இஸ்லாமாபாத், நவ,6- பகல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவ தாக இந்தியா அறிவித்திருந்தது. இருப்பினும், இப்போது வரை சிந்து நதி நீரை இந்தியா முழுமையாக நிறுத்தவில்லை.
இதற்கிடையே வரும் காலங் களில் ஒருவேளை சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால்.. அது பாகிஸ்தானுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் எனப் பிரபல பன்னாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.
பகல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. அதேபோல சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்தும் விலகுவதாக அறிவித்தது. இது பாகிஸ்தானுக்கு விழுந்த மிகப் பெரிய அடியாகவே பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான்
இதற்கிடையே சிந்து நதிப் படுகையின் நீரையே பாகிஸ்தான் பெருமளவு நம்பியிருப்பதால்.. இந்தியா சிந்து நதிநீரை நிறுத்த ஆரம்பித்தால் பாகிஸ்தானில் மிகக் கடும் நீர் பற்றாக்குறை ஏற்படும் என்று 2025ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் அறிக்கை எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருப்பதால்.. சிந்து நதி மற்றும் அதன் கிளை நதிகள் பாகிஸ்தானுக்குள் செல்வதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. பாகிஸ்தானின் விவசாயம் 80 விழுக்காடு சிந்து நதி அமைப்பைச் சார்ந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை அந்நாட்டுக்கு ஒரு பெரிய இடியாக இருக்கிறது..
பேரழிவு உறுதி
இது தொடர்பாக அந்த அறிக்கையில் மேலும், “முக்கியமான தருணங்களில் நீரோட்டத்தில் ஏற்படும் சிறிய தடங்கல்கள் கூட பாகிஸ்தான் விவசாயத்தைப் பாதிக்கலாம்.. ஏனெனில் நிலைமையைச் சமாளிக்க பாகிஸ்தானிடம் போதுமான அணைகள் இல்லை. தற்போது பாகிஸ்தானில் உள்ள அணைகளால் சுமார் 30 நாட்களுக்குத் தேவையான நீரை மட்டுமே சேமித்து வைக்க முடியும். நீண்ட காலம் நீர் வராமல் போனால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும்.
சிந்து நதி நீர் வருவதில் ஏற்படும் சிக்கல்கள் பாகிஸ்தானின் உணவுப் பாதுகாப்பை நேரடியாக அச்சுறுத்தும். தேசியளவில் இது பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய பிரச்சினை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. உண்மையில் பாகிஸ்தான் விவசாயம் சுமார் 80 சதவீதம் சிந்து நதி நீரையே சார்ந்திருக்கிறது.
ஆபத்து
இதனால் பாகிஸ்தானுக்கு ஆபத்து தீவிரமானது. இந்தியா சிந்து நதி நீரை முற்றிலுமாக துண்டித்தால் அல்லது கணிசமாகக் குறைத்தால் கடுமையான நீர்ப் பற்றாக்குறை ஏற்படும். குறிப்பாகக் குளிர்காலம் மற்றும் வறண்ட காலங்களில் பாகிஸ்தானின் பெரும்பகுதி வறட்சியை எதிர்கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
