ஈயைப் பார்த்து இளித்ததாம்! பித்தளை!

3 Min Read

கருஞ்சட்டை

அய்.நா. சபையில், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் வில்சன் உரை:

‘‘அய்.நா. அமைதிப் படை நடவடிக்கைகளில் இந்தியா ஒரு முன்னணி பங்களிப்பாளராக உள்ளது. அமைதியை உருவாக்குவதற்கும், நிலை நிறுத்துவதற்கும், பெண்களின் முழுமையான மற்றும் சமமான பங்கேற்பு இன்றியமையாதது என்பதை இந்தியா வலியுறுத்துகிறது. தேசிய அளவில், பெண்கள் முன்னேற்றத்தில் இருந்து, பெண்கள் தலை மையிலான முன்னேற்றம் என்ற இந்தியாவின் பயணம், எங்கள் சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் மாற்றியுள்ளது’’ என்று பேசினார் வில்சன் என்று செய்தி வெளியிட்ட ‘தினமலர்’, கடைசியில் கீழ்க்கண்ட வரிகளை கமெண்டாக எழுதியுள்ளது.

‘‘ஆனால் பாருங்கள், தமிழ்நாட்டில்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுது!’’

இதுதான்  (‘தினமலர்’, 8.11.2025) வெளி யிட்ட கமெண்ட்.

அய்.நா. மன்றத்தில் பேசும்போது தங்கள் உள்நாட்டுப் பிரச்சினைகளின் கீழ்த்தரமான செயல்பாடுகளை யாரும் பேசுவதில்லை. அது ஒருவகையான நாகரிகம்.

அப்படி ஏதாவது பேசியிருந்தால், இந்த ‘தினமலர்’ ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன வகையறாக்கள் பஞ்ச கச்சத்தை இறுக்கிக் கட்டி, பூணூலை முறுக்கிவிட்டு பூமிக்கும் விண்ணுக்குமாகக் குதியோ குதியென்று குதித்துத் துவம்சம் செய்திருப்பார்கள்.

உண்மையிலே இந்தியாவில், அதிலும் குறிப்பாக பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில், பெண்களின் பாது காப்பு எந்த வகையில் இருக்கிறது?

மத்திய பிரதேசத்தில் பி.ஜே.பி. தானே ஆள்கிறது? அங்கு நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை – உலக நாடுகள் மத்தியில் இந்தியாவைத் தலைக்குனிய வைக்கவில்லையா?

பன்னாட்டுப் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்குப் பட்டப் பகலில் நடந்த அந்தப் பாலியல் வன்கொடுமையைக் கேட்டால், நாக்கைப் பிடுங்கிக் கொண்டுதான் சாகவேண்டும்.

பன்னாட்டுப் போட்டியை நடத்தும் ஒரு மாநிலம், வெளிநாட்டுப் பெண்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுக்கவேண்டியது – அவசியம் என்பதை யாரும் சொல்லவேண்டிய அவசியமில்லை.

ஆஸ்திரேலிய வீராங்கனைகளை, அவர்கள் தங்கியிருந்த விடுதியில் அருகிலேயே காலிகள் பட்டப் பகலிலேயே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர்.

இதற்கு மத்திய பிரதேச ஆளும் பி.ஜே.பி. அரசு சொன்ன சமாதானம் – அந்தப் பட்டப் பகல் பாலியல் வன்கொடுமையைவிடக் கேவலமானது!

‘‘பெண்கள் ஏன் ஓட்டலை விட்டு வெளியே வந்தார்கள்?’’ என்பதுதான் பி.ஜே.பி. ஆட்சியாளர்கள் எழுப்பிய கேள்வி.

தமிழ்நாட்டில், ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பாலியல் வன்கொடுமையை (அதையும் நாம் கண்டிக்கவே செய்கிறோம். அதே நேரத்தில், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படவும் செய்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது!) அரசியல் பிரச்சாரத்துக்கு பி.ஜே.பி. மற்றும் அதன் கிளைகளும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம்.

பி.ஜே.பி. ஆளும் மத்திய பிரதேசம் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இழைக்கப்பட்ட வல்லுறவு பன்னாட்டு அவமானத்தைத் தேடித் தந்திருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? மறுக்கவும்தான் முடியுமா?

இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமை அதிகம் நடைபெறுவது – பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில்தான் என்பதை மறுக்கவே முடியாது!

‘‘ஈயைப் பார்த்து இளித்ததாம் பித்தளை’’ என்ற பழமொழிக்கான விளக்கம் என்ன தெரியுமா?

ஒரு பித்தளையைப் பார்த்தவுடன் அதில் சிறிது நேரம் அமர்ந்து, சிறிது நேரம் நக்குகிறது ஒரு ஈ! அதில் எந்த ஒரு சுவையும் இல்லை என்பதை உணர்ந்ததாம். அந்த நிலையைப் பார்த்து அந்தப் பித்தளை இளித்தது என்பது அந்தப் பழமொழியின் விளக்கம்!

அதைப் போல, தன் முதுகில் ஆயிரம் வண்டி அழுக்கு அப்பிக்கிடக்கிறது; ஆனால், மற்றவரின் முதுகைப் பார்த்து நையாண்டி செய்வது – ‘தினமலர்’, பி.ஜ.பி. வகையறாக்களுக்கு உடன்பிறந்த ‘பிளேக்’ நோயாகும்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *