சென்னை, நவ.8- திறன்மிகு மற்றும் டிஜிட்டல் பலகைகள், தொலைக்காட்சி போன்ற டிஜிட்டல் கற்பித்தல் செயல்பாடுகளில் அரசு பள்ளிகள் சிறந்து விளங்குகின்றன. இதன் மூலம் பள்ளிக்கல்வியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.
டிஜிட்டல் கற்பித்தல் செயல்பாடுகள்
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வியில் சிறந்து விளங்க ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. அதில் மிக முக்கியமானதுதான் டிஜிட்டல் கற்பித்தல்-கற்றல் செயல்பாடுகள் ஆகும்.
அந்தவகையில் தனியார் பள்ளிகளில் மட்டுமே டிஜிட்டல் கற்பித்தல்-கற்றல் செயல்பாடுகள் தலைதூக்கி இருந்தன. இப்போது அந்த நிலை மாறி அரசு பள்ளிகளும் டிஜிட்டலில் பட்டையை கிளப்பி வருகின்றன.அதன்படி, ஒன்றிய அரசின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யு.டி.அய்.எஸ்.இ.) வெளியிட்ட 2024-2025 ஆம் ஆண்டு புள்ளி விவரங்களில் இது தெளிவாகியுள்ளது.
திறன்மிகு வகுப்பறைகள்
தமிழ்நாட்டில் 57 ஆயிரத்து 985 பள்ளிகள் இருக்கின்றன. இதில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 626 ஆகும். இந்த பள்ளிகளில் 26 ஆயிரத்து 860 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் வாயிலாக மாணவ-மாணவிகளுக்கு டிஜிட்டல் கற்பித்தல் செயல்பாடுகள் நடக்கின்றன.
இந்த திறன்மிகு வகுப்பறைகளில் டிஜிட்டல் பலகைகள், திறன்மிகு பலகைகள், மெய்நிகர் வகுப்பறைகள், திறன்மிகு தொலைக்காட்சி ஆகியவற்றின் மூலம் இந்த கற்பித்தல் பணிகள் மாணவ- மாணவிகளுக்கு நடக்கின்றன. பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு டிஜிட்டல் கற்பித்தல் செயல்பாடுகளில் சிறந்து விளங்குவது தெரிகிறது. இதில் பஞ்சாப் மாநிலம் அரசு பள்ளிகளில் சிறந்த பட்டியலில் இருக்கிறது. அதற்கடுத்தபடியாக தமிழ்நாடுதான் உள்ளது.
கைப்பேசி பயன்பாடு
இதேபோல், கற்பித்தல் செயல்பாடுகளுக்காக கைப்பேசி பயன்படுத்தும் பள்ளிகளின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடே சிறந்து விளங்குகிறது. அதிலும் அரசு பள்ளிகள் இதில் ‘நம்பர் ஒன்’ இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் 57 ஆயிரத்து 935 பள்ளிகளில் 38 ஆயிரத்து 987 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கற்பித்தலுக்காக கைப்பேசியை பயன்படுத்துகின்றனர். அவற்றில் 22 ஆயிரத்து 630 அரசு பள்ளிகள் ஆகும்.
இதன் மூலம் நாட்டில் பள்ளிக்கல்வியில் டிஜிட்டல் செயல்பாடுகளில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னுதாரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
