2026 இல் மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான் வரவேண்டும்!
களக்காட்டில் கழகத் தலைவர் ஆசிரியர் – ஆரியர் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி உரை!
களக்காட்டில் கழகத் தலைவர் ஆசிரியர் – ஆரியர் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி உரை!
நெல்லை. நவ, 8- நெல்லை களக்காட்டில், “மீண்டும் மனுதர்மம் ஆட்சிக்கு வந்தால் சொத்துரிமை பறிபோகும்; கல்வி உரிமை பறிபோகும். அண்ணல் அம்பேத்கர் பெண்களுக்கு சொத்தில் உரிமை வேண்டும் என்று சட்டம் கொண்டு வர முனைந்த போது, அதை முறியடிக்க, காஞ்சி மடத் தலைவர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி – அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியருடன் நடத்திய உரையாடல் போன்ற கருத்துகளை சுட்டிக்காட்டி, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
நெல்லை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் களக்காடு நகராட்சியில் அருணா திருமண மண்டபத்தில் 30.10.2025 அன்று மாலை 6 மணியளவில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ்.- இதுதான் பி.ஜே.பி.ஆட்சி; இதுதான் திராவிடம் – இதுதான் திராவிட மாடல் ஆட்சி மற்றும் பெரியார் உலகம் நன்கொடையளிப்பு விழா” எனும் தலைப்பில், தொடர் பரப்புரைக் கூட்டத்தில் மூன்றாம் நிகழ்வாக, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
களக்காடு தெப்பக்குளம் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தி, கழகத் தலைவரை வரவேற்கும் விதமாக பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. “இரட்டைக்குழல் துப்பாக்கிகள்” எனும் தொடரை நினைவுபடுத்தும் விதமாக, திராவிடர் கழகம், தி.மு.க. கொடிகளும் சாலையின் இரு மருங்கிலும் பட்டொளி வீசிப் பறந்தன. உள்ளூரில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக 5 பதாகைகளை காவல்துறையினரே கழட்டிச் சென்றதை நினைவுபடுத்தி, “நிகழ்ச்சி நடைபெறுவதற்கு உள்ளூரில் எதிர்ப்பு இருந்தது என்றும், இதற்குப் பின்னணியில் திராவிடர் இயக்கத்தால் பயன்பெற்ற பார்ப்பனரல்லாதாரே காரணமாக இருந்தனர் என்றும், திராவிடர் கழகம், தி.மு.க. பொறுப்பாளர்கள் இணைந்து காவல் துறையினரிடம் நியாயம் கேட்டுப் போராடித்தான் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ம.கிரகாம்பெல், முன்னிலை ஏற்று தான் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
இன்னமும் எதிர்நீச்சல் தான்!
இந்நிகழ்வில் களக்காடு பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சந்திரசேகரன் வரவேற்புரை வழங்கி சிறப்பித்தார். நெல்லை மாவட்டத் தலைவர் இரா.வேல்முருகன் தலைமை தாங்கி உரையாற்றினார். திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், நகர் மன்றத் தலைவர் சாந்தி சுபாஷ், நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜார்ஜ் வில்சன், களக்காடு தி.மு.க. வடக்கு ஒன்றியச் செயலாளர் செல்வ கருணாநிதி, ம.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் துரை அழகன், சி.பி.அய்.நகரச் செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர் ஜார்ஜ் கோசல், களக்காடு நகர தி.மு.க. செயலாளர் மணிசேகரன், களக்காடு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.சி.ராஜன்,குமரி மாவட்டத் தலைவர் ம.,மு.சுப்பிரமணியம், குமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேந்தன், தூத்துக்குடி மாவட்டக் காப்பாளர்கள் பால் இராசேந்திரம், இரா.காசி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மேடை ஒருங்கிணைப்பை மேற்கொண்டு சிறப்பித்தார்.
பெரியார் உலகத்திற்கு நன்கொடை!
பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநிலத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் மற்றும் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ம.கிரகாம் பெல் உள்ளிட்டோர் கழகத் தலைவருக்கு சால்வையணிவித்து சிறப்பித்தனர். மேடையில் இருக்கும் பிரமுகர்களுக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. தலைமைக் கழகம் சார்பில் தி.மு.க. மாவட்டச் செயலாளருக்கு கழகத் தலைவர் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். ”நீட்” தேர்வை எதிர்த்து தமிழ்நாடு தழுவிய அளவில் கழகத்தின் சார்பில் சென்ற இருசக்கர வாகனப் பேரணியில், திருநெல்வேலியில் இருந்து சேலம் வரை பங்கேற்ற தி.மு.க. தோழர் திருக்கரங்குடி நகரச் செயலாளர் கசமுத்து அவர்களுக்கு ஆசிரியர் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். அதைத் தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் நெறியாள்கையில் பெரியார் உலகம் நன்கொடை வழங்கும் நிகழ்வு தொடங்கியது. நன்கொடை கொடுப்பவர்களின் பெயர் பட்டியலை வாசித்தார். தோழர்கள் வரிசையாக வந்து பெரியார் உலகத்திற்கு நிதி அளித்தனர். முன்னதாக தி.மு.க. மாவட்டச் செயலாளர் ம.கிரகாம்பெல் ரூபாய் 3 லட்சத்திற்கான காசோலையை தாய்க் கழகத் தலைவரிடம் வழங்கினார். மொத்தமாக இந்நிகழ்வில் பெரியார் உலகத்திற்கு ரூ.7 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. அனைவருக்கும் கழகத் தலைவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
திராவிடர் இயக்கத்தின் பெயர் அரசியல்!
நிதியளிப்பு விழா நிறைவு பெற்றவுடன் கழகத் தலைவர் உரையாற்றினார். “மூன்று முறை பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆனாலும் சோர்வடையாமல் தோழர்கள் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களுக்கு தலை தாழ்ந்த நன்றி” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே தொடங்கினார். மேலும் அவர், தி.மு.க. மாவட்டச் செயலாளரின் பெயர் கிரகாம்பெல் என்பதால், அனிச்சையாக அதுதொடர்பாக பேசினார். அதாவது, “கிரகாம்பெல் பிறந்த நாளில் இவர் பிறந்தார். அதனால் இவருக்கு அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லிவிட்டு, அப்படியே திராவிடர் இயக்கத்தின் பக்கம் வந்து, கிரகாம்பெல் தமிழா? இல்லை! இன்றைக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயரும் தமிழ் இல்லை. அது பொதுவுடமை தத்துவத்தை கட்டிக்காத்த சோவியத் ஒன்றியத்தின் அதிபர் ஜோசப் ஸ்டாலின் பெயர். முன்னது அறிவியல் அறிஞர்; பின்னது பொதுவுடைமை தத்துவத்தின் அடையாளம்” என்று தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று தீவிரமாக பிரச்சாரம் செய்த திராவிடர் இயக்கம் இத்தகைய பெயர்களை சூட்டுவது முரண் அல்ல என்பதை சுட்டிக்காட்டினார்.
அதுபோலவே நீதிக்கட்சி ஆட்சியில் குற்றப்பரம்பரை என்ற பெயரை பொப்பிலி அரசரும், தேவர் பெருமகனும் முயன்று முடியாமல், கலைஞர் ஆட்சிக்கு வந்து தான் அதை சீர்மரபினர் என்று மாற்றினார். மாற்றுத்திறனாளிகள், திருநங்கை, மருத்துவப் பயனாளிகள் என்பதும் சுயமரியாதையுடன், தன்னம்பிக்கையுடன் தொடர்புடையது தான்” என்று, திராவிட இயக்கத்தின் பெயர் அரசியலை நடப்பு வரையிலுமாக தொட்டுக் காட்டினார்.
தொடர்ந்து திராவிடர் இயக்கத்தின் முக்கியமான கொள்கையான மகளிர் உரிமை மீட்பு பற்றி குறிப்பிட வந்த ஆசிரியர், ”நாடாளுமன்றத்தின் பெண்களுக்கு 33 விழுக்காட்டுக்கான மசோதாவை நிறைவேற்றிவிட்டு, அது அமலுக்கு வருவதை உறுதி செய்யாமல் விட்டுவிட்ட ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடி அவர்களின் சூழ்ச்சியையும், 50 விழுக்காடு நகராட்சி ஊராட்சிகளில் பெண்கள் கேட்காமலேயே ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் ஒப்பிட்டுக் காட்டினார். “சம உரிமை வழங்குவது திராவிட மாடல், பிறவி பேதம் காப்பது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.மாடல்” என்று அதற்கான காரணத்தையும் தொடர்ந்து சொன்னார். மேலும் அவர், அனைவரும் மறந்துபோன ஒரு முக்கியமான திராவிட மாடல் அரசின் சாதனையை சுட்டிக்காட்டினார். அதாவது,
சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் கட்டணச் சலுகை என்ற ஆணையை எடுத்துரைத்து, திராவிடர் இயக்கத்தின் அருமையை மக்களுக்கு புரிய வைத்தார். ”இதற்கு மாறான மனுதர்மம் ஆட்சிக்கு வந்தால்… இந்திய அரசமைப்புச் சட்டம் வீழ்ந்தால்… என்னாகும்?” என்றொரு கேள்வி கேட்டு, ”இதுவரை நமக்கிருந்த சொத்துரிமை பறிபோகும்; கல்வி உரிமை பறிபோகும்” என்று பதிலும் சொல்லி எச்சரித்தார். முத்தாய்ப்பாக, நூறு ஆண்டு பேசப்படக்கூடிய சாதனைகளை செய்திருக்கும் திராவிட மாடல் அரசுதான் மீண்டும் வரவேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக திராவிடர் கழக களக்காடு ஒன்றிய செயலாளர் செல்வ.சுந்தரசேகர் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் களக்காடு நகராட்சியைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தோழர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கழகத் தலைவர் தமது முகாம் அலுவலகத்திற்குப் புறப்பட்டார்
