தெலங்கானா மாநிலம் செவெல்லா தொகுதி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கொண்ட விஸ்வேஷ்வர் ரெட்டி, சாலை விபத்துகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசியபோது, தரமான சாலைகளால் விபத்து அதிகமாகிறது என்று கூறி சர்ச்சையை உருவாக்கி உள்ளார்.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு, பேருந்தில் பயணம் செய்யும்பயணிகள் குடும்பத்தோடு உயிரிழக்கின்றனர்.
ஆந்திராவில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் மூன்று சகோதரிகள் உயிரிழந்தனர். இது மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வேஸ்வரா ரெட்டி விளக்கம் கூறும் போது, ‘‘முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. அதனால் வாகனங்கள் மெதுவாகச் சென்றன. இதன் விளைவாக, சாலை விபத்துகள் மிகவும் குறைவாக இருந்தன.
மோடி ஆட்சியில் சாலைகள் மிகவும் நேர்த்தியாக உள்ளன. இதனால் வாகனங்கள் வேகமாகச் செல்கின்றன. இதன் காரணமாகவே சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. நல்ல சாலைகளில் மக்கள் கவனமாக செல்லவேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
இவர் கூற்றுப்படி பார்த்தால் விபத்தைத் தடுக்க, சாலைகளை மீண்டும் மேடு பள்ளமாக்க வேண்டுமா?
சாலைகளை மேம்படுத்துவது விபத்துகளைத் தடுக்க அல்லாமல், விபத்துகளை அதிகரிக்கவே பயன்படுகிறதா என்ற கேள்வியை அவரது கூற்று எழுப்பியுள்ளது. ‘விபத்துகளைத் தடுப்பதற்கான புதிய ‘தீர்வாக’ மீண்டும் புதிய சாலையில் பள்ளம் மேடுகளை ஏற்படுத்தி பழைய காலம் போன்று மோசமான சாலையாக மாற்றிவிடலாமா?’ என்று சமூகவலைதளங்களில் நகைச்சுவையுடன் கேள்விகளை எழுப்புகின்றனர்.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பயணிகள் சென்ற பேருந்து விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டு அப்போது அமைச்சராக இருந்த சமூகநலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ‘சர்க்கரை நோய்க்குக் காரணம் நாட்டில் அதிக சர்க்கரை உற்பத்தியும், அதை பயன்படுத்துவோர் அதிகம் இருப்பதும்தான்’ என்று கூறியிருந்தார்.
‘அப்படி என்றால் இனி கரும்பு விவசாயிகளுக்கு மானியம் தருவதை நிறுத்திவிடலாமா? அல்லது கரும்புகளை குறைந்த விலைக்கு வாங்க சட்டம் இயற்றலாமா?’ என்று சமூகவலைதளத்தில் கேள்விகளை அப்போது எழுப்பி இருந்தனர்.
பகுத்தறிவை மனிதன் பயன்படுத்தத் தவறினால் இது போன்ற முட்டாள்தனமான உளறல்களைத் தானே எதிர்பார்க்க முடியும்?
ஒன்றிய பிஜேபி ஆட்சியில் இரயில் விபத்துகள், விமான விபத்துகள் சர்வ சாதாரணம்!
‘தண்டவாளங்களைச் செம்மைப்படுத்தி வைத்திருப்பதால்தான் ரயில் விபத்துகள் ஏராளம் நடக்கின்றன’ என்று சொல்வார்களோ!
‘மருத்துவமனைகள் சிறப்பாக இயங்குவதால்தான் மருத்துவப் பயனாளர்கள் அதிகரித்து வருகின்றனர்’ என்று கூட சொல்வார்களோ?
‘பக்தி அதிகமாகப் பரவியதால்தான் கும்பமேளாவில் கூட்டத்தில் நசுங்கி, பக்தர்கள் மரணம் அடைவதும் அதிகரித்து வருகிறது’ என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?
விபத்துகள் அதிகமாக நடைபெறுவதால் மக்கள் மடிகிறார்கள். இதன் மூலம் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படுகிறது என்றுகூடச் சொல்வார்கள் போலும்!
மாட்டு மூத்திரம் பல நோய்களைக் குணப்படுத்தும் என்று அய்.அய்.டி. இயக்குநர் கூறவில்லையா? மதவாதம் பேசும் ஆட்சி இந்தியாவில் நடப்பதால் இன்னும் என்னென்ன விபரீதங்கள் எல்லாம் கோலோச்சுமோ….! என்பதை அளவிட முடியாது!
‘நம் நாட்டுப் படிப்பு வயிற்றுப் பிழைப்புக்கு லைசென்ஸ்!’ என்று சும்மாவா சொன்னார் தந்தை பெரியார்.
