சென்னை, நவ. 8- சென்னை பெருநகரில் போக்குவரத்துத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் முக்கியப் பணியைச் செய்துவரும் கும்டா (CUMTA Chennai Unified Metropolitan Transport Authority) என்ற போக்குவரத்து குழுமம், தற்போது தமிழ்நாட்டின் மேலும் நான்கு முக்கிய நகரங்களின் சாலை மேம்பாட்டுப் பணிகளிலும் ஈடுபட உள்ளது.
2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கும்டா குழுமம், சென்னை பெருநகரப் பணிகளுடன் சேர்த்து, நகர் ஊரமைப்பு துறையின் (Directorate of Town and Country Planning DTCP) முழுமைத் திட்டம் (Master Plan) தயாரிப்புப் பணிகளிலும் ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறது.
தற்போது, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, சென்னை மட்டுமின்றி, ஓசூர், தூத்துக்குடி, சேலம், திண்டுக்கல் ஆகிய நகரங்களிலும் சாலை தொகுப்புத் திட்டங்களை (Road Networking Schemes) செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் அனைத்தையும் தயாரித்து செயல்படுத்தும் பணிகளை கும்டாவிடம் ஒப்படைக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முடிவெடுத்துள்ளது.
இதையடுத்து, கும்டா குழுமம் இந்த 5 நகரங்களுக்கான சாலை தொகுப்பு திட்டங்கள் தயாரிப்புக்கான ஆரம்பக் கட்டப் பணிகளைத் துவக்கியுள்ளது.
இந்தத் திட்டங்கள் நகர்ப்புற போக்குவரத்து ஒருங்கிணைப்பையும், நெரிசல் குறைப்பையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளன.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மூலம் 5 நகரங்களில் புதிய சாலைத் திட்டங்கள்!
Leave a Comment
