சென்னை, நவ. 10- பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்பட உள்ள சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதும் ஆசிரியர்களுக்கு மாவட்டம் தோறும் இணையவழியில் பயிற்சி வழங்குவதற்கான பணிகளைப் பள்ளிக்கல்வித் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவால் தமிழ்நாட்டில் சுமார் 1.76 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக அடுத்த ஆண்டு 3 சிறப்பு டெட் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் அறிவித்தது.
தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) மூலம் மாவட்டம் தோறும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வுக்கான பயிற்சி மாவட்டம் தோறும் இணையவழியில் (Online) வழங்கப்பட உள்ளது. இதற்காக, 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பாடங்களுக்கும் பயிற்சிக்கான வழிமுறைகளை இறுதி செய்து, நவம்பர் 17-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று SCERT சார்பில் மாவட்டப் பயிற்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதிவு உரிமம் பெறாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை!
தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
சென்னை, நவ.10- தமிழ்நாட்டில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும், கிளினிக்குகளும், சிறிய அளவிலான மருத்துவ மய்யங்களும் செயல் பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகள் பதிவு உரிமம் பெறுவது அவசியம். அந்தஉரிமத்தை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். இதற்காக கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்தச் சட்டம் கொண்டு வரப் பட்டது. அதில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மட்டுமின்றி, சித்தா ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி மருத்துவமனைகளும் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த காலக்கட்டத்தில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் மட்டுமே விண்ணப்பங் களை சமர்ப்பிப்பதாக தெரிகிறது.
இதையடுத்து பதிவு உரிமம் கோரி விண்ணப்பிக்காத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், விண்ணப்பிக்காத மருத்துவமனை களுக்கு முதல் கட்டமாக அறிவிக்கை அனுப்பப்பட உள்ளதாகவும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். அதனையும் பொருட்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
