இந்தியாவில் பசு மாட்டின் சாணியும், கோமியமும் ‘புனித’மாகக் கருதப்பட்டு வரும் நிலையில், கருநாடகாவில் நடந்த ஒரு வினோதத் திருவிழா, உலகப் புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநரைத் திக்குமுக்காட வைத்து, அவர் இந்தியாவிற்கு வருவதையே நிரந்தரமாகத் தவிர்க்கும் முடிவை எடுக்கத் தூண்டியிருக்கிறது. இந்தச் சம்பவம், கலாச்சாரத்தின் பெயரால் நடக்கும் விசித்திரமான நிகழ்வுகள் மற்றும் அதன் பின்னால் உள்ள மனிதநேயமற்ற செயல்கள் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
ஸ்பெயினைச் சேர்ந்த டைலர் ஒலிவேரா ‘இனி இந்தியாவிற்கு வரமாட்டேன்’ என்று திடீர் முடிவு எடுத்துள்ளார்.
உலகெங்கிலும் நடக்கும் விநோத நிகழ்வுகளை ஆவணப்படுத்தி, அதன் சமூக மற்றும் மூடநம்பிக்கை சார்ந்த அம்சங்களை அறிவியல் பூர்வமாக ஆய்வுக்கு உட்படுத்தும் பிரபல ஆவணப்பட இயக்குநர் டைலர் ஒலிவேரா. ‘டிஸ்கவரி’, ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் இவரது படைப்புகள் ஒளிபரப்பாகியுள்ளன.
இந்நிலையில், அவரது அடுத்த இலக்காக கருநாடகாவில் ஆண்டுதோறும் நடக்கும் ‘‘சாணி வீசும் திருவிழா’’ இருந்தது. அங்கு சென்ற அவருக்கு இந்த நிகழ்வு ஒரு மோசமான மன உளைச்சலைக் கொடுத் துள்ளது. கடந்த மாதம் இந்தத் திருவிழாவில் பங்கேற்றபோது, அவர் மீது சாணியை வீசி ‘கொண்டாடிய’ இந்த நிகழ்வு, அவரது மனநிலையை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது.
டைலர் ஒலிவேரா ‘டெக்ஸெர்டோ’ (Dexerto) செய்தி நிறுவனத்திடம் –
“இந்த விவகாரம் – ‘சாணி வீசும் இந்த நிகழ்வு’ நான் கற்பனை செய்ததை விடவும் மிக மோசமாக உள்ளது என்று கூறினார்.
லிஸ்பன் திரும்பிய பின்னரும், அவர் மீது சாணி நாற்றம் வீசுவதாகவே உணர்கிறாராம். இரண்டு மாதங்களுக்குப் பிறகும் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல், குடும்பத்தினரைக் கூட அருகில் அனுமதிக்க முடியாத மன அழுத்தத்தில் அவர் இருக்கிறார். மனநல ஆலோசனை பெற்றும், அந்தத் துர்நாற்றத்தையும், காட்சியையும் அவரால் மறக்க முடியவில்லை. இதன் விளைவாக, டைலர் ஒலிவேரா தனது ஆவணப்படத்தை ‘‘கைவிட்டுவிட்டதோடு’’, இனி இந்தியாவிற்குப் பயணம் செய்வதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள பழங்குடி நிகழ்வுகளையும், விசித்திரமான சடங்குகளையும் ஒலிவேரா ஆவணப்படுத்தியுள் ளார். பப்புவா கினியாவின் ‘சகதி வீசும் நிகழ்வு’, குரின் தீவுகளின் ‘தீப்பந்தம் வீசும் நிகழ்வு’, மாலி பழங்குடி ‘மக்களின் எச்சில் துப்பும் நிகழ்வு’ போன்றவற்றை ஒப்பிடுகையில், அவருக்குச் சாணி வீசும் திருவிழா ஏன் இந்த அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது?
ஒலிவேராவின் கூற்றுப்படி, மற்ற விநோத நிகழ்வுகள் ஒருவித ‘வியப்பையும் வித்தியாசத்தையும்’ கொண்டிருக்கும், ஆனால் அவை ‘மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல்’ இருக்கும்.
ஆனால், கருநாடகவில் நடைபெறும் ‘சாணி வீசும் திருவிழா’ நிகழ்வு – “போவோர் வருவோர் மீது சாணி வீசி அசிங்கப்படுத்துவது என்பது மனிதத்தன்மையற்ற செயல், நாகரிக மனிதர்கள் இவ்வாறு செய்யமாட்டார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் பசு மற்றும் அதன் உபபொருட்களான சாணி மற்றும் கோமியத்தை ‘புனிதம்’ என்று கருதி, மதம் மற்றும் மருத்துவ ரீதியிலான பயன்பாடுகளை ஊக்குவிக்கும் தவறான போக்கு வலுவாக இருக்கும் சூழலில், இந்தச் சம்பவம் பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையின் அடிப்படையில் ‘புனிதமாக’க் கருதப்படும் ஒரு பொருளை, பொதுவெளியில் சக மனிதர்கள் மீது வீசுவது எந்த விதத்தில் கலாச்சாரக் கொண்டாட்டமாகும்?
திருவிழாவில் பங்கேற்கவோ அல்லது வேடிக்கை பார்க்கவோ வரும் வெளிநாட்டவர் மீது அவர்களின் அனுமதியின்றி சாணியை வீசி, அவர்களை அவமானப்படுத்துவது மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவது மனிதநேயமற்ற செயல் இல்லையா?
இங்கே விநோதச் சடங்குகள் என்ற பெயரில் நடத்தப்படும் இத்தகைய நிகழ்வுகள், உலக அரங்கில் இந்தியாவின் கலாச்சாரம் குறித்த பிம்பத்தை எவ்வாறு பிரதிபலிக்கிறது?
டைலர் ஒலிவேராவின் கசப்பான அனுபவம், நமது கலாச்சார நிகழ்வுகளின் பெயரால், எந்த அளவு நாகரிகம் மற்றும் மனிதநேயம் பின்பற்றப்படுகிறது என்பதைப் பற்றிய ஆழமான சுயபரிசோதனையை இந்திய சமூகத்திற்கு அவசியமாக்கியுள்ளது.
‘எச்சில் இலைமீது பக்தர்கள் உருளுவது’ – அதன் மீதான வழக்கில் உயர்நீதிமன்றமே அதற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த அநாகரிகம் குடி கொண்டிருக்குமு் புனித(?) நாடாம் – இந்தப் பாரத ‘புண்ணிய’ பூமி!
வெட்கக் கேடு!
