உடுமலை சட்டமன்றத் தொகுதி விவரங்கள் பட்டியலில் இல்லை
– வாக்காளர்கள் குழப்பம்!
கோவை, நவ. 9– இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய சேவைகளுக்காக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘இ.சி.அய்.நெட்’ (ECI Net) செயலி, உடுமலை (125) சட்டமன்றத் தொகுதி விவரங்கள் முழுவதுமாக விடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், ‘இ.சி.அய்.நெட்’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்தது.
இந்த செயலியில், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைத் தேடுவதற்கான வசதியும் உள்ளது. இதில், மாநிலம், மாவட்டம், சட்டமன்றத் தொகுதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு தேடலாம்.
உடுமலை சட்டமன்றத் தொகுதி (எண்: 125) குறித்த விவரங்களைத் தேடும்போது, அந்தத் தொகுதியின் பெயர் தொகுதிப் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
உடுமலை தொகுதி திருப்பூர் மாவட்டத்தின் கீழ் உள்ளது. ஆனால், ‘இ.சி.அய்.நெட்’ செயலியில் திருப்பூர் மாவட்டத்தின் கீழ் தேடும்போது, அவிநாசி, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதிகளின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியலில் நமது பெயரைத் தேடுவதற்கான ‘சர்ச் யுவர் நேம் இன் வோட்டர்ஸ் லிஸ்ட்’ (Search your name in Voters List) வசதியிலும், உடுமலை சட்டசபை தொகுதியைக் காணவில்லை.
எனவே, இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக இந்த மென்பொருள் பிழையைச் சரிசெய்து, உடுமலை (125) சட்டமன்றத் தொகுதியின் விபரங்களைச் செயலியில் சேர்க்க வேண்டும் என்று அப்பகுதி வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
