சென்னை, நவ.8- தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்காக அறிவியல் சார்ந்த அறிவுத் திறன் ‘அக்வா ரெஜியா – தி ஸ்கூல் வினாடி – வினா’ 2026ஆம் ஆண்டுக்கான சென்னை பிராந்திய இறுதிப் போட்டிகளை டைம் கல்வி நிறுவனம் மற்றும் பொதுச் சட்ட சேர்க்கைத் தேர்வு தயாரிப்பு நிறுவனம் இணைந்து சென்னை தி மியூசிக் அகாடமியில் நடத்தியது.
‘அக்வா ரெஜியா – தி சயின்ஸ் வினாடி – வினா’ என முன்னர் அழைக்கப்பட்ட இந்தப் போட்டி, 2007ஆம் ஆண்டு உலகின் மிகப் பெரிய வினாடி – வினா போட்டி என கின்னஸ் உலகச் சாதனையில் பரிசு பெற்றது. மொத்தம் 23 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 5,500 மாணவர்கள் முதற்கட்ட எழுத்துச் சுற்றில் பங்கேற்றனர். அவர்களுள் இருந்து தேர்வு செய்யப்பட்ட 110 அணிகள் பிராந்திய இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் அய்ந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள், கோப்பைகள், மேலும் பங்கேற்பு மற்றும் சிறப்பிற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எஸ்.கேப்ரில் ஜோசப் – இ.பிரசன்னா வெங்கடேஷ் இணைந்து முதலிடத்தைப் பெற்றனர்.
அதேபோல், ஜி.கிருத்திக் – ஜி.கிரினிஷ் இணைந்த அணி இரண்டாம் இடத்தைப் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்வியாளர் நவாப்சாதா ஆசிஃப் அலி, டைம் கல்வி நிறுவன இயக்குநர்கள் மந்திரி அரவிந்த் குமார், விஸ்வநாத் பில்லுட்லா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
