‘துக்ளக்’குக்குப் பதிலடி காமராசரைக் கருப்புக் காக்கை என்று சொல்லி கல்லால் அடிக்க வேண்டும் என்று சொன்னவர் யார்?

9 Min Read

இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)
மின்சாரம்

(5.11.2025 நாளிட்ட ‘துக்ளக்’கின்
பதிலுக்குப் பதிலடிகள்)

கேள்வி 1: ஹிந்து மதத்தின் மகத்தான, வலுவான சக்தி எதில் அடங்கியுள்ளது?

பதில்: அனைத்து சமயங்களையும் ஏற்கும் தன்மைதான் ஹிந்து மதத்தின் மகத்தான, வலுவான சக்தி. ஆனால், அதுவேதான் அதன் மகத்தான பலவீனமும்.

நமது பதிலடி: ஆமாம், 450 ஆண்டு கால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்து ராமன் கோயில் கட்டியது .- அடுத்து காசி, மதுராவிலும் உள்ள மசூதிகளையும் பதம் பார்க்கத் திட்டமிடுவது எல்லாம் ஹிந்து மதத்தின் புஜ பலாத்(கா)கிரம வலுவான சக்திதானே!

மின்சாரம்

– – – – –

கேள்வி 2: அரசியல் விமர்சனங்கள் தரம் தாழ்ந்து போனது யாரால்?

பதில்: தி.க.விலிருந்து வெளியேறி தி.மு.க.வை உருவாக்கியவர்களால்.

நமது பதிலடி: சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் (27.2.1966) ராஜாஜி என்ன பேசினார்?

“தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள கருப்புக் காக்கையை (காமராசரை)க் கல்லால் அடித்து வீழ்த்தினால், மற்ற காக்கைகள் தானே பறந்து ஓடிவிடும். தமிழ்நாட்டில் காங்கிரசுக்குத் தோல்வியைக் கொடுக்க வேண்டும்” என்று உடம்பெல்லாம் மூளை என்று பார்ப்பன வட்டாரத்தால் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் ராஜாஜி பேச்சில் நெளியும் அரசியல் விமர்சனம் வெகு வெகு ஜோர்தான்!

மின்சாரம்

அதே ஆச்சாரியார் அருப்புக்கோட்டை இடைத் தேர்தலில் என்ன பேசினார்? “காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல அடி கொடுக்க வேண்டும், அதுவும் செருப்படி போல விழ வேண்டும்” என்று பேசவில்லையா? அதுகுறித்து ‘விடுதலை’யில் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் “செங்சாங்கடையில் ஆச்சாரியார்” என்று பதிலடி கொடுத்ததுண்டே! (தலையங்கம், 14.4.1964)

இந்த (அ)யோக்கிய சிகாமணிகள்தான் அரசியல் விமர்சனங்கள் தரம் தாழ்ந்து போனது பற்றிக் கூச்சநாச்சமின்றிப் பேசுகின்றனர் – எழுதுகோல் பிடிக்கின்றனர்.

மின்சாரம்

– – – – –

கேள்வி 3: இத்தாலிய பிரதமர் மெலோனியை, மிக அழகானவர் என்று வர்ணித்துள்ளாரே ட்ரம்ப்?

பதில்: ஒரு பெண்மணியின் அழகை வர்ணித்தால், பாலியல் தொல்லை என்கிறது சட்டம். ஆனால், ட்ரம்ப் மீது மெலோனி குற்றம் சாட்டினால்தான் அது குற்றம்.

நமது பதிலடி: நேருவின் அழகில் மயங்கிப் பெண்கள் ஓட்டுப் போடுகிறார்கள் என்று சொன்னாரே ராஜாஜி – அது எந்த வகைக் குற்றம்?

– – – – –

கேள்வி 4: கோபத்தை வரவழைக்கும் அரசியல் கட்சி எது? நகைச்சுவையான அரசியல் கட்சி எது?

பதில்: கோபத்தை வரவழைக்கும் கட்சி வி.சி.க., நகைச்சுவையான கட்சி ம.நீ.ம..

மின்சாரம்

நமது பதிலடி: “சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி” என்பது சுயமரியாதை உள்ளவர்களுக்கு நியாயமாக வரவேண்டியது கோபம்தானே!

– – – – –

கேள்வி 5: ‘நீதி, நியாயம் இன்னும் இருக்கிறது’ என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: சட்டத்தை ஒட்டிய நீதி இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். ஆனால் சமுதாயத்தை ஒட்டிய நியாயம் இருக்கிறது. அதனால் தான் இன்று நாம் பிழைத்திருக்கிறோம்.

நமது பதிலடி: “மலம் அள்ளுவதைத் தெய்வப் பணியாகக் கருதவேண்டும் (கர்மயோக்)” என்று கூறும் நரேந்திர மோடியை நாமாவளி பாடுவதுதான் – சமுதாயத்தை ஒட்டிய நியாயமோ!

– – – – –

கேள்வி 6: கொஞ்சம் கூட அசட்டுத்தனம், சினிமாத்தனம் இல்லாமல் உங்களால் எப்படிப் பத்திரிகை நடத்த முடிகிறது?

மின்சாரம்

பதில்: சினிமாத்தனம் இருந்தும், அசட்டுத்தனம் இல்லாத சோ பத்திரிகை நடத்தினார். சினிமாத்தனமும் இல்லாது, அசட்டுத்தனமும் இல்லாத என்னால் ஏன் நடத்த முடியாது?

நமது பதிலடி: “அரசியலில் நான் தரகு வேலை செய்கிறேன்!” (‘ஆனந்தவிகடன்’ 1.3.2012) என்று சொன்ன சோவின் சீடர் என்ற ஒரு தகுதி போதாதா குருமூர்த்திக்கு?

இன்னொன்றையும் சோ சொன்னதுண்டு. “என் ஆலோசனையைக் கேட்டு யாரும் உருப்பட்டதில்லை. என்னிடம் ஆலோசனை கேட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” (The Name is Rajinigandh நூல் வெளியீட்டு விழாவில் சோ.)

குருமூர்த்தியிடம் ஆலோசனை கேட்டு உருப்படாமல் போனவர்களும் உண்டு. சோ-குருமூர்த்தி ஜோடிப் பொருத்தம் வெகு ஜோர்தானே!

– – – – –

கேள்வி 7: ஆர்.எஸ்.எஸ். என்றாலே இன்றும் சிலருக்கு கசப்பதேன்?

பதில்: ஆர்.எஸ்.எஸ். நாட்டின் வியாதிக்கான மருந்து. நம் நாட்டின் வியாதியான அந்தச் சிலருக்கு ஆர்.எஸ்.எஸ். கசக்கத்தானே செய்யும்?

நமது பதிலடி: மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பாயிற்றே! (பாப்பனர்களுக்கு இனிப்பதெல்லாம் மற்றவர்களுக்குக் கசப்பதில் என்ன ஆச்சரியம்!)

– – – – –

கேள்வி 8: வாக்களிக்கப் போகும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் – துக்ளக் விடுக்கும் செய்தி என்னவாக இருக்கும்?

பதில்: முதலில் அவர்கள் வாக்களிக்கப் போகவேண்டும். வாக்களிக்கப் போகும் பெண்கள் தாங்கள் பெறும் உரிமைத்தொகையை ஸ்டாலின் தன் சொத்திலிருந்து தரவில்லை, மக்களின் வரிப் பணத்தில்தான் தருகிறார் என்று நினைக்க வேண்டும். இருவரும், ஒரு குடும்பத்துக்கே அர்ப்பணம் ஆகிவிட்ட தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

நமது பதிலடி: ஆமாம் நம்புங்கள் – பிரதமர் மோடி மட்டும்தான் தன் சொந்தப் பணத்திலிருந்து ராமன் கோயில் முதல், பட்டேல் சிலை வரை நிர்மானிக்கிறார்.

– – – – – 

கேள்வி 9: ‘சாமானியர்களுக்கு பதவிகளை வழங்கும் கட்சி தி.மு.க.தான்’ என்கிறாரே அமைச்சர் பெரியசாமி ?

பதில்: பெரியசாமி கூறுவது உண்மை என்றால், உதயநிதியும் சாமானியர்தான்.

நமது பதிலடி: முகத்தில் பிறக்காதவர்கள் எல்லாம் சாமானியர்கள் தானே! நான் மிக மிக என்று எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் – பிற்படுத்தப்பட்டவன் என்று மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னைப் பற்றி ஒரு வரியில் சொன்ன கலைஞரின் பார்வையில் உதயநிதி சாமானியர்தான்!

– – – – –

கேள்வி 10: கடவுள் சொன்னதால் காலணியை வீசினேன் என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது, காலணியை வீசிய வழக்கறிஞர் ராஜேஷ் கிஷோரின் செயல் ஏற்புடையதுதானா?

பதில்: கடவுள் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார் என்பதால், அவர் கூறுவது பொய். எனவே அதை ஏற்கமுடியாது.

நமது பதிலடி: ‘அம்பாள் என்றைக்கடா பேசினாள்?’ என்று ‘பராசக்தி’ திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம் தான் நினைவிற்கு வருகிறது.

– – – – –

கேள்வி 11: ‘எடப்பாடி பழனிசாமிக்கு யாரைப் பார்த்தாலும் அமித்ஷா முகம்தான் தெரிகிறது’ என்கிறாரே உதயநிதி? அப்படியானால் முதல்வர் ஸ்டாலினுக்கு யார் முகம் தெரியும்? நீங்கள் சொல்லுங்கள்!

பதில்: யாரைப் பார்த்தாலும் வாக்குச்சாவடி கியூவில் நிற்கும், மகளிர் உரிமைத் தொகை பெற்ற பயனாளியின் முகம் போலத் தெரியும்.

நமது பதிலடி: குருமூர்த்தி தம் வாழ்நாளில் ஒரே ஒரு உண்மையை இப்பொழுதுதான் பேசியிருக்கிறார்.

– – – – –

கேள்வி 12: இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்துக்கு இடம் வழங்கிய மன்னர் சேதுபதி பெயரையோ, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பெயரையோ வைக்காமல், கருணாநிதியின் பெயரைச் சூட்டியுள்ளார்களே, இது சரியா?

பதில்: கருணாநிதிதானே ஸ்டாலினின் அப்பா. உதயநிதியின் தாத்தா.

நமது பதிலடி: இரவோடு இரவாக மடத்தை விட்டுக் கம்பியை நீட்டியவர் – பெயிலுக்கும் ஜெயிலுக்கும் அலைந்த ஆசாமியெல்லாம் – ஜெகத் குரு என்று கூறுவதைவிட, இது எத்தனையோ மடங்கு மேல்!

– – – – –

கேள்வி 13: துக்ளக் படித்து அரசியலைப் புரிந்து கொள்வதற்கும், முரசொலி படித்து அரசியலைப் புரிந்து கொள்வதற்கும் என்ன வித்தியாசம்?

பதில்: துக்ளக் படித்து அரசியல் புரிந்து கொண்டால், எது நாட்டுக்கு நல்லது என்று தெரியும். முரசொலி படித்து அரசியல் புரிந்து கொண்டால், எது தனக்கு நல்லது என்று தெரியும்.

நமது பதிலடி: ‘பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள்!’ என்று ராஜகோபாலன் (ஆச்சாரியார்) சொல்லி, கடைசியில் தி.மு.க.வால் மூக்குடைப்பட்டது தான் துக்ளக்கைப் படித்ததால் ஏற்பட்ட புத்திக் கொள்முதல்!

– – – – – 

கேள்வி 14: ‘ஜாதிப் பெயர்களை நீக்குவது, கலாசார அடையாளத்தை அழிக்கும் செயல்’ என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ள கருத்தில், உங்களுக்கு உடன்பாடு உண்டா?

பதில்: அவர் கூறுவது உண்மையே. ஜாதி என்பது கலாசாரம்தான். அது அரசியலில் புகும்போது கலாசாரமும் கெடுகிறது, அரசியலும் கெடுகிறது.

நமது பதிலடி: ‘பிராமணர் மாநாடு’ கூட்டி யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று தீர்மானம் போடும்போது இந்தப் புத்தி எங்கே மேயப் போனது?

– – – – –

கேள்வி 15: பல நாட்டுத் தலைவர்களும் நம் பாரத பிரதமரின் பக்கம் நிற்க, இங்கு உள்ள தலைவர்களுக்கு அவரது அருமை ஏன் தெரியவில்லை?

பதில்: கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று கூறுவேன் என்று நினைத்துத்தானே, இந்தக் கேள்வியைக் கேட்டீர்கள் ? மாட்டேன்.

நமது பதிலடி: ‘உள்ளே அனுமதியில்லை’ என்று போர்டு போட்டது போல பல நாடுகள் மோடிக்கு விசா மறுத்ததெல்லாம் மறந்து போயிற்றா?

குஜராத் கலவரத்தின்போது ‘எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடு போவேன்?’ என்று பிரதமர் வாஜ்பேயி புலம்பியதும் தான் மறந்து போயிற்றா? இப்பொழுது டிரம்பை நேரில் சந்திப்பதற்கே நடுங்கும் நிகழ்காலமும் மறந்தே போச்சோ!

அடிக்கடி அட்டைப்படத்தில் கழுதைக் காட்டூன் போடும் புத்தி ‘துக்ளக்’குக்கு மட்டுமேயான டிரேட் மார்க்.

கழுதைக்குப் பிறந்தவன் காங்கேய முனிவன் என்று புராண மூட்டையைச் சுமப்பவர்கள் ஆயிற்றே – புத்தி போகுமா?

– – – – –

கேள்வி 16: நீங்களே செய்ய நினைத்து, செய்ய முடியாத காரியம் ஏதாவது உண்டா?

பதில்: இதற்குப் பிறகு அரசியல், சமூகப் பணிகளை மூட்டை கட்டிவைத்து, குடும்பத்தையும் விட்டு விலகி, பண்டைய ஸம்ஸ்க்ருத, தமிழ் நூல்களைப் படிப்பது, தியானம் செய்வது என்று பல முறை நினைத்ததை, என்னால் செய்ய முடியவில்லை.

நமது பதிலடி:  தடுத்தது யார்? படுக்கையறையில்கூட மஹா பெரியவாள் படத்தை மாட்டி வைத்து, தூங்கி விழிக்கும் போது, அந்தப் படத்தைப் பார்ப்பதாகக் கூறும் குருமூர்த்தியை அந்த ‘மஹான்’ தடுத்திருப்பாரோ?

– – – – –

கேள்வி 17: ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டுமே தி.மு.க. அரசு கடும் நிபந்தனைகளை விதிப்பது சரியா? தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க காலக்கெடு விதிப்பது நீதியா?

பதில்: தீபாவளி பட்டாசு மீது விதிக்கும் நிபந்தனை ஹிந்து மதத்தின் மீது அல்ல. சிவகாசி பட்டாசு தொழில் மீது.

நமது பதிலடி: பட்டாசு வெடிப்பால் டில்லி சுற்றுச் சூழல் மாசுபட்டு கெதி கலங்கி நிற்கிறதே – அதைக் கூட தீபாவளிக் கதாநாயகன் கிருஷ்ண பகவானால் தடுக்க முடியவில்லையே! சும்மா சொல்லக் கூடாது – “லட்சுமி வெடி” சுக்கல் நூறாகி அலறுகிறது.

– – – – –

கேள்வி 18: நடிகனுக்குப் பால் ஊற்றுவது, அபிஷேகம் செய்வது, கட்-அவுட் வைப்பது, காசை செலவழிப்பது, நடி கனை பார்க்கக் கூடுவது, ஆட்சிக்கு கொண்டு வருவது என்று தமிழன் செய்வது போல், உலகில் யாராவது செய்கின்றார்களா?

பதில்: நீங்கள் கூறுவது அனைத்தையும் செய்யும் தமிழ்நாட்டு மக்களால், எந்த நடிகனையும் ஆட்சிக்குக் கொண்டுவர முடியவில்லை. எம்.ஜி.ஆர். நடிகர் மட்டுமல்ல. 1953-முதல் 20 ஆண்டு அரசியல் அனுபவம் பெற்ற பிறகுதான், அவர் கட்சி தொடங்கினார்.

நமது பதிலடி: பச்சிளம் குழந்தைகள் பாலுக்கு அழுகையில் குழவிக்கல் சாமிக்கு லிட்டர் லிட்டராகப் பாலாபிஷேகம்! எந்த மதத்தில் இதுபோன்ற கல்மனக்காரர்கள் இருக்கிறார்கள்?

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *