‘வந்தே மா(மோ)தரம்’- பாடல் சர்ச்சை!

9 Min Read

கவிஞர் கலி. பூங்குன்றன்

சிறப்புக் கட்டுரை

‘வந்தே மாதரம்’ பாடலை எழுதியவர் வங்க மொழிக் கவிஞர் பங்கிம் சந்திரசட்டர்ஜி. இந்தப் பாடல் எழுதி 150 ஆண்டுகள் ஆனதையொட்டி ஒன்றிய அரசு சார்பில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. அந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுக் குதூகலிக்கிறார்.

நிகழ்ச்சியில் பிரதமர் என்ன பேசுகிறார்?

‘‘வந்தே மாதரம் பாடல், நாட்டுச் சுதந்திரப் போராட்டத்தின் குரலாக ஒலித்தது. அது, ஒவ்வொரு இந்தியரின் உணர்வையும் வெளிப்படுத்தியது. ஆனால் துரதிருஷ்டவசமாக, 1937இல், வந்தே மாதரம் பாடலில் இடம் பெற்றிருந்த சில முக்கிய வரிகள், வெட்டி தூக்கி எறியப்பட்டு, அதன் ஆன்மா அகற்றப்பட்டது.

வந்தே மாதரம் பாடலை பிளவுபடுத்திய செயலே, பிரிவினைக்கான விதைகளையும் விதைத்தது. நாட்டை கட்டமைக்கும் இந்த மஹா மந்திரத்திற்கு ஏன் இந்த அநீதி இழைக்கப்பட்டது என்பதை, இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த பிளவுபடுத்தும் மனப்பான்மை இன்றும் நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

வந்தே மாதரம் எல்லா காலகட்டங்களுக்கும் பொருத்த மானது. எதிரிகள் பயங்கரவாதத்தை பயன் படுத்தி நம் பாதுகாப்பையும், கவுரவத்தையும் தாக்கிய போது,​ துர்க்கையின் வடிவத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பது இந்தியாவிற்கு தெரியும் என்பதை உலகம் கண்டது.

ஏளனம் செய்தார்!

கடந்த 1937இல், வந்தே மாதரம் பாடலில் இடம்பெற்றிருந்த கடவுள் துர்காதேவி பற்றிய வரிகளை நீக்கிய பின்னரே, காங்கிரசின் பாடலாக, மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அதை ஏற்றுக் கொண்டார். முஸ்லிம்களை திருப்திபடுத்தவே, துர்காதேவி பற்றிய வரிகளை அவர் நீக்கினார். இதுவே, நாட்டின் பிரிவினைக்கான விதைகளை விதைத்தது. ‘வந்தே மாதரம்’ பாடல், நாட்டின் தேசியப் பாடலாக இருக்க முடியாது என்றும் நேரு ஏளனம் செய்தார்.

– சி.ஆர்.கேசவன்

செய்தி தொடர்பாளர், பா.ஜ.,

பெண் சக்தி

வந்தே மாதரம் என்பது ஒரு வார்த்தை, மந்திரம், சக்தி, கனவு தீர்மானம். இது பாரத அன்னை மீதான பக்தி; வழிபாடு. இது, நம் வரலாற்றுடன் நம்மை இணைக்கிறது. நம் எதிர்காலத்திற்கு புதிய தைரியத்தை அளிக்கிறது.

இந்தியர்களான நாம் அடைய முடியாத எந்த இலக்கும் இல்லை. அறிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நாம் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு நாட்டை கட்டமைக்க வேண்டும்.

தேசத்தை ஒரு தாயாகவும், தாயை வலிமையின் தெய்வீக வடிவமாகவும் கருதும் இந்த உணர்வு, ஆண் களையும், பெண்களையும் சமமாக உள்ளடக்கிய ஒரு சுதந்திர இயக்கத்திற்கு வழிவகுத்தது. இது, நாட்டை கட்டமைப்பதில் பெண் சக்தியை முன்னணியில் வைத்துள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.’’

– ( ‘தினமலர்’ 8.11.2025 பக்.9)

“வந்தே மாதர” கீதம்

(கே.எம். பாலசுப்பிரமணியம்)

(ஆனந்தக்களிப்பு மெட்டு)

வந்தே மாதரக்கீதம் – ஹிந்து

வங்காளம் கோஷிக்கும் த்வேஷம் கொள் நாதம் (வந்)

எந்தே யம் எங்கள் நாடு – என்று

சொந்தம்பா ராட்டிடும் சூழ்ச்சியர் பாடும் (வந்)

இந்துமுஸ் லீம்களின் நேசம் – அதற்கு

இந்தக் கடும்பாடல் தந்திடும் நாசம் (வந்)

பாரதத் தாயினைப் போற்ற – த்வேஷப்

பாடலும் வேண்டுமோ நாடவர் தூற்ற (வந்)

சட்டசபையில் இப் பாட்டை – பாடில்

கெட்ட சபையாகிச் செய்திடும் கேட்டை (வந்)

ஒற்றுமை மன் கொள்ள வேண்டில் – நேசம்

அற்ற இப் பாடல் உற்றதல்ல தூண்டில் (வந்)

(‘குடிஅரசு’ 16.1.1938)

 

உண்மையில் ‘வந்தே மாதரம்’ பாடல் என்ன சொல்லுகிறது? அதன் உள்ளடக்கம் என்ன?

உண்மையைச் சொல்லப் போனால் ‘வந்தே மாதரம் அல்ல’ – வந்தே மோதுகிறோம் என்பதாகும்.

அதன் உண்மைத் தன்மை என்ன?

படியுங்கள் புரியும்.

‘வந்தே மாதரம்’ என்ற பாடலின் 100ஆம் ஆண்டையொட்டி (செப்டம்பர் 7) நாடெங்கும் பாடப்பட வேண்டும்; குறிப்பாகக் கல்வி நிலையங்களில் பாடப்பட வேண்டும் என்று ஒரு கூட்டம் ஓங்கிக் குரல் கொடுக்கிறது. அதனை ஏற்க மாட்டோம் என்று இன்னொரு சாரார் எதிர்ப்புக் குரல் கொடுக்கின்றனர்.

இதன் பின்னணி என்ன? ஏற்பதற்கும் எதிர்ப்பதற்கும் இடையில்  உள்ள அந்த அகழி என்ன என்பது சிந்திக்கத்தக்கதாகும்.

இதைப் படியுங்கள்:

 

 

‘‘அண்ணா மகமதியப் பயல்களுடைய பள்ளிவாசல்களை இடித்துத்  தள்ளி அந்த இடத்தில்  ராத மாதவரின் (கிருஷ்ணன்) ஆலயத்தைக் கட்டுங்காலம் வருமா?

என்ன இது? 1838-ஆம் ஆண்டில் வங்கநாட்டின் கண்டபுரத்தில் பிறந்து 1894-இல் மறைந்த பங்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் வங்கமொழியில் யாத்த ‘ஆனந்த மடம்’ என்ற புதினத்தில் இடம் பெறும் உரையாடல் பகுதியே இது. அவ்வுரையாடலின் இறுதியில் எழுந்த பாடல்தான் ‘வந்தே மாதரம்!”

மேம்போக்கில் இதன் பொருள் ‘மாநிலத் தாயை வணங்குவோம்’ என்றாலும் இதன் ஆழமான பொருள் ‘துருக்கர்களைத் துரத்துவோம்’ என்பதுதான்.

எதனால் என்றால்-

பங்கிம் சந்திரப் பார்ப்பனரின் ஆனந்த மட நூலுக்கு அடிப்படைக் கரு. இந்நாட்டில் முஸ்லிம்கள் அடியோடு வங்காளத்தில் 1773-இல் ஹிந்துப் பரதேசிக் கூட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற பகைமை வெறியுடன் பண்ணிய கலகமே.

எனவே, ‘இத்தாடிப் பயல்களைத் தேசத்தைவிட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமுண்டு என்று எவனும் ‘நினைக்கக் கூடாது’ என்ற பச்சையான நச்சுக் கருத்தினையே சட்டர்ஜிப் பார்ப்பனன் தன் நூலில் வெளியிட்டிருப்பதில் வியப்பெதுவுமில்லை.

‘‘இம் மகமதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம். நண்பர்களே அதற்கான காலம் வந்து விட்டது’’ புதினத்தில் வரும் இந்த ‘வீரவுரை’யின்படி அழிவு வேலைக்கான காலம். சென்ற நூற்றாண்டிலேயே வந்துவிட்டதாம்!

கொடுமொழி தொடர்வதைக் கேளுங்கள்:

‘வாருங்கள்: நாம் சென்று அந்த இசுலாமியப் பாவிகளின் இருப்பிடங்களை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம்: அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளையெல்லாம் காற்றில் பறக்கவிடுவோம். பகவன் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!”

இவ்வளவுக் கடுமையான மொழிகள் எவ்வளவு கொடுமை யான உள்ளத்திலிருந்து வர முடியும் என்பதைக் கற்பனை செய்கை யில் நடுநிலையாளர் நெஞ்சம் நடுங்காதிருக்குமா? கயமை குடிகொண்ட ஆரியர் மனத்திலிருந்துதான் இத்தகைய சொற்கள் வெளிவரும்.

‘‘இம்முகமதியர்களை நிர்மூலம் செய்துவிட வேண்டும் என்பதுவே எங்கள் கருத்து என வெளிப்படையாகவே பறைசாற்றுகிற இந் நெடுங்கதையில் அடிக்கடி இசைக்கப்படுவதாக அதுவும் பதினாயிரம் இந்து மக்களால் ஒரே குரலாக இசைக்கப் பெறுவதாகக்   குறிப்பிடப்படும் பாட்டுத்தான் ‘வந்தே மாதரம்’ கீதம்.

எனவேதான் வங்கப் பெரு மக்களாகிய எம்.என். ராய், ரவீந்தரநாத் தாகூர். சுபாஷ் சந்திரபோஸ் முதலியோர் முஸ்லீம் வெறுப்பை உட்கொண்டிருக்கும் இப்பாடலை ஏற்க மறுத்தனர் என்றாலும் அன்றைய இந்துத் துவப் பேராயக் கட்சி (காங்கிரஸ்) முரட்டுத்தனமாக இப்பாடலைத் தேர்வு செய்து அறிமுகப்படுத்தி பயிற்சியளித்து, விடாப்பிடியாக இன்றுவரை பாடப்பெறும் நிலைமையை உண்டாக்கி விட்டது!

ஆக ‘வந்தே மாதரம்’ முஸ்லீம் மக்களும் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிலப் பகுதியில் பாடப்படுவதற்குரிய தகுதி படைத்த பொதுவான நாட்டு வணக்கப் பாடல் அன்று. இசு லாமிய உடன்பிறப்புக்களின்மீது அளவிறந்த கசப்பு – காழ்ப்பு -வெறுப்பு – பகைமையை தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் ‘ஒருசார்புப் பாடல்’ அது. மதச் சார்பின்மையை விடாது கடைப் பிடிப்பதாகக் கதைக்கப்படும் நாட்டில், அப்பாடலின் வரலாறு பின்புலம் – உட்கிடக்கை தெரியாமலேயே கோடிக்கணக்கா னோர் அதைப் பாடிக் கொண்டிருக்கின்றனர். எவ்வளவு அருவருப்பு – அவலம்!

(இந்தச் செய்திகள் தமிழில் பண்டிதர் சி. திருச்சிற்றம்பலம் பிள்ளை அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு 1919-ஆம் ஆண்டில் சென்னை தம்பு செட்டித் தெருவிலமைந்த (பார்ப்பன) கணேஷ் அண்ட் கம்பெனியாரால் இராண்டாம் பதிப்பாக அச்சிடப்பட்ட ‘ஆனந்த மடம்’ புதினத்தின் 41.88,112,162 ஆம் பக்கங்களில் இடம் பெற்றவை).

பங்கிம் சந்திர சட்டோபாத் யாயா என்ற பார்ப்பனரால் வங்க மொழியில் எழுதப்பட்ட நாவலுக் குப் பெயர் ஆனந்த மடம் என்பது. அந்த நாவலில் சேர்க்கப்பட்ட பாடல்தான் ‘இந்த வந்தே மாதரம் ஆகும் (1875 செப்டம்பர் 7)

பள்ளி வாசல்களை இடித்துத் தள்ளி இந்துக் கோயில்களைக் கட்ட வேண்டும் என்ற வெறியூட்டுகின்ற ஒரு நாவலில் இடம் பெற்ற பாட்டு. இந்தியாவை துர்க்கையாகவும், லட்சுமியாகவும் சரஸ்வதியாகவும் வருணிக்கிறது.

உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்ளாத  முஸ்லிம்களும் கூட்டத்தோடு கோவிந்தாக இதனைப் பாட வேண்டும் என்று வலியுறுத்துவது எவ்வளவுப் பெரிய உருட்டல் – மிரட்டல்  பாசிசம் என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஒரு மதச்சார்பற்ற நாட்டின் கீதமாக இதனை ஒலிப்பது சட்டப் படியும் பெருங் குற்றம்தானே!

இந்தப் பிரச்சினை ஏதோ இன்று நேற்று ஏற்பட்டதல்ல -இந்தப் பாடல் பாடத் தொடங்கப்பட்ட அந்தக் கால கட்டத்திலேயே எதிர்ப்பையும்கூட வரவழைத்துக் கொண்டது.

இந்தப் பாடலுக்கு அழகிய இசை அமைத்துக் கொடுத்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் இரவீந்திரநாத் அவர்களேகூட இந்தப் பாடல் தேசிய கீதத்துக்கு உகந்ததல்ல என்பதில் தெளிவாகவே இருந்தார்.

சுபாஷ் சந்திரபோசுக்கு அவர் எழுதிய கடிதம் இவ்வாறாக இருந்தது.

”வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங் குவதுபோல பாடப்பட்டு உள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத் தினர் இருக்கிறார்கள். எனவே இந்தப் பாடலை தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது’ என்று 1937-இல் நேதாஜிக்கு எழுதியுள்ளார் என்றால் இந்தப் பாடலின் தன் மையைப் புரிந்து கொள்ளலாம்.

இதில் சங்பரிவார்க் கும்பல் ஆர்வம் காட்டுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பள்ளி வாசல்களை இடித்து, இந்துக் கோயில் களை எழுப்ப வேண்டும் என்பது தானே அவர்களின் நோக்கும் போக்கும் ? 1992 டிசம்பர் 6-இல் அயோத்தியில் என்ன நடந்தது? அன்றைக்கு ‘ஆனந்த மடம்” நாவலில் எழுதப்பட்ட வெறியின் செயல்முறைத் தாண்டவம் தானே பாபர் மசூதி இடிப்பு!

  “வந்தே மாதர”ப் பிரச்சினை சுபாஷ் பாபு ஆணித்தரமான பதில்

51-வது காங்கிரஸ் மகாநாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாபு சுபாஷ் சந்திரபோஸ் வித்தல் நகருக்குச் செல்லும் வழியில் ராய்ப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் சில காங்கிரஸ்காரர் சுபாஷ் பாபுவைச் சந்தித்து ‘வந்தே மாதரம்’ விஷயமாகச் சில கேள்விகள் கேட்டார்கள்.

‘காங்கிரஸ் முஸ்லிம் லீகுக்குத் தலை குனிவானேன்? முஸ்லிம் லீக் பிற்போக்காளர் நிறைந்த ஸ்தாபனம் அல்லவா? தேசிய ஸ்தாபனமான காங்கிரஸ் வகுப்பு ஸ்தாபனமான முஸ்லிம் லீகுடன் சமரசம் செய்யலாமா?” என்றெல்லாம் ஒரு காங்கிரஸ் இளைஞர் கேட்டார்.

சுபாஷ் பாபு: ‘தலைகுனிவது என்னும் சொற்றொடருக்கு நீர் கற்பிக்கும் பொருளைத் தழுவியது இந்தப் பிரச்சினை

காங்கிரஸ் இளைஞர்: பண்டித ஜவஹர்லால் ஜனாப் ஜின்னாவுக்குக் கடிதம் எழுதவில்லையா?

சுபாஷ் பாபு: பதிலை எதிர்பார்க்க ஒவ்வொரு வருக்கும் உரிமையுண்டு. ஜனாப ஜின்னா மட்டும் பாபியா? அவருக்கு ஏன் கடிதம் எழுதக் கூடாது?-

காங்கிரஸ் இளைஞர்: ‘வந்தே மாதரம்’ விஷயத்தில் காங்கிரஸ் முஸ்லிம் லீகுக்கு வளைந்து கொடுக்கவில்லையா? இத்தருணத்தில் வயது முதிர்ந்த ஒருவர் வண்டிக்குள் பிரவேசித்து அதே கேள்வியைக் கேட்டார்.  “காங்கிரஸ்காரராகிய நாம் எப்பொழுதும் இந்தியா என்ற உணர்ச்சியுடனேயே நடந்து கொள்ள வேண்டும்.

சுபாஷ்பாபு: காங்கிரஸ் ஒரு தேசீய ஸ்தாபனமா யிருப்பதினாலே இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வகுப்பார் உணர்ச்சியைப் பரிசீலனை செய்ய வேண்டும். தேசிய கீதம் தேச மகாஜனங்களில் எல்லா வகுப்பாருக்கும் திருப்தியளிக்கக் கூடியதாயிருக்க வேண்டும்.

ஒருவர்: ஒரு காலத்திலே ‘வந்தே மாதரம்’ முஸ்லிம்களுக்குத் திருப்தியாகத்தானே இருந்தது.

சுபாஷ்பாபு: முஸலிம்கள் அபிப்பிராயத்தை முன் நிறுத்திக் கொண்டு வந்தே மாதரப் பாடலை நீங்கள் பரிசீலனை செய்ததுண்டா?

முதியவர்: தேசிய முஸ்லிம்கள் வந்தே மாதரத்தை ஆட்சேபிக்கவில்லையே?

சுபாஷ்பாபு: தேசீய முஸ்லிம்களை கேட்டுக் கொண்டதினாலேயே காரியக் கமிட்டியார் வந்தே மாதரப் பிரச்சினையைப் பரிசீலனை செய்து முடிவு கூறினார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டிராவிட்டால் காரியக் கமிட்டியார் வந்தே மாதரத் தகராறில் தலையிட்டிருக்கவே மாட்டார்கள்.

(குடிஅரசு’ 20.2.1938)

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *