சென்னை, நவ.7 சென்னை மாவட்டத்தில் எஸ்அய்ஆர் பணி களை கண்காணிக்க 8 அய்ஏஎஸ் அதி காரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 40 லட்சத்து 4 ஆயிரத்து 694 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதிகளில் வாக் காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி (SIR) கடந்த நவ.4-ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக எஸ்அய்ஆர் படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக ஏற்கெனவே நவ.3-ஆம் தேதிவரை படிவங்களை அச்சிடும் பணிகள், அலுவலர்களுக்கு பயிற்சி யளிக்கும் பணிகள் நடைபெற்றன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. 2 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் என 1,859 வாக்குச்சாவடி நிலை மேற்பார்வையா ளர்கள் இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர். படிவங்களைப் பூர்த்தி செய்ய வாக்குச்சாவடி நிலை அலுவ லர்கள் உதவுவார்கள். வீடுகள் பூட்டியிருந்தா லும், அலுவலர்கள் 3 முறை வந்து, படிவங்களைக் கொடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்றுக் கொள்வார்கள்.
வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 2 கணக்கீட்டுப் படிவத்தில் ஒன்றை தாங்கள் வைத்துக் கொண்டு, மற்றொன்றை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவத்துக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலரால் ஒப்புதல் வழங்கப்படும். இந்த பணியானது டிச.4-ஆம் தேதி வரை நடைபெறும். இப்படிவங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இந்திய தேர்தல் ஆணைய திறன்மிகு கைப்பேசி (ஸ்மார்ட்போன்) செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்படும். சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகளுக்கும் கண்காணிப்பு அலுவலர்களாக கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் (அய்ஏஎஸ் அதிகாரிகள்) 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 16 தொகுதிகளும் இடம்பெற்றுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வாக்காளர் உதவி மய்யமும் இயங்கி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
