மதுரை, நவ. 10- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் 01.11.2025 அன்று கல்விச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக மதுரை கீழடி அருங்காட்சியகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டனர்.
மாணவர்கள் முதலில் மதுரை கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர். தமிழர் நாகரிகத்தின் தொன்மையும், பெருமையும் வெளிப்படுத்தும் அங்குள்ள அரிய தொல்லியல் பொருட்கள் மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
மாணவர்கள் கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பானைகள், தாமிரப் பொருட்கள், இரும்பு கருவிகள், ஆபரணங்கள், தானியங்கள், மண் உருவங்கள் போன்றவை அக்காலத்துத் தமிழர் வாழ்வியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதோடு, எழுத்து வடிவில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள், அக்காலத்தில் தமிழர் எழுத்தறிவு பெற்ற சமூகமாக இருந்ததை உறுதிப்படுத்துகின்ற பல்வேறு ஆதாரங்களைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
அருங்காட்சியகத்தின் மல்டிமீடியா காட்சியகம் வழியாக கீழடி அகழாய்வின் வரலாறு, அகழாய்வு பணிகள், அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் விளக்கங்கள் ஆகியவை திரையிடப்பட்டு மாணவர்களுக்கு சுவாரஸ்யமான அறிவை வழங்கின.
அருங்காட்சியகத்தில் சிறுவர் பிரிவு, ஒளிப்படத் தளம் மற்றும் கல்வி காணொலிகள் ஆகியன சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை பார்வையிட்டனர்.
அங்குள்ள கலைஞர் பிரிவு, குழந்தைகள் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சிகள் அரங்கம் மற்றும் சிறார் அறிவியல் பூங்கா ஆகியவை மாணவர்களை ஈர்த்தன.
தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையைப் போற்றும் வகையில் ஜல்லிக்கட்டு சிலை, கீழடி மாதிரி அமைப்புகள், மதுரையின் சிறப்பிடங்கள் போன்றவை கலைக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், கலைஞரின் புத்தகக்கூடம் மற்றும் அவருடன் உரையாடுவது போன்ற ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ (Virtual Reality) அனுபவம் மாணவர்களுக்கு புதுமையான கல்வி அனுபவமாக அமைந்தது.
முதல் தளத்தில் குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், சிறுவர் நூலகம், அறிவியல் உபகரணங்கள் போன்றவை குழந்தைகளின் ஆர்வத்தையும், அறிவையும் வளர்க்கும் வண்ணம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
இந்த கல்விச் சுற்றுலா மாணவர்களுக்கு தமிழர் வரலாறு, பாரம்பரியம், அறிவியல் மற்றும் நவீன தொழில்நுட்பம் குறித்த விரிவான புரிதலை வழங்கிய மறக்கமுடியாத அனுபவ நாளாக அமைந்தது.
