பெரியார் பெருந்தொண்டர் சேலம் ஜவகர் – ஓர் உந்தும் சக்தி! – அவருடன் ஒரு நேர்காணல்-கவிஞர் கலி.பூங்குன்றன்

6 Min Read

(தலை சுமை வியாபாரம் தொடங்கி – இன்று தலைசிறந்த தொழில் அதிபராக வளர்ந்த ஒரு பெரியார் பெருந்தொண்டரின் வெற்றிக் காதை இது!)

 

சேலம் மானமிகு கி.ஜவகர் – இப்பொழுது அவருக்கு வயது 86 (20.12.1940) தொழிலதிபராக மிளிர்கிறார். அவர் நடந்து வந்த பாதையைக் கேட்டால் ஆச்சரியத்தின் விளிம்புக்கு நம்மைத் துரத்திச் செல்லும்.

இவ்வளவுக்கும் அவர் படித்ததோ வெறும் ஆறாம் வகுப்புதான்.

சின்னாளப்பட்டிதான் சொந்த ஊர். நெசவுத் தொழில்; அந்த ஊரில் ஒரு பெரியார் படிப்பகம். இவர் பொறுப்பில் அது விடப்பட்டது. படிப்பதும், படுப்பதும் எல்லாம் அங்குதான்.

பெரியார் நூல்களைப் படிக்கப் படிக்க, அவர் மீது பற்றுதலும், அவர் சொன்ன கொள்கை மீதும் பெரும் ஈர்ப்பு ஏற்பட்டது.

சின்னாளப்பட்டியில் திராவிடர் கழகக் கூட்டம் நடக்கும்போது எல்லாம் வீதிகளிலும், பக்கத்து ஊர்களிலும் தமுக்கடித்துப் பிரச்சாரம் செய்திருக்கிறார். அவரது அண்ணன்தான் எம்.வி.கிருஷ்ணசாமி (பிற்காலத்தில் செகந்திராபாத்தில் வியாபாரம்) ஊக்க சக்தியாக இருந்திருக்கிறார்.

பாவலர் பாலசுந்தரம் பல நாட்கள் சின்னாளப்பட்டியில் தங்கி சுற்று வட்டாரக் கிராமங்களில் பேசுவார்.

கட்டுரை, ஞாயிறு மலர்

தகர டின்னை அடித்துக் கூட்டம் நடைபெறுவது பற்றி விளம்பரம் செய்திருக்கிறார் இளைஞர் ஜவகர். அவருக்கு உற்ற தோழர் உழைப்பின் தேனீ சின்னாளப்பட்டி மணி.

பூ கட்டுவதுதான் அவரின் தொழில், அவரும் ஜவகரும்தான் கூட்டத்திற்கு மேடை போடுவது, வசூல் செய்வது போன்ற பணிகளைச் செய்வார்கள்.

வெறும் அரிக்கேன் லைட்டு, சிறுமேடை, அவ்வளவுதான் மணிக்கணக்கில் பேசுவார்கள் சொற்பொழிவாளர்கள். கூட்டச் செலவு துண்டு விழுமானால் அவ்வூரில் பைனான்ஸ் நடத்தி வந்த பெரியார் பெருந்தொண்டர் என்.பி.ஆர்.போளி  மீதிப் பணத்தைக் கொடுத்து சரி செய்வார்.

எங்களை எல்லாம் வளர்த்து கழகத்தில் ஆளாக்கியவர் அவர்தான் என்கிறார் ஜவகர். என்.பி.ஆர்.போளியின் மகன்தான் பிற்காலத்தில் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த செல்வராசு.

வெள்ளைச்சாமி என்ற தோழர், சைக்கிள் கடை வைத்திருந்தார். ‘குடிஅரசு இதழை வரவைப்பார். அதேபோல சுந்தர மகாலிங்கம் என்ற தோழர், உணவு விடுதி நடத்தி வந்தார்; கழகத்தில் தீவிரமானவர், டைலர் வெங்கட்ராமன் கடையில் அடிக்கடிக் கூடிப் பேசுவார்களாம்;  எல்லாம் கழக வளர்ச்சிப் பற்றிதான்.

எதையும் எதிர்பார்க்காமல் அந்தக் காலத்தில் இப்படிதான் கழகத்தை வளர்த்தனர்.

ஒருமுறை சின்னாளப்பட்டியில் தந்தை பெரியார் பேசினார். அவர் பேசும்போது ஒன்றைச் சொன்னார்.

கழகத் தோழர்கள் கழகத்துக்குச் சுமையாக இருக்கக் கூடாது; கழகத்திலிருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது; கழகத்துக்காக உழைக்கலாம்; செலவு செய்யலாம் என்று சொன்னார்.

இளைஞரான ஜவகருக்கு இந்தச் சொற்கள் பொறி தட்டுவதுபோல் இருந்தது. அந்தப் பேச்சு அவரது சிந்தனையில் பெரும் திருப்பமாக அமைந்தது.

கையில் வெறும் அய்ந்து ரூபாயோடு சேலத்துக்கு நடந்தே வந்தார் ஜவகர். (1966).

ஜவுளித் துணிகளை தலைச் சுமையாக எடுத்துச் சென்று கிராமங்களில் விற்பனை செய்தார்.

1968இல் ஒரு திருப்பம். மாதம் 10 ரூபாய் வாடகையில் ஒரு வீடு, சிறு ஜவுளிக் கடை வியபாரம், சேலம் பொருட்காட்சியில் ஒரு கடை எடுத்தார்;  அதில் கிடைத்த லாபம் ரூபாய் 2000.

அந்த லாபத்தைக் கொண்டு 2000 சதுர அடி கொண்ட ஒரு மனையை வாங்கினார். அந்த மனையில் இப்பொழுது ஒரு பெரிய பங்களாவாசியாகக் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்.

அவரது அக்காள் மகன் சங்கரலிங்கம் – கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர் (சி.பி.எம்.) – அவரும் ஜவகருக்கு பெரிய உதவி!

நண்பர்களுடன் சேர்ந்து தருமபுரியில் அருணா ஏஜென்சி என்ற ஒரு சிறு நிறுவனத்தைத் தொடங்கினார். தவணை முறையில் சைக்கிள் வழங்கும் வியாபாரம். அது வெற்றிகரமாக அமையாத நிலையில், சேலத்தில் இரும்பு பீரோ செய்யும் வேலையை ஆரம்பித்தார். நாகர்கோயிலில் இருந்து ஆட்களைக் கொண்டு வந்து பீரோ தயாரிக்கப்பட்டது.

ஒரு – தந்தை பெரியார் பிறந்த நாளில் தன் வீட்டுக்கு வெளியே தந்தை பெரியார் படத்தை வைத்து பக்கத்தில் இருந்தவர்களுக்கெல்லாம் மிட்டாய்க் கொடுத்தார்.

அவரது பக்கத்து வீட்டில் பெரியார்மனை தண்டாயுதம் என்பவரும் கழகத்தைச் சேர்ந்தவர் –  அறிமுகம் ஆனார்கள்.

சேலம் திராவிடர் கழகத்தில் அந்தக் காலக்கட்டத்தில் பிரபலமாகவிருந்த கே.ஆர்.ஜி.நாகப்பன், எஸ்.டி.அழகேசன் போன்றவர்களோடு தொடர்பு கிடைத்தது. கழக செயல்வீரர் கவிஞர் எஸ்.முனுசாமியின் நட்பும் கிடைத்தது.

1992இல் சேலம் நகர திராவிடர் கழகத்தின் தலைவரானார் ஜவகர்.

இவரது வாழ்விணையர் விசாலாட்சி அம்மையார், இவரின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக இருந்து வருவதைப் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்.

மூத்த மகன் பாஸ்கர் – படித்தது 10ஆம் வகுப்பு வரை;  ஜவகர் அவர்கள் துவக்கி நடத்தி வந்த ஃபர்னிச்சர் உற்பத்தியை இவர்தான் தொடர்ந்து நடத்தி, உச்சத்திற்குக் கொண்டு வந்தார்.

50க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டிருந்த தோழர்களைத்தான் வேலைக்கு அமர்த்தி நடத்தி வருகிறார்;  இவர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தவர்கள் இடையில் நிற்காமல் 30, 40 வருடங்களாகத் தொடர்ந்தது ஒரு தனிச்சிறப்பாகும்.

தம்மிடம் பணிபுரிபவர்களிடம் காட்டும் அன்பும் அணுகுமுறையும் என்பது – வெற்றிகளுக்கெல்லாம் அடிப்படை என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய இலக்கணம்!

இவரது இரண்டாவது மகன் ஜெ.காமராசு எம்.ஆர்க் பட்டம் பெற்று அமெரிக்காவில் கோலோச்சுகிறார். அவரின் ஒரு மகன் மருத்துவம் படித்து, மேற்படிப்பை ‘யேல்’ பல்கலைக்கழகத்தில் தொடர்கிறார். இன்னொரு மகனும் வெளிநாட்டில் அய்.டி.யில் பணிபுரிகிறார்.

தலை சுமை வியாபாரத்தில் தொடங்கியவர்; இன்று ஒரு தொழில் அதிபராக வளர்ந்தோங்கியுள்ளார்.

சேலம் மெட்டல், பர்னிச்சர் அசோசியேஷனில் தலைவராகும் அளவுக்கு உயர் எண்ணங்களின் மணம் வீசும் பண்பாளர் இவர்!

தனது மகன் பாஸ்கரன் தொழிற்சாலையைக் கண்ணும் கருத்துமாக இருந்து வளர்த்து வந்தாலும் இந்த 86 வயதிலும் ஜவகர் அவர்கள் சாய்வு நாற்காலியில் அமர்ந்து காலத்தைக் கடத்தவில்லை.

ஃபர்னிச்சருக்கான உதிரிப் பாகங்களை விற்கும் பணியையும் தொடர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதும், கவனிக்கத்தக்கதுமாகும்.

அவருடைய மற்றொரு தனிச்சிறப்பு நூல்களைப் படித்துக் கொண்டே இருப்பது – தந்தை பெரியார் பற்றிய அனைத்து நூல்களும் அவரின் கையிருப்பு.

திருச்சி நாகம்மையார் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம் 50ஆவது தவணையாகத் தொடர்ந்து அளித்து வருகிறார்.

வெறும் 6ஆம் வகுப்பு படித்து, தலை சுமக்கும் வியாபாரம் செய்து, இன்றைக்கு குறிப்பிடத் தகுந்த செல்வந்தராக உயர்ந்ததற்கான காரணத்தை அவர் வாயாலேயே கேட்போம்!

“தந்தை பெரியார் கொள்கையை நான் வரித்துக் கொண்ட நாள்முதல், தன்னம்பிக்கை, உழைப்பு, பகுத்தறிவு, நாணயத்தைக் கடைபிடித்தல், பிறருக்கு முடிந்த வரை உதவுதல், குடும்பத்தைக் கொள்கை நெறியில் ஆற்றுப்படுத்துதல், பிள்ளைகளுக்குக் கல்வி, தொழில் முறையில் வழிகாட்டுதல் இவற்றைச் செயல்படுத்தி வளர்ந்திருக்கிறேன்.

தந்தை பெரியார் கொள்கை என்பது ஒரு  வாழ்வியல் நெறி என்று உணர்ச்சி ததும்ப நெகிழ்ச்சியோடு அவர் குறிப்பிட்டது இன்னும் நம் கண்முன் நிற்கிறது – காதுகளில் ஒலிக்கிறது! உடற்கொடையையும் பதிவு செய்துவிட்டார்.

86 வயது காணும் பெரியார் பெருந்தொண்டர் கி.ஜவகர் (பெற்றோர் கிருஷ்ணசாமி – பார்வதி) அவர்கள் கழகத் தோழர்களுக்கு மட்டுமல்ல; வாழ்வில் முன்னேற வேண்டும் என்று துடிப்பவர்களுக்கு – நினைப்பவர்களுக்கு ஓர் உந்தும் சக்தி!

அவர் நூறாண்டைக் கடந்தும் வாழ்ந்திட வாழ்த்துரைப்போம் -வாழ்க பெரியார்!

சேலத்தில் பேட்டி கண்டவர்: கலி.பூங்குன்றன்

நாள்: 31.10.2025 மாலை.

உடனிருந்தோர்: கமலம்மாள், இராவணபூபதி, கலைமணி.

இயக்க வளர்ச்சி பற்றி…

கேள்வி: தந்தை பெரியார் காலத்திலிருந்து இயக்கத்தில் இருந்து வருகிறீர்கள்;  இயக்க வளர்ச்சி அந்தக் காலகட்டத்தில் இருந்ததற்கும், இப்பொழுது ஆசிரியர் காலத்தின் இயக்க வளர்ச்சிக்கும் உள்ள நிலைப்பாடு என்ன?

ஜவகர்: தந்தை பெரியார் இருந்தார் என்பதே ஒரு பெரும் பலம். வருடத்துக்கு இரண்டு கூட்டம் நடத்துவோம்;  இப்பொழுது பிரச்சாரக் கூட்டங்கள் நடந்தவண்ணமாகவே உள்ளன. அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளை மய்யப்படுத்தி, ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. ஏராள புதிய இளைஞர்கள் இயக்கத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

4 பக்கமாக இருந்த ‘விடுதலை’ இப்பொழுது எட்டு பக்கமாக, ஏராள செய்திகளைப் படிக்க முடிகிறது. நூல்கள் வெளிவந்து கொண்டே உள்ளன.

‘பெரியார் விஷன்’ மூலம் உலகம் முழுவதும் தந்தை பெரியார் கருத்துகள் போய்ச் சேர்ந்து கொண்டுள்ளன.

வெளிநாடுகளிலும் தந்தை பெரியார் கொள்கை பரப்பும் மாநாடுகள் நடந்து வருகின்றன.

அய்யாவுக்குப் பின்னால் அம்மா தலைமையிலும் இயக்கம் அடுத்த கட்ட வளர்ச்சியைப் பார்த்தோம். அம்மா நடத்திய ‘இராவண லீலா’ பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

இப்பொழுது ஆசிரியர் காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் காலத்திலேயே இவற்றை எல்லாம் நடப்பது கண்டு மிகவும் மகிச்சியாக இருக்கிறோம். தந்தை பெரியார் கருத்துகள் ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, மானுடத்திற்கே தேவையானது – அது வளர்ந்து கொண்டுதான் போகும்! – மண்டைச் சுரப்பை உலகு தொழும்!

பெரியார் உலகத்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடையும் வழங்கியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *