தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின்
89ஆவது பிறந்தநாள் விழா சென்னை பல்கலைக்கழகம் தமிழ் துறை சார்பாக சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இட ஒதுக்கீட்டால் தோற்றேன் – எம்ஜிஆர் என்பதில் பங்களிப்பு குறித்து திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனின் சிறப்பான கருத்துகளை Periyar Vision OTT இல் காணலாம்.
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த பொழுது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் ரூ.9 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதை எதிர்த்து கடுமையாக தமிழ்நாடு முழுவதும் ஆறு மாத காலமாக திராவிடர் கழகம் ஆசிரியர் தலைமையில் பல போராட்டங்களை நடத்திய பின்னர் 1980 ஜனவரி மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் கட்சி படுதோல்வி அடைந்தது.
தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய அவர் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றவர்களுள் ஆசிரியரும் ஒருவர். ஒன்று இரண்டு பேர் தங்களுடைய கருத்துகளை சொன்ன பிறகு வீரமணி ஒருவர் சொன்னால் போதும் என்று எம்ஜிஆர் கேட்டுக் கொண்ட பின்னர் ஆசிரியர் 40 நிமிடங்கள் புள்ளி விவரங்களுடன் விளக்கமாக எடுத்துரைத்தார்.
ஆண்டு வருமானம் 9 ஆயிரம் என்று நிர்ணயம் செய்தது சமூகநீதிக்கு எதிரானது, காஞ்சியில் வேலை பார்க்கும் கடைநிலை அரசு ஊழியன் பெறுகின்ற ஆண்டு வருமானம் ரூ.8,990/- அவன் சென்னைக்கு மாற்றலாகிவிட்டால் வீட்டுப்படி மருத்துவ அலவன்ஸ் போன்றவை இணைந்து 9 ஆயிரத்தை கடந்துவிட்டால் அவன் முற்படுத்தவனாகி விடுவானா? என்ற ஆசிரியரின் கேள்வியில் எம்ஜிஆர் தான் தோற்ற காரணத்தை புரிந்து கொண்டு விட்டார்.
அதன் பின்னர் அவர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கவிஞர் கலி பூங்குன்றன் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு ஆணை தவறு என்று குறிப்பிட்டு அதற்கான விளக்கமும் அளித்தார். பிற்படுத்தப்பட்டவர்களில் 150 பிரிவினரும் தாழ்த்தப்பட்ட மக்களில் 100 பிரிவினரும் ஜாதி அடிப்படையில் தான் பிரிக்கப்பட்டு இருக்கிறார்களே தவிர பொருளாதார ரீதியில் அல்ல. அரசமைப்பு சட்டமும் கல்வி சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்கள் (Educationally & Socially) என்றுதான் வரையறை செய்துள்ளது என்று எடுத்துரைத்தார். எம்ஜிஆர் அதுவரை 31 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை மாற்றி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீதமாக உயர்த்தி ஆணை வெளியிட்டார்.
அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவும் ஆசிரியரின் வழிமுறைகள் அரசமைப்பு சட்டம் 31(C) இன் படி 50 சதவீதத்தை 69 சதவீதமாக உயர்த்தினார். இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்று தீர்ப்பை எதிர்கொள்வதை ஆசிரியர் தன்னுடைய சட்ட ஞானத்தை பயன்படுத்தி ஜெயலலிதா அம்மையாரிடம் எடுத்துக் கூறி இட ஒதுக்கீட்டு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அதை ஒன்பதாவது அட்டவணையில் இடம் பெற வழிவகை செய்தார்.
அதன் பின்னர் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுக்காக அளிக்கப்பட்ட கலேல்கர் அறிக்கை என்னவாயிற்று என்று தெரியவில்லை. அதற்குப் பின்னர் பி.பி.மண்டல் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர்ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை விபி சிங் பிரதமராக வந்த பிறகு நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 27 சதவிதமாக அறிவிப்பு செய்தார்.
இதற்காக ஆசிரியர் அவர்கள் நாடு முழுவதும் 42 மாநாடுகள், 16 போராட்டங்கள் நடத்தியுள்ளார். சமூக நீதிக்காக லோகியா, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியவர்களின் நீண்ட கனவு நனவாகியது என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் வி.பி.சிங் அறிவித்தார்.
வீரமணி பேசுகிறார் என்றால் ஆதாரம் பேசியது என்று பொருள். அவர் பொது வெளியில் பேசியது ஏராளமாக புத்தகங்களாக வெளிவந்துள்ளது. அவற்றைப் பற்றி இன்றுவரை ஒரு வரி கூட எதிர்ப்பு இல்லை. பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ஆசிரியர் அவர்களின் திருமணத்திற்கு கலந்து கொண்டு வாழ்த்து பா கவிதை பரிசளித்தார் என்று இன்னும் பல சுவாரசியமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது பற்றி இன்றே பெரியார் விஷன் காணொலிக் காட்சியில் பாருங்கள்.
– M செந்தில்நாதன். ஆழ்வார்திருநகர்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com

