வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடங்கிவிட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் உச்சநீதிமன்றத்திற்கு போகப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஒரு குண்டை தூக்கி போட்டுவிட்டார். அவர், தேர்தல் ஆணையத்தின் மீது பெரிய புகாரை கூறியுள்ளார்.
ஏற்ெகனவே 2024-ல் மக்களவை தேர்தல் முடிந்தவுடன் கருநாடக மாநிலத்தில் மகாதேவபுரா தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் முறைகேடாக சேர்க்கப்பட்டு இருந்தன என்று கடந்த ஆகஸ்டு மாதம் கூறினார்.
பீகார் தேர்தல் பிரச்சாரங்களில்கூட தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார். அரியானாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது 25 லட்சம் போலி வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதால்தான், காங்கிரஸ் பெறவேண்டிய வெற்றியை பா.ஜனதா பெற்றது என்றும், 3.50 லட்சம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என்றும் கூறினார். அதை நிரூபிக்கும் வகையில் அந்த மாநிலத்தில் உள்ள ராய் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பிரேசில் நாட்டு மாடல் அழகி ஒருவரின் ஒளிப்படம் 10 வாக்குச்சாவடிகளில் உள்ள 22 வாக்காளர் அடையாள அட்டைகளில் இருந்ததை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அந்த வாக்காளர் அடையாள அட்டைகள் ஸ்வீட்டி, சீமா, சரஸ்வதி, ராஷ்மி, விம்லா என்பது போன்ற பல பெயர்களில் இருந்தது. வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த அந்த பிரேசில் மாடல் அழகியின் பெயர் லாரிசா நேரி என்று கூறிய அவர், திரையிலும் அதை அங்கிருந்த செய்தியாளர்களுக்கு காட்டினார்.
இதுமட்டுமல்லாமல், அந்த மாநில வாக்காளர் பட்டியலில் இதேபோன்று ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 177 வாக்காளர் அடையாள அட்டைகளில் இருந்த படங்கள் போலியானது. மொத்த ஓட்டுகளில் 8-இல் ஓர் ஓட்டு போலியானது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 2 முதல் 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆனால் 8 முதல் 12 சதவீதம் போலியான வாக்காளர்கள். இப்படி போலி வாக்காளர்களை வைத்துதான் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். பிரேசில் அழகி லாரிசா நேரிவும், தனது படம் வாக்காளர் அடையாள அட்டையில் இடம் பெற்றதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் பதில் சொல்லவேண்டும். பிரேசில் மாடல் அழகியின் படம் நமது வாக்காளர் அடையாள அட்டையில் 22 இடங்களில் இருந்தது சற்றும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும். இதை விட்டு, விட்டு வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருந்தால் அதை அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படும் வாக்குச்சாவடி முகவர்கள் தைரியமாக சுட்டிக் காட்டியிருக்கமுடியும். பிறகு ஏன் காங்கிரஸ் கட்சி முகவர்கள் அதை செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் மழுப்பலாக பதில் அளித்துள்ளது.
ஜனநாயகத்தில் தேர்தல்தான் பலமான ஆயுதம். அதில் எந்த குறையும் இல்லாமல் நூற்றுக்கு நூறு சதவீதம் நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். எனவே எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும், ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படுத்தி தேர்தல் ஆணையம் பதில் சொன்னால் தான் மக்களின் நம்பிக்கையை பெறமுடியும்.
நன்றி: ‘தினத்தந்தி’ தலையங்கம் – 7.11.2025
