திருப்பத்தூர், நவ. 10- திருப்பத் தூர் மேனாள் நகர தலைவர் சுயமரி யாதைச் சுடரொளி ஏ.டி.கோபால்-சந்திரா ஆகியோரின் மூத்த மகன் ஏ.டி.ஜி.கவுதமன் 25.10.2025 அன்று இயற்கை எய்தினார். அதையொட்டி ஆசிரியர் அவர்களும் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார்.
அவரின் நினைவைப் போற்றும் விதமாக நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி 02.11.2025 அன்று காலை 10.30 மணியளவில் எஸ். ஆர்.மகாலில் நடைபெற்றது.
இவ் நினைவேந்தல் கூட்டத்தை மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையேற்று சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.ஜி.கவுதமனின் படத்தை திறந்து வைத்தார். குடும் பத்தின் சார்பாக இ. கலைச்செல்வன் வரவேற்றார்.
நிகழ்வை பெ. கலைவாணன் ஒருங்கிணைத்து கவுதமனின் வாழ்கை வரலாற்றை அவர்க ளின் குடும்பத்தின் அடுத்த தலைமுறையும்,இன்றைய கழகத் தோழர்கள் அறிந்து கொள்ளும் விதமாக வாசித்தார்.
தந்தை பெரியார் அவர்களின் இறுதி நாள் வரை அவர் செல்லும் இடங்கள் எல்லாம் அவருடன் பயணித்த சுயமரியாதைச் சுடரொளி ஏ. டி. கோபால் அவர்களின் மூத்தமகன் ஏ.டி.ஜி.கவுதமன் ஆவார்.
சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.ஜி.கவுதமன் 1953 ஆம் ஆண்டு திருப்பத்தூரில் பிறந்தவர். இவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். ஆறு சகோதரிகள் அவர்கள்இராவணன், சித்தார்த்தன், இந்திரஜித். இராணி மங்கையர்க்கரசி, வாலண்டினா, இந்திரா, விஜயா, கவிதா ஆகியோருடன், இவரையும் சேர்த்து மொத்தம் பத்து பேர் ஏ. டி. கோபால் அய்யாவிற்கு பிறந்தவர்கள்.
இவர் பள்ளிப் படிப்பை முடித்துத் தொழில் நுட்பக் கல்வியை பயின்று தன் தந்தையார் நடத்தி வந்த தொழிற் சாலையிலேயே பணியில் சேர்ந்து,அவருடைய தனித்தன்மையால் அத் தொழில் வளர முக்கியக் காரணமாக விளங்கினார். இப் பணியுடன், அவர் தந்தையாரை போலவே, இவர் சகோதரர்கள் மூன்று பேருடன் தந்தைபெரியார் அவர்களின் கொள்கையை ஏற்று, திராவிடர் கழகத்தில் இணைந்து பல முக்கிய பொறுப்புகளில், குறிப்பாக அவர் திருப்பத்தூர் நகர திராவிடர் கழகத் தலைவராகவும், நகர பகுத்தறிவாளர் அமைப்பாளராகவும் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து,கழகத்தின் பல்வேறு போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களிலும் சமுதாய அக்கறையுடன் தன்னை அர்ப் பணித்துக் கொண்டு செயல்பட்டவர்.
விபத்தின் காரணமாகத் தன் உடல் நிலை முழுவதும் பாதிக் கப்பட்ட நிலையிலும்,அவர் செய்து வந்த தொழில் முடங்கிய போதும், பலரின் நினைவுகள் மறந்த நிலையிலும் தந்தை பெரியார் கொள்கை மட்டும் அவர் நினைவுகளில் இருந்து அகலவே இல்லை என்பது, ஆச்சரியப்படத்தக்கதாகும்.
அவர் தொடர்ந்து தனது இறுதிக் காலம் வரை கழகத்தின் சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்வில் பங்கேற்றுக் பெரியார் கொள்கைகளை பரப்பிக் கொண்டேயிருந்தார்.
அந்தவகையில், அவர் மறைவுற்ற பிறகும் தன் உடலை மருத்துவமனைக்கு உடற் கொடையாக வழங்கியது- நமக்கெல் லாம் வழிகாட்டக் கூடியது.
இந் நினைவேந்தலில் வ.கண்ண தாசன் (மாவட்டச் செயலாளர் ம.தி.மு.க.), எ.அகிலா (மாநில பொருளாளர் மகளிரணி), சிறீதர் (அவைத்தலைவர் தி.மு.க.), டி.டி.குமார் (ஆ.இ.அ.தி.மு.க. நகரச் செயலாளர் திருப்பத்தூர்), வழக்குரைஞர் அனந்தகிருஷ்ணன், வழக்குரைஞர் மணிமொழி, பெ.ரா.கனகராஜ் (கந்திலி ஒன்றியச் செயலாளர்), ம.மதியழகன் (விஜயா கேலக்ஸி உரிமையாளர்), சாமி செட்டி (சாமி ஜுவல்லர்ஸ்), கேசவன் (மாவட்டச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) மற்றும் கழக தோழர்கள், அனைத்து அமைப்புகளை சார்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.
இறுதியாக சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.ஜி. கவுதமனின் மகள் க.அனாமிகா நினைவேந்தலுக்கு வருகைபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
