மாநகராட்சிக்கு போக்குவரத்து காவல்துறை பரிந்துரை
சென்னை, நவ.8- சென்னையில் அதிவேக விபத்தை தடுக்கும் நடவடிக்கையாக மேம்பாலங்கள் நடுவே பிளாஸ்டிக் தடுப்புகளை மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்ள போக்குவரத்து காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
பைக் ரேஸ் கலாச்சாரம்
இளைஞர்களை கவரும் வகையில் அதிக சிசி திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்த சமயத்தில் சென்னையில் ‘பைக் ரேஸ்’ எனப்படும் மோட்டார் சைக்கிள் பந்தய கலாச்சாரம் அதிகரித்து காணப்பட்டது. சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் வாகன பரபரப்பு அடங்கிய பின்னர், அதி வேகத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் வாலிபர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அதிவேகம் ஆபத்து என்பதற்கு ஏற்ப பைக்ரேசால் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவர்களும், அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும், உடல் உறுப்புகளை இழக்கும் சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கின. இதைத்தொடர்ந்து ‘பைக் ரேஸ்’ கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையில் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டனர்.
29 பேர் கைது
சென்னையில் ராயபுரம், நேப்பியர் பாலம், கிண்டி, மதுரவாயல் பைபாஸ் சாலை உள்ளிட்ட இடங்கள் இரவு நேரங்களில்‘பைக்ரேஸ்’ பந்தய சாலை போன்று பயன்படுத்தப்பட்டு வந்தன. எனவே இந்த இடங்களில் இரவு நேரங்களில் போக்குவரத்து காவலர்கள் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியைத் தொடங்கினார்கள்.
இந்த நடவடிக்கை மூலம் ‘பைக் ரேஸ்’ கட்டுப்படுத்தப்பட்டது. தடையை மீறி பைக் ரேசில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளில் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பைக் ரேசில் ஈடுபடும் நபர்களின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையையும் போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். எனினும், அவ்வப்போது காவல் துறையினருக்கு சவால் விடும் வகையில் பைக் ரேஸ் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டும் இருக்கிறது.
பிளாஸ்டிக் தடுப்புகள்
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் நேற்று முன்தினம் (6.11.2025) நடைபெற்ற விபத்தில் 2 பேர் பலியானதற்கு பைக்ரேஸ்தான் காரணம் என்று வெளியான தகவலை போக்குவரத்து காவல்துறையினர் மறுத்துள்ளனர். அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் முந்திச் செல்ல முயன்றதே இந்த விபத்துக்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
விபத்து நடைபெற்ற மேம்பாலத்தில் சாலை நடுவே தடுப்புகள் இல்லாததே இந்த விபத்துக்கான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே சென்னையில் தடுப்புகள் இல்லாத மேம்பாலங்களில் நடுவே மாநகராட்சி உதவியுடன் பிளாஸ்டிக் தடுப்புகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
