இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிப்பு

3 Min Read

கனடாவில் குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் கொண்டு வந்தது. இதில் பன்னாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் நுழைவு ஆணை (விசா) எண்ணிக்கையை அதிரடியாகக் குறைத்தது.

இந்நிலையில், தற்காலிகமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், மாணவர் நுழைவு ஆணைகள் தொடர்பான மோசடிகளைக் குறைக்கவும் தொடர்ந்து 2ஆவது ஆண்டாக பன்னாட்டு மாணவர் களுக்கான அனுமதியை கனடா அரசு குறைத்துள்ளது.

கனடாவின் உயர்கல்வி நிலையங்களில் படிக்க அனுமதி கோரிய இந்திய மாணவர்களின் விண்ணப் பங்களில் சுமார் 74 சதவீதம் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

அமெரிக்காவில் ஆங்கிலத் தேர்வில் தோல்வி:
ஏழு ஆயிரம் லாரி ஓட்டுநர்கள் பணிநீக்கம்

அமெரிக்காவில் இந்தியாவின் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் லாரி ஓட்டுநர்களாக பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த லாரி ஓட்டுநர் விபத்து ஒன்றை ஏற்படுத்தினார். இதையடுத்து வெளிநாடுகளை சேர்ந்த லாரி ஓட்டுநர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்த ஆண்டு கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வியடைந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க போக்குவரத்துச் செயலாளர் சீன் டபி தெரிவித்தார்.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கா னோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் என்று கூறப்படுகிறது. பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்தவர்கள். இந்த நடவடிக்கை அமெரிக்காவில் இந்திய வம்சாவளி லாரி ஓட்டுநர்களை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்க லாரித் தொழிலில் லட்சக்கணக்கான சீக்கியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர் ஓட்டுநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்சில்
புயல் தாக்கி 40 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டை கல்மேகி சூறாவளி தாக்கியது. இதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிட்டத்தட்ட 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

பலந்த மழைப் பொழிவு காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது மேலும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கல்மேகி சூறாவளியானது வியட்நாமின் மத்திய பகுதிகளில் நாளை இரவு கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை வியட்நாம் அரசு முன்னெடுக்க தொடங்கியுள்ளது.

கல்மேகி புயல் காரணமாக 180க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த மோசமான காலக்கட்டத்தில் வெள்ள மீட்பு பணிக்காக சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவுக்கு பதிலடியாக ரஷ்யாவும் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தும்
புடின் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு பதிலடியாக ரஷ்யாவும் அணு ஆயுத சோதனைகளை நடத்தும் என புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அணு ஆயுதச் சோதனை

எந்த நாட்டிடமும் இல்லாத வகையில் அணுசக்தியில் இயங்கும் புரேவெஸ்ட்னிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்ததாக புதின் கடந்த மாதம் 26-ஆம் தேதி அறிவித்தார். அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய அந்த ஏவுகணை, எத்தனை ஆயிரம் கி.மீ. வரையும் சென்று இலக்குகளைத் தாக்கும் வரம்பற்ற திறனைக் கொண்டது. அதனைத் தொடர்ந்து, வரம்பற்ற தொலைவுக்குப் பயணிக்கும், அணுசக்தியில் இயங்கக்கூடிய பொசைடன் நீர்மூழ்கி ட்ரோனை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்ததாக புதின் அக். 29-ஆம் தேதி அறிவித்தார்.

இந்த சோதனைகள் மூலம் அணுஆயுதப் போட்டியில் அமெரிக்காவை ரஷ்யா வெகுவாக முந்திவிட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் ரஷ்ய, அமெரிக்க சோதனைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அணு ஆயுதச் சோதனைகளை நடத்த உத்தரவிட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார். அணு ஆயுதச் சோதனைகளை மீண்டும் தொடங்கும் திட்டத்தை அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு புடின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.அதன் தொடர்ச்சியாக, தாங்களும் அணு ஆயுதச் சோதனைகளை நடத்துவதற்கு ஆயத்தமாகும் வகையில், அதற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு புதின் தற்போது உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய புதின்; நிறுத்திவைக்கப்பட்ட அணு ஆயுத சோதனைகளை மறுபடியும் நடத்தும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை. ஆனால், அமெரிக்கா அத்தகைய சோதனையில் ஈடுபட்டால் ரஷ்யாவும் அந்த நடவடிக்கையில் இறங்கும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அண்மைக்கால உத்தரவையடுத்து, அந்த நாடு மீண்டும் அணு ஆயுத வெடிப்பு சோதனைகளை நடத்தவிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், அணு ஆயுத சோதனைகளை மீண்டும் நடத்துவதற்கு ஆயத்தமாகும் வகையில் அதற்கான செயல்திட்டங்களை உருவாக்கி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *