கொடைக்கானல், நவ. 8- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 01.11.2025 அன்று கல்விச் சுற்றுலாப் பயணமாக மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சென்றனர்.
பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் களின் தலைமையில் மாணவர்கள் உற்சாகமுடன் புறப்பட்டு, அறிவும் அனுபவமும் கலந்த ஒரு பயணத்தை மேற்கொண்டனர்.
எலைட் சாக்லேட்
முதலில் மாணவர்கள் எலைட் சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் சென்றனர். அங்கு சாக்லேட் தயாரிக்கும் முறைகள், பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை நிறுவன பொறுப்பா ளர்கள் விரிவாக விளக்கினர். மாண வர்கள் தயாரிப்பு செயல்முறையை நேரில் கண்டு ஆர்வமுடன் கற்றுக் கொண்டனர்.
அதன் பின்னர் அவர்கள் தாவர வியல் பூங்காவை சென்றடைந்தனர். அங்கு அரிய தாவரங்கள், மலர்கள், மூலிகைகள் உள்ளிட்ட பல்வேறு இனங்களை பார்த்து உயிரியல் அறிவை மேம்படுத்தினர். இயற்கையின் மடியில் குளிர்ச்சியான சூழலில் மாணவர்கள் ஒளிப்படம் எடுத்து இனிய நினைவுகளைப் பதித்தனர்.
பின்னர் மாணவர்கள் குணா குகை, பில்லர் ராக் போன்ற அழகிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றனர். மலைகள் சூழ்ந்த மந்தமான பனிமூட்டத்திற்குள் குணா குகையின் இயற்கை வடிவங்கள் மாணவர்களை ஆச்சரியமூட்டின. பில்லர் ராக் பகுதியில் இருந்து கீழ்நோக்கி விரிந்த கொடைக்கானலின் அழகிய காட்சியை ரசித்தனர்.
முழு நாளும் சிரிப்பும் கற்றலும் இணைந்த இப்பயணம் மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. இத்தகைய பயணங்கள் மாணவர்களின் புத்துணர்வையும், சமூக நெறியையும், இயற்கை பற்றிய நேசத்தையும் வளர்க்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இக்கல்விச் சுற்றுலாவை சிறப்பாக திட்டமிட்டு நிறைவேற்றிய பள்ளித் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பெற்றோர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
