சென்னை, நவ. 9– மாணவர் பருவந்தொட்டு, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இயக்கங்களில் பங்கேற்று, நகர்மன்றத் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் – தமிழ்நாடு அமைச்சர் – தனது இந்த நாட்களில் சிதம்பரம் நடராசர் கோயிலை தீட்சதர்கள் பிடியிலிருந்து தமிழ்நாடு அரசு – தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் போராடி வெற்றி பெற்ற வி.வே.சுவாமிநாதன் அவர்களின் நூறாவது பிறந்த நாள் விழா குறித்து ஆலோசிக்க தமிழர் தலைவர் ஆசிரியர் விருப்பப்படி 3.11.2025 திங்கள் மாலை 5.30 மணிக்கு – சென்னை அண்ணா சாலை ‘காஸ்மா பாலிடன் கிளப்’ கூட்ட அரங்கில் – வி.அய்.டி.வேந்தரும், திராவிட இயக்க முன்னோடியுமான கோ.விசுவநாதன் தலை மையில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மேனாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், எச்.வி.ஹண்டே, தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. சட்டப் பேரவை மேனாள் கொறடா மருதூர் இராமலிங்கம், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் மா.சிறீதர் வாண்டையார், சிதம்பரம் நகை வணிகர் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.இராமநாதன், சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், வி.வி.எஸ்.பார்த்திபன், கவிஞர் வெண்ணிலா, மூத்த வழக்குரைஞர் ஜி.இராஜன், காஸ்மா பாலிடன் கிளப் மேனாள் தலைவர் சுந்தமேஸ்வரன், சென்னை குழந்தைகள் மருத்துவ டிரஸ்ட் மேனாள் இயக்குநர் எஸ்.சந்திரமோகன், மேனாள் தொலைக்காட்சி இயக்குநர் என்.சி.இராஜாமணி ஆகியோர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்
வருகிற 15.2.2026 அன்று சிதம்பரம் நகரில் முதல் நிகழ்ச்சியாக – நூற்றாண்டு விழா கொண்டாடுதல் பொறுப்பை, மூவேந்தர் முன் னேற்றக் கழகத் தலைவர் சிறீதர் வாண்டையார் ஏற்றுக்கொண்டார்.
பிறகு, சென்னையில் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதென்றும், நூற்றாண்டு மலர் வெளியிடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டு, விழா சிறக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேனாள் துணைவேந்தர் முனைவர் பேராசிரியர் வி.வி.எஸ்.இராசராசன் செய்திருந்தார்.
