சென்னை, நவ.6 துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் காட்பாடி தொகுதியில் தி.மு.க. நிர்வாகிகளுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தி.மு.க. நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கமாக பதில் அளித்தார்.
காட்பாடி ஒன்றியத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர், “தமிழ்நாட்டில் உள்ள இளம் தலைமுறையினரை தி.மு.க.வில் சேர்ப்பது எப்படி?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
இன்றைக்கு இளைஞர் அணியில் கிளை, வட்டம், பாகம் வாரியாக சுமார் 5 லட்சம் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு மாவட்டமாக ஒவ்வொரு நாளும் அறிவிப்பு வந்து கொண்டு இருக்கிறது. சில மாவட்டங்களின் அறிவிப்பு வந்து விட்டது. மீதமுள்ள மாவட்டங்களிலும் நிர்வாகிகளின் அறிவிப்பு விரைவில் வர இருக்கிறது.
இளைஞர் அணி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் அவர்களின் பகுதியில் உள்ள இளைஞர்களை அணுகி கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, இளைஞர்களின் ஆதரவை கழகத்திற்கு தர ஒருங்கி ணைக்க வேண்டிய பணிகளை இளைஞர் அணி தம்பிமார்கள் செய்வார்கள். அதையெல்லாம் இங்கு வந்திருக்கின்ற ஒன்றிய கழக செயலாளர்கள், கழகத்தின் நிர்வாகிகளாகிய நீங்கள் இளைஞர் அணியை வழி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இ்ப்போதே களப்பணியை தொடங்குங்கள்
தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள்தான் இருக்கின்றன. இப்போதே உங்கள் களப்பணியைத் தொடங்குங்கள். நம்முடைய தலைவர் 200 தொகுதிகள் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு கொடுத்து உள்ளார். வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு என்று சொல்லி இருக்கிறார். அது பத்தாது. நாம் அடுத்த 5 மாதங்கள் சிறப்பாக பணியாற்றினோம் என்றால், நமக்குள் இருக்கின்ற மனக்கசப்புகளை மறந்து, வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று பணியாற்றினோம் என்றால் 200 இல்லை 200க்கும் அதிகமான தொகுதிகளில் நம் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
அதற்கான தொடக்கமாக இந்த காட்பாடி தொகுதியின் வெற்றியை நீங்கள் அமைத்துக்காட்ட வேண்டும். கழகம் 7-ஆவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், தொடர்ந்து 2-ஆவது முறையாக நம் தலைவர் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்றால் நாம் அனைவரும் களத்தில் இறங்கி மக்களை சந்தித்து நம் பிரசாரத்தை இன்னும் அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
