வேலூர் வி.அய்.டி. பல்கலைக் கழகத்தில் – தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நினைவுச் சொற்பொழிவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

10 Min Read

இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால், நாமெல்லாம் படித்துப்
பட்டதாரிகளாக ஆகியிருக்க முடியுமா? அதனை எதிர்த்து ஒழித்ததினால்தான் உலகத்தவர்கள் பாராட்டக்கூடிய ஓர் அமைப்பாக வி.அய்.டி. பல்கலைக் கழகக் கல்வி நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்கள்!
தத்துவங்களும் வென்றிருக்கின்றன; அதனால் ஏற்பட்ட விளைச்சல்களும் செழுமையாக இருக்கின்றன!

        வேலூர், நவ.8- வேலூர், நவ.8-    இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால், நாமெல்லாம் படித்துப் பட்டதாரிகளாக ஆகியிருக்க முடியுமா?  வி.அய்.டி.  போன்ற கல்வி நிறுவனங்கள் வந்திருக்க முடியுமா? அந்தக் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடி ஒழித்தார்கள். அதன் காரணமாகத்தான் ஆற்றல்மிகுந்தவர்கள், உலகத்தவர்கள் பாராட்டக்கூடிய ஓர் அமைப்பாக வி.அய்.டி. பல்கலைக் கழகக் கல்வி நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எனவே, தத்துவங்களும் வென்றிருக்கின்றன; அதனால் ஏற்பட்ட விளைச்சல்களும் செழுமையாக இருக்கின்றன என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா

நினைவுச் சொற்பொழிவு

கடந்த 22.10.2025 அன்று வேலூர், வி.அய்டி பல்க லைக் கழக அண்ணா அரங்கத்தில் நாவலர் – செழியன் அறக்கட்டளை மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நினைவுச் சொற்பொழிவு முதல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

இந்த இயக்கம் என்ன செய்தது?

மானமும், அறிவையும் கொடுத்தது.

அதேபோல, தாய்த்திருநாடு தமிழ்நாடு.

ஹிந்தியைத் திணிக்காதே என்பதுதான் எங்களுடைய நிலை!

ஹிந்திக்கு இங்கே இடமில்லை. தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ஹிந்தி மொழிமீது வெறுப்பு கிடையாது. படிக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள் தாராளமாகப் படித்துக் கொள்ளலாம். ஆனால், அதை எங்கள் மீது திணிக்காதே என்பதுதான் எங்களுடைய நிலை.

மூன்று சட்டங்களைக் கொண்டு வந்து,  அந்த ஆட்சியையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்றார்.

எந்தப் பெரியார் தன்னை ஆளாக்கினாரோ, அவரி டம், சுயமரியாதை திருமணச் சட்டம், சட்டப்படி சரியாக இருக்கிறதா, என்று கேட்டு, அந்தச் சட்டத்தை நிறைவேற்றினார்.

அப்போது அண்ணா சொன்னார், ‘‘நான் அமெ ரிக்காவில் சிகிச்சையில் இருந்த நேரத்தில், சில செய்திகளைக் கேள்விப்பட்டேன். இந்த ஆட்சியை நீடிக்க விடக்கூடாது; இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றெல்லாம் சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆட்சிக்கு எதிராகக் குறுக்குச்சால் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அதற்குரிய ஏற்பாடுகள் பெரிய அளவில் நடந்து கொண்டுள்ளன என்று கேள்விப்பட்டேன்.

மூன்று முக்கியமான அறிவிப்புகள்!

அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்ன வென்றால்,

ஓராண்டுக்கு முன்னால், நான் பதவிக்கு வந்தேன். இந்த ஓராண்டில் மூன்று முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறேன். ஒன்று,  சுயமரியாதைத் திரு மணத்துக்குச் சட்ட அங்கீகாரம். இரண்டு,  தாய்த் திருநாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம். மூன்று, தமிழ்நாட்டில் ஹிந்திக்கு இடமில்லை என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அறிவிப்பு.

அண்ணாதுரைதான்
இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்!

இதைப் பார்த்துவிட்டுப் பலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. இவர்களை விட்டுவைக்கலாமா? ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். முடியுமா என்று நான் சவால் விட மாட்டேன். உங்களால் முடியும். ஆனால், கலைத்து விட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து அண்ணாதுரை கொண்டுவந்த இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று கருதினாலே, உடனே மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும். அந்த அச்சம் இருக்கிற வரையில், அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள். அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும், இல்லா விட்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்” என்று சொன்னார்.

எனவே, அய்யா – அண்ணா என்று சொல்வது சாதாரணமானதல்ல.

அண்ணா எழுதிய
‘‘அந்த வசந்தம்!’’

18 ஆண்டுகள் கழித்து, தந்தை பெரியார் பிறந்த நாள் ‘விடுதலை’ மலருக்காக, அண்ணாவிடம் ஒரு கட்டுரை கேட்கிறேன்.  முதலமைச்சராக அண்ணா அவர்கள் இருந்ததால், பணி நெருக்கடி அவருக்கு. அப்படி இருந்தும், ஒரு கட்டுரையை எழுதி அனுப்புகிறார்.

அந்தக் கட்டுரைக்கு தலைப்பு என்ன தெரியுமா?

‘‘அந்த வசந்தம்!’’ என்பதுதான்.

பெரியார் – அண்ணா எப்படிப்பட்டவர்கள் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும்.

அந்தக் கட்டுரை ‘‘பெரியார் ஒரு சகாப்தம்’’ என்ற புத்தகத்தில்கூட இடம்பெற்றிருக்கின்றது.

அந்தக் கட்டுரையில் முதலமைச்சர் அண்ணா சொல்கிறார்,

‘‘எனக்கென்று ஒரு வசந்த காலம் இருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு – ஆண்டு பலவற்றுக்குப் பிறகு – அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு இன்றையக் கவலைமிக்க நாள்களிலே எழ முடியாத புன்னகையைத் தருவித்துக் கொள்ளுகிறேன். பெரியாருக்கு அந்த வசந்த காலமும் தெரியும்; இன்று நான் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும்.

‘வசந்த காலம்’ என்றேனே, அந்த நாள்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி, அவருடன் காடுமேடு பல சுற்றி வந்த நிலை. அந்தக் காடு மேடுகளில் நான் அவருடன் தொண்டாற்றிய போது, வண்ண வண்ணப் பூக்கள் குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறு மணம் எங்கும் பரவிடக் கண்டேன்.

அப்போது, கலவரம் எழாமல் ஒரு பொதுக் கூட்டத்தை ஒழுங்காக நடத்தி முடித்திட முடிந்தால் போதும், பெரிய வெற்றி என்றே பெருமிதம் தோன்றும். புறப்படு முன்னர், தலைபோகும் – தாடிபோகும் தடி போகும் உயிர்போகும் என்ற மிரட்டல் கடிதங்களைப் படித்திட வேண்டிய நிலை.

தமிழகத்திலேயே ஒரு புதிய திருப்பம்

அண்ணாதுரை! இதைப் பார்த்தாயா! என்று ஒரு கடிதத்தை வீசுவார். ஆமாமய்யா! என்று ஒரு கடிதத்தைத் தருவேன். வருகிறாயா? என்று என்னைக் கேட்க மாட்டார் – வருவேன் என்பது அவருக்கு நன்கு தெரியுமாதலால். செல்வோம்; பெரியாரின் பேருரை நிகழ்த்தப்படும். வந்தவர்களில், உருட்டல், மிரட்டல் கடிதம் எழுதியவர் இருந்திருப்பின் அடுத்த கூட்டத்திற்கு அவர் அய்யாவிற்காக மாலை வாங்கிக் கொண்டுதான் வருவார்! அத்தகைய தெளிவும் வாதத்திறமையும் பேச்சில் கிடைக்கும். அத்தகைய தெளிவுரை பெற்றுப் பெற்று, தமிழரில் பலர், பலப்பலர் திருந்தினர் என்பது மட்டுமல்ல, தமிழகத்திலேயே ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டு விட்டிருக்கிறது.

ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை.

தந்தை பெரியாரோடு இருந்த காலம்தான் வசந்த காலம்: அண்ணா

அந்த வரலாறு தொடங்கப்பட்டபோது நான் சிறுவன். அந்த வரலாற்றிலே புகழேடுகள் புதிது புதிதாக இணைக்கப்பட்ட நாள்களிலே ஒரு பகுதியில் நான் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். அந்த நாள்களைத்தான் என் வசந்தம் என்று குறிப்பிட்டி ருக்கிறேன். பெரியாருடன் இணைந்து பணியாற்றியவர், பற்பலர். அவருடன் மற்ற பலரைவிட இடைவிடாது இருந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தவன் நான். அந்த நாள்கள் எனக்கு மிகவும் இனிமையான நாள்கள்; இன்றும் நினைவிலே கொண்டு வரும்போது இனிமை பெறுகின்றேன்.

எத்தனை எத்தனையோ கருத்துகளை உரையாடலின் மூலம் தந்திருக்கிறார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பதை நான் கற்றுணரும் வாய்ப்பும் தந்தார். பொதுத் தொண்டாற்றுவதில் ஓர் ஆர்வமும், அகமகிழ்வும், மனநிறைவும் பெற்றிடச் செய்தார்.

‘‘நான் கண்டதும் கொண்டதும்
ஒரே தலைவரைத்தான்!’’

கோபத்துடன் அவர் பலரிடம் பேசிடக் கண்டி ருக்கிறேன்; கடிந்துரைக்கக் கேட்டிருக்கிறேன்; உன்னை எனக்குத் தெரியும் போ! என்று உரத்த குரலில் கூறியதைக் கேட்டிருக்கிறேன்; ஒருநாள் கூட அவர் என்னிடம் அவ்விதம் நடந்து கொண்டதில்லை. எப்போதும் ஒரு கனிவு, எனக்கென்று தனியாக வைத்திருப்பார். என்னைத் தனது குடும்பத்தில் பிறவாப் பிள்ளை எனக் கொண்டிருந்தார்.

நான் கண்டதும் கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான்’’ என்று சொன்ன ஒரே தலைவர் அண்ணா அவர்கள்.

பதவிக்காக வந்ததல்ல திராவிட இயக்கம். அத னால்தான், எந்தப் பதவிக்கும் போகாத வைகோ இருக்கிறார். அவருடன் இருக்கும் தோழர்களுக்குப் பதவியைப் பெற்றுக் கொடுத்தார். அவர் ஏணியாகத்தான் இருந்தாரே தவிர, அவர் ஒருபோதும் மேலே போக வில்லை என்றால், அது அண்ணாவிடமும், பெரியாரி டமும் கற்றுக்கொண்ட ஒன்று.

தந்தை பெரியாரோடு, அண்ணா அவர்கள் ஒரு முறை வடமாநிலம் உத்தரப்பிரதேசத்திலுள்ள அரித்துவாருக்குச் செல்கிறார். அங்கே நடைபெற்ற கூட்டத்தில், பெரியார் அவர்களுடைய உரையை, ஆங்கிலத்தில் அண்ணா அவர்கள் மொழி பெயர்ப்பார்.

சாமியார் என நினைத்துப் பெரியாருடைய காலில் விழுந்த வடமாநிலத்தவர்கள்!

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், கங்கை ஆற்றங்கரையோரமாக நடந்து செல்கிறார் பெரியார். பின்னால் அண்ணா அவர்கள் செல்கிறார்.

அங்கே நிறைய சாமியார்கள் உண்டு. வெள்ளை தாடியுடன் பெரியாரைப் பார்த்தவுடன், அவரையும் சாமியார் என்று நினைத்துவிட்டார்கள்.

நம்முடைய கல்வி வேந்தர் விசுவநாதன் அவர்கள் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தபோது, அவருடைய அறையில் பெரியார் படத்தை மாட்டியிருப்பதைப் பார்த்து, கல்லூரி தலைவரான ஃபாதர் வந்து, ‘இது யாருடைய படம்?’ என்று கேட்டிருக்கிறார்.

‘‘என்னுடைய தாத்தா படம்’’ என்று இவரும் சொல்லி யிருக்கிறார்.

அதேபோன்று, அண்ணாவும், பெரியார் பின்னால் சென்று கொண்டிருந்தார். அங்கே, சாமியாரைப் பார்த்ததும், சாமியார் கால்களில் ‘பொத்து பொத்தென்று’ காலில் விழுந்து கும்பிடுவார்கள். பெரியார், ஒரு பெரிய சாமியார் போல இருக்கிறது என்று நினைத்து, அவருடைய காலிலும் எல்லோரும் விழுகிறார்கள். பின்னால் வந்த அண்ணா அவர்கள், குளிர் தாள முடி யாமல், கைகளை இறுக்கிக் கட்டிக் கொண்டு போகிறார்.

அவர் மேலும் சொல்கிறார்,

‘‘எனக்குக் கோட்டு வாங்கிக் கொடுக்கவில்லை பெரியார்; அங்கே இவ்வளவு அதிகமாகக் குளிர் இருக்கும் என்று எனக்குத் தெரியாமல், வழக்கம்போன்று சட்டையை அணிந்துகொண்டு சென்றேன். என்னுடைய காலிலும் விழுந்து வணங்கினார்கள்’’ என்கிறார்.

ஏன் விழுந்தார்கள் என்றால், பெரியாரைக் காட்டி, ‘‘அவர் எவ்வளவு பெரிய சாமியாராக இருந்தால், பின்னால் செல்கின்ற குட்டிச் சாமியார் இவ்வளவு பய பக்தியோடு போகிறார்’’ என்று சொல்லி, இவருடைய காலிலும் விழுந்தனராம்.

இப்படியெல்லாம் பாடுபட்டு, ஓர் ஆட்சி அமைத்து, அந்த ஆட்சியில் பல சாதனைகளைச் செய்து, எல்லாம் வந்த சூழ்நிலையில்தான் நண்பர்களே, மிகப்பெரிய அளவிற்கு அஸ்திவாரத்தைப் போட்டார்.

நம்முடைய பண்பாட்டை அழிக்க
முயற்சி செய்கிறார்கள்!

இன்றைக்கும் யாரும் அசைத்து விட முடியாது திராவிடத்தை!

நம்முடைய பண்பாட்டை அழிக்க முயற்சி செய்கி றார்கள். ‘ஆரிய மாயை’ என்று அண்ணா சொன்னது தனிப்பட்ட முறையில் அல்ல.

எழுத்தில்கூட ஜாதியைக் கொண்டு வந்துவிட்டானே என்று அதனைக் கண்டித்தார். இன்னின்ன ஜாதி, இன்னின்ன பாடல்களுக்கு என்று ஆக்கினார்கள்.   தமிழில் ஜாதியை உண்டாக்கி, வெண்பா யார் பாடுவது? எப்படிப் பாடுவது? என்று கூட ஜாதிப் பகுப்பை உண்டாக்கினார்கள்.

ஆகவே, ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூகநீதி இவை அத்தனைக்கும் இடைகோலி, “அனை வருக்கும் அனைத்தும்’’ என்ற தத்துவத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதற்குக் காரணம் இதுதான்.

அண்ணா அவர்களுக்கு உடல்நலம் குன்றி, அடையாறில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அப்போது அண்ணா அவர்கள் ஓர் இரவு 2 மணியளவில் நோயின் கொடுமையால் மறைந்துவிடுகிறார்.

‘‘அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!’’

அப்போது அய்யா அவர்கள் ‘விடுதலை’க்காக அறிக்கை எழுதுகிறார். அந்த இரங்கல் அறிக்கைக்கு அவர்கள் தலைப்பு கொடுக்கிறார், ‘‘அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!’’ என்று.

இதைப் படிக்கின்றவர்களுக்கு ஏதோ முரண்பாடு போலத் தோன்றும்.

‘‘அண்ணா என்பவர் ஒரு தனி நபர் அல்ல; மிகப்பெரிய அளவிற்கு ஒரு பெரிய திருப்பத்தை உண்டாக்கியவர்’’ அதற்கு ஓர் ஆட்சியை உரு வாக்கியவர்.

அண்ணாவினுடைய ஆட்சி என்பது தொடரும்.

தத்துவங்கள் மறைவதில்லை. தலைவர்கள் உருவத்தால், உடலால் மறைவார்கள்.

அந்தத் தத்துவத்தைச் சொல்கிறார், “அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!’’

இன்றும் வாழ்வார்! என்றும் வாழ்வார்!

அதுபோலவே, தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவங்கள்பற்றிச் சொல்லும்போது அண்ணா சொன்னார்,  ‘‘இதை யாராலும் அசைக்க முடியாது.  அவர் எடுத்துக்கொண்ட பணி, விட்ட பணி வேகமாக முடியும்’’ என்றார்.

‘‘வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு எப்படி இலக்கை நோக்கிச் சேருமோ அதுபோல’’ என்றார்.

பெரியாரின் போர் முறை தனித்த போர் முறை. மற்ற போர் முறைகளில் எல்லாம் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளோடுதான் போராடுவார்கள். ஆனால், பெரியார் என்ற அந்த மாபெரும் சக்தி இருக்கிறதே, அது மூலபலம் எங்கே தெரிந்து, அதை முறியடிப்பதுதான் பெரியாரின் வேலை.

ஆகவேதான், அனைவருக்கும் கல்வியை வற்புறுத்து கின்றார்.

சமூகநீதி நாள் – சமத்துவ நாள்!

இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள், பெரியாருடைய பிறந்த நாளை – சமூகநீதி நாளாக அறிவித்து, எல்லோரும் உறுதிமொழி எடுக்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை  – சமத்துவ நாளாக அறிவித்து உறுதிமொழி எடுக்கிறார்கள்.

இது வெறும் தனி நபர்களுக்குப் பெருமை சேர்ப்பதல்ல; இந்தக் கொள்கையினுடைய வெற்றியை உறுதிப்படுத்துவது என்பதுதான்.

உங்கள் வருங்கால சந்ததியினரின் வாழ்வைப் பாதுகாப்பதற்காகத்தான்!

எனவே, தாய்மார்களே, பெரியோர்களே, நண்பர்களே, இளைய தலைமுறையினரே எல்லோரும் உணருங்கள்.

இந்த இயக்கம், இந்தக் கொள்கைகள் இருக்க வேண்டும், பரவவேண்டும் என்பது எங்களுக்காக அல்ல; அல்லது இந்தக் கொள்கையைச் சொல்லக் கூடிய இயக்கத்திற்காக அல்ல.  உங்கள் வருங்கால சந்ததியினரின் வாழ்வைப் பாதுகாப்பதற்காகத்தான்.

இங்கே வேந்தர் அவர்கள் உரையாற்றும்போதும், செல்வம் அவர்கள் உரையாற்றும்போதும் குலக்கல்வித் திட்டத்தைப்பற்றிச் சொன்னார்கள்.

இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால், இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் வந்திருக்க முடியுமா? நாமெல்லாம் பட்டதாரிகளாக ஆகியிருக்க முடியுமா? அந்தக் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராடி ஒழித்தார்கள்.

எனவேதான், எதிர்த்துப் போராடியது மட்டுமல்ல, ஆக்கப்பூர்வமாக இதோ உங்களுக்குக் கல்லூரி இருக்கிறது; இதோ பல்கலைக் கழகம் இருக்கிறது. இதோ சொல்லிக் கொடுக்கின்ற பேராசிரியப் பெருமக்கள் இருக்கிறார்கள்.

உலகத்தவர்கள் பாராட்டக்கூடிய
வி.அய்.டி. பல்கலைக் கழகம்!

ஆற்றல்மிகுந்தவர்கள், உலகத்தவர்கள் பாராட்டக்கூடிய ஓர் அமைப்பாக வி.அய்.டி. பல்கலைக் கழகக் கல்வி நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

எனவே, தத்துவங்களும் வென்றிருக்கின்றன; அதனால் ஏற்பட்ட விளைச்சல்களும் செழுமையாக இருக்கின்றன.

வாழ்க அண்ணா! வாழ்க பெரியார்!

வளர்க திராவிடம்! நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *