
திருச்சி, நவ.6- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் 4.11.2025 அன்று காலை 10 மணியளவில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பட்டிமன்றம் “இன்றைய சூழ்நிலையில் பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வளர்ந்துள்ளது! வளரவில்லை!” என்ற தலைப்பில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையேற்று தொடங்கி வைத்து சிறப்பித்த இப்பட்டிமன்ற நிகழ்ச்சியில் ‘விழிப்புணர்வு வளர்ந்துள்ளது’ என்ற அணியில் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பநர் துறை மாணவிகள் வெ.ஜாக்குலின், சீ.தர்ஷினி, ஏ.விஜயலட்சுமி ஆகியோரும், ‘வளரவில்லை’ என்ற அணியில் வி.பெஸிக்கா ஜில்ஸ், சி.பவித்ரா, ம.பேபி ஷாலினி ஆகியோரும் பங்கு கொண்டு புற்றுநோய் குறித்த பல்வேறு கருத்துகளை முன் வைத்தனர்.
இப்பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் க.கோவிந்தராஜ் நடுவராக திகழ்ந்து தம்முடைய தீர்ப்பினை அறிவிப்பதற்கு முன் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கள கங்கள், தனியார் மற்றும் அரசுத்துறையின் மூலம் மக்கள் மத்தியில் சென்றிருந்தாலும் அதனை மக்கள் எந்த அளவிற்கு உள்வாங்கி வாழ்க்கையில் செயல்படுத்துகின்றனர் என்பதனை இக்கால தலைமுறைகளுக்கு ஏற்றவாறு ஒலிஒளிக்காட்சியின் மூலம் விளக்கி, அதன் மூலம் இன்றைய சூழ்நிலையில் பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வளரவில்லை என்பதனை தமது தீர்ப்பாக அறிவித்தார்.
புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கின்ற
நவீன சிகிச்சை
நவீன சிகிச்சை
மேலும் இந்தியாவில் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய் முதலிடம் வகிக்கின்றது. 1 நிமிடத்திற்கு ஒரு பெண் இப்புற்றுநோயினால் பாதிக்கக்ககூடிய அவலநிலை உள்ளதாகவும் இதனை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்றும் உரையாற்றினார். முன்பெல்லாம் மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும்போது மார்பகத்தையே எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
தற்போது மருத்துவ தொழில் நுட்பத்துறை வளர்ச்சியினால் மார்பகத்தை இழக்காமல் கட்டியை மட்டும் நீக்கக்கூடிய சிகிச்சைகள் வந்துவிட்டன. மேலும் கீமோதெரபி (Chemotherapy) கொடுக்கப்படும்பொழுது புற்றுநோய் செல்களுடன் உடலின் நல்ல செல்களும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க Targeted therapy பயன்படுத்தப்படுவதாகவும் இதன் மூலம் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கும் நவீன வசதிகள் வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
விழிப்புணர்வு என்பது பயத்தை போக்கி தைரியத்தையும் தன்னம்பிக்கையினையும் வளர்ப்பதாக அமைய வேண்டும் என்றும், பெரியார் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் மக்கள் மத்தியில் புற்றுநோய் குறித்த சரியான விழிப்புணர்வை கொண்டு செல்வதுடன் அதற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உணவுக் கட்டுப்பாடு
இந்நிகழ்வில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம், உணவுக்கட்டுப்பாடு மற்றும் துரித உணவுகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் புற்றுநோய் அபாயங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. பட்டிமன்ற நிகழ்ச்சியில் சிறப்பாக பேசிய இரண்டு அணிகளின் தலைவர்கள் வி. பெஸிக்கா ஜில்ஸ் மற்றும் வெ. ஜாக்குலின், ஆகியோருக்கு தலா ரூபாய் 500- சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் பட்டிமன்றத்தில் உரையாற்றிய அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப்பரிசினை மருத்துவர் கோவிந்தராஜ் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
