‘பெங்களூருவில் வீடு வாங்கிய ஒரு பார்ப்பன இணையர் நடத்திய தங்கள் வீட்டு ‘கிரகப்பிரவேச’ யாகத்தின் போது, யாகம் செய்யவந்த பார்ப்பனர் உண்மையான பசுமாட்டுக்குப் பதிலாக, ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்கும் ‘ரோபோ’ பசுமாட்டை பயன்படுத்திய பித்தலாட்டம் அரங்கேறியுள்ளது.
சாதாரணமாக, ‘கிரகப்பிரவேச’த்தின் சடங்காக, புதிய வீட்டிற்குள் பசுமாட்டை அழைத்துச் சென்று வரச்செய்வது ஒரு விதமான பழக்கம். இந்த மாட்டுக்காக, பசு மாட்டு உரிமையாளருக்குக் குறைந்தது ரூ.500 முதல் ரூ.1000 வரை கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், அங்கோ…
யாகம் செய்ய வந்த பார்ப்பனர், தன் பையோடு கொண்டுவந்த ‘ரோபோ கோமாதா’வை எடுத்து, புல் சார்ஜ் போட்டு, ரிமோட் மூலம் வீடு முழுவதும் நடக்கவிட்டு, சடங்குகளை ‘ேக்ஷமமாக’ நடத்தி… (!) முடித்தார். இதனால் மாட்டுக்காரருக்குக் கொடுக்க வேண்டிய பணமும் இவர் பையிலே!
பக்தி, அனுஷ்டானமெல்லாம் பணத்துக்கு முன் பஞ்சாய்ப் பறக்கிறது!
சாதாரண ஓட்டு வீட்டு அக்ரகாரப் பார்ப்பான் கிரகப்பிரவேசம் செய்ய ரூ5,000 கேட்கும் நிலையில், ஒரு பங்களா பார்ப்பான் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார். அதிலும், அதிக கிராக்கி (‘பிஸி செட்யூல்ட்’) என்றால் முழுத் தொகையையும் கொடுத்த பிறகுதான் தேதி உறுதியாகும்.
இப்போது, மாட்டுக்காரருக்குக் கொடுக்க வேண்டிய தொகையைக்கூட மிச்சப்படுத்துவதைப் பார்க்கும்போது, “அடுத்ததாக, ரோபோ பார்ப்பான் வரும் வரை காத்திருக்கலாம்!” என சமூக வலைதளங்களில் நையாண்டிக் கருத்துகள் பரவி வருகின்றன.
கரோனா முழு அடைப்பின் போது பல பார்ப்பனர்கள் காணொலியிலும், கூகுள் வாயிலாகவும் அமெரிக்காவில் இருக்கும் மணமக்களுக்கு மந்திரம் ஓதி, திருமணம் செய்து காசு பார்த்தார்கள். முழு அடைப்பின் போதும் பணம் பார்க்கும் பலே உத்தியல்லவா!
தற்போது ‘சிறுவர்கள் விளையாடும் ரோபோ பசு மாடு’களை வைத்தும் வியாபாரம் பார்க்கிறார்கள்.
‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை’ என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு ஒரு மனதாக சட்டம் நிறைவேற்றினால், ‘ஆகமத்துக்கு விரோதம்; சம்பிரதாயங்களுக்கு விரோதம்’ என்று கூறி, உச்சநீதிமன்றத்திற்குப் படையெடுக்கும் பார்ப்பன சக்திகள், ‘கோமாதா’ என்று பயபக்தியோடு அழைத்துக் கொண்டு, அதே நேரத்தில் உண்மையான பசுவுக்குப் பதிலாக ‘எந்திரப் பசுவை’ப் (ரோபோ பசு மாட்டை) பயன்படுத்துகிறார்கள் என்றால், இது எத்தகைய பித்தலாட்டம்!
தங்கள் சொந்த நலனுக்காகத்தான் கடவுள், மதம், சாஸ்திரம், சடங்குகள் என்பது விளங்கவில்லையா?
வைத்தால் குடுமி! சிரைத்தால் மொட்டை என்பது இதுதானோ!!
