சென்னை, நவ.9– தேசிய கல்விக் கொள்கை (NEP) வடிவமைக்கப்படும்போது, ஒன்றிய அரசு ஒவ்வொரு மாநிலத்தின் தனிப்பட்ட கலாசாரம், மொழி மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத் திற்கும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கலாசாரம் மற்றும் மொழி உணர்வுகள் இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், அதுவே மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என்று கூறினார்.
தேசிய கல்விக் கொள்கை குறித்த தமிழ் நாட்டின் நிலைப்பாட்டை விளக்கிய அமைச்சர், “நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் கிடையாது.
இந்திய அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், மொழி கற்பதில் விருப்பத்திற்கும், கட்டாயத்திற்கும் வித்தியாசம் உள்ளது” என்று வலியுறுத்தினார்.
மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், எந்த நாட்டிற்குச் சென்றாலும், அங்குள்ள மொழியை அதன் வழியே எளிதில் அறிந்து கொள்ளலாம். எனவே, “தேசிய கல்விக் கொள்கை எனும் சட்டை, அனைவருக்கும் பொருந்தாது” என்று அவர் கூறினார்.
