சென்னை, நவ. 6- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் எஸ்.கே.பிரபாகர், குரூப்4 தேர்வில் காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், 2026ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அட்டவணையில் குரூப்1, குரூப்2, குரூப்4 உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளின் அறிவிப்புகள் இடம்பெறும்.
குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்கள்
குரூப்4: கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட குரூப்4 தேர்வின் காலிப்பணியிடங்கள் ஆரம்பத்தில் 3,935 ஆக இருந்த நிலையில், தற்போது 4,662 ஆக உயர்ந்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான பணிகள் முடிவடையும் வரை புதிய காலிப்பணியிடங்கள் சேர்க்கப்படும் என்பதால், இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று தலைவர் எஸ்.கே.பிரபாகர் உறுதி அளித்துள்ளார்.
குரூப்2/2ஏ: 595 காலிப்பணியிடங்களுக்காக நடந்த ஒருங்கிணைந்த குரூப்2 மற்றும் 2ஏ தேர்விலும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகப் பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்
மாநில அரசின் 22 பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களான (இளநிலை உதவியாளர், உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், உதவிப் பதிவாளர் போன்ற பதவிகள்) இனி டிஎன்பிஎஸ்சி வாயிலாகவே நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி, ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன், அந்தப் பதவிகளின் காலிப்பணியிடங்களும் அவற்றின் கல்வித் தகுதிக்கு ஏற்ப குரூப்4, குரூப்2 அல்லது குரூப்2ஏ தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
இதில் குரூப்1, குரூப்2, குரூப்2ஏ, குரூப்4 உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தேர்வுகளின் அறிவிப்புகள் இடம்பெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
