிகாட்டுகிறது. அதன் பணியை சிறப்பாகச் செய்து கொண்டிருக்கின்றது.

இங்கே வயது முக்கியமல்ல; அளவு முக்கியம். துணிச்சல் மிகவும் முக்கியம்.

இந்த வாய்ப்புகளை உருவாக்கிக் காட்டுகிறது – அதுதான் சுயமரியாதை இயக்கம்.

சுயமரியாதை இயக்கத்திற்கு முன்பே, தந்தை பெரியார் அவர்கள், ‘குடிஅரசு’ ஏட்டினை நடத்தினார். யானை வரும் ‘‘பின்னே, மணியோசை வரும் முன்னே’’ என்பதுபோல அது வந்துவிட்டது.

தொடக்கத்தில் பச்சை அட்டைக் ‘குடிஅரசு’ – அதைப் பார்ப்பதற்குப் பல பேருக்கு வாய்ப்பில்லை. ஆவணக் காப்பகங்களில் பார்க்கலாம்.

மலேசியா, சிங்கப்பூர் மண்ணிலே பெருத்த வரவேற்பு!

‘குடிஅரசு’ ஏட்டிற்கு மலேசியா, சிங்கப்பூர் மண்ணிலேதான் அதற்குப் பெரிய வரவேற்பு. அதற்குப் பின்புதான் இங்கே பெரியார் வருகிறார்.

ஜாதி மறுப்பு, சமத்துவம், பெண்ணுரிமை, பெண்களை அடிமைகளாக்கக் கூடாது, எல்லோருக்கும் படிப்பைக் கொடுக்கவேண்டும்; அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும், சகோதரத்துவம், சமத்துவம் இத்தனையையும் வலியுறுத்தியதுதான் ‘குடிஅரசு’ ஏடு.

அந்தக் குடிஅரசு ஏட்டைத் திறந்தவுடன்,

‘‘அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி

அரும்பசி எவர்க்கும் ஆற்றி

மனத்துளே பேதாபேதம்

வஞ்சனை, பொய், களவு சூது

சினத்தையும் தவிப்பாயாகில்

செய்தவம் வேறுண்டோ?’’ என்று இருக்கும்.

ஆகவே, ஒவ்வொரு மனிதனுக்கும் இதுதானே தேவை. அதை செய்வதுதானே இந்த நாடு. அதைத்தானே இந்த நாடு செய்துகொண்டிருக்கின்றது.

எல்லோருக்கும் எல்லாம்;
யாரும் பசியோடு இருக்கக்கூடாது!

ஆகவேதான், சிங்கப்பூரின் அருமை பெருமை இருக்கிறதே, எல்லோருக்கும் எல்லாம்; யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்று மிகத் தெளிவான நல்ல வழிகாட்டியாக இருக்கிறது.

நீண்ட நாள்களுக்கு முன்பு ‘‘இனிவரும் உலகம்’’ என்ற தந்தை பெரியாரின்  உரை, சிறிய தொகுப்பு நூலாக வெளிவந்திருக்கிறது.

அந்நூலில், அறிவியல் மனப்பான்மைக்கு முதலிடம் கொடுங்கள். அறிவியல் வளர்ச்சிக்கு இடம் கொடுங்கள் என்று சொன்னார்.

அந்த அறிவியல் மனப்பான்மையைப் பார்க்க வேண்டுமானால், முதலில் எந்த நாடு அறிவியலைத் முதலில் தொடும் என்றால், சிங்கப்பூரிலிருந்துதான் அது தொடங்கும்.

அறிவியலில் வளர்ந்து
சிறந்தோங்கும் சிங்கப்பூர்!

மற்ற பெரிய நாடுகள் எல்லாம், சிங்கப்பூர் நாட்டின் தத்துவங்களைப் புரிந்துகொள்வார்கள். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான இந்த நாடு, அறிவியலில் வளர்ந்து சிறந்தோங்குகின்றது.

அன்றைக்குப் பெரியார் சொன்னதை, யாரும் நம்ப வில்லை. ‘‘இனிமேல் கைக்கடக்கமாக தொலைப்பேசி எங்கும் எடுத்துச் சொல்வார்கள்’’ என்று சொன்னார். இப்போது செல்பேசி வந்துவிட்டது.

‘‘மின்சாரத்தில் கார்கள் ஓடும்’’ என்று சொன்னார். இன்றைக்கு மின்சாரக் கார்கள்தான் உலகம் முழுவதும் வந்துவிட்டன.

பெரியாருடைய சிந்தனைகளை உள்வாங்கினால்…

இப்படிப்பட்ட பெரியாருடைய சிந்தனைகளை இந்த நாடு உள்வாங்கினால், அது பெரியாருக்காக அல்ல – இயக்கத்திற்காக அல்ல – பெரியார் சமூக சேவை மன்றத்திற்காக அல்ல – இளைய தலைமுறையினர், நம்பிக்கை உள்ளவர்கள் வந்திருக்கின்றார்களே, அவர்க ளுடைய வாழ்க்கை வளமானதாக ஆவதற்காகத்தான்.

இந்த நாட்டிற்கு வந்துவிட்டுத் திரும்பும் பொழுதெல்லாம் எங்களுக்கு என்ன மகிழ்ச்சி என்றால் நண்பர்களே, இப்போது புதிதாக என்ன செய்திருக்கிறார்கள்? என்று பார்க்கலாம். வேறு எந்த நாட்டிற்குச் சென்றாலும், இப்போது புதிதாக வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்ல முடியாது.

எனவேதான், பெரியார் சமூக சேவை மன்றத்தின் 20 ஆம் ஆண்டு என்று சொன்னாலும், அதேபோல, சிங்கப்பூர் நாட்டின் 60 ஆம் ஆண்டு என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருந்தாலும், சிங்கப்பூரின் 60 ஆண்டு வளர்ச்சி என்பது பல 600 களைத் தலைகீழாகப் புரட்டி போட்ட வளர்ச்சியாகும்.

மக்களின் மொத்த மகிழ்ச்சி!

அது சாதாரண வளர்ச்சியல்ல; இந்த வளர்ச்சியினால் மக்கள் சமூகம் மகிழ்ச்சியடையும். ஜிடிபி என்பது கிராஸ் டெவலப்மெண்ட் பிராடக்ஸ்ட் என்று பொருளாதாரத்தில் சொல்வார்கள். ஆனால், அதைவிட ஜெனரல் பப்ளிக் பிளசர் என்பதுதான் சரியாக இருக்கும். மக்களின் மொத்த மகிழ்ச்சி என்பதுதான்.

சிங்கப்பூர் நாடு வழிகாட்டுகிறது – பெரியார் அதற்கு அடித்தளமிட்டார்

அந்த அளவிற்கு, இந்த வாய்ப்புகளைப் பார்த்தீர்களேயானால், யாருக்கும் எந்தவிதமான குறையில்லாமல், யாருக்கும் பேதமில்லாமல், அவரவர் இனம், அவரவர்களுடைய மகிழ்ச்சி, அவரவர்களுடைய மொழி எல்லோருக்கும் தனித்தனியான உணர்வுகள் இருந்தாலும்,  இந்த நாடு வழிகாட்டுகிறது – பெரியார் அதற்கு அடித்தளமிட்டார்கள். சமூக சேவை மன்றம் அந்தப் பணியைத் தொடருகிறது.

நீங்கள் ஆக்கமும், ஊக்கமும் தருகிறீர்கள். தொட ரட்டும் அந்தப் பணி! இளைஞர்கள் சிறப்பாக வளரட்டும் – நீங்கள் வழிகாட்டுங்கள், நாங்கள் பயன் பெறுகிறோம்.

ஒருங்கிணைத்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் நன்றி!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றி
னார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *